சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிட கழகம் சார்பில் ”96 ஆவது ஆண்டு பெரியார் பதிப்பகங்கள்” என்னும் தலைப்பில் கருத்தரங்கமும், கண்காட்சியும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேசிய திராவிட கழக தலைவர் ஆசிரியர் கி வீரமணி,” மக்களுக்கான ஆட்சியை நடத்தி வரும் திராவிட மாடல் ஆட்சியை அழிக்க முடியாது என்பதை எதிர்க்கட்சியின் உணர்ந்துவிட்டனர். இதனால்தான் ’முருகா’ என இவர்கள் இன்று முருகனிடம் சென்று இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டு மக்களின் முழு ஆதரவும் திமுக கூட்டணிக்கு உள்ளது. இதனால் மக்கள் மீது நம்பிக்கை வைக்காமல் கடவுளிடம் சென்றுள்ளனர். கடந்த தேர்தலில் வேலை தூக்கிச் சென்றனர். ஆனால் அவர்களுக்கு முருகன் கை கொடுக்கவில்லை. அப்போது கைகொடுக்காத முருகன் இப்போதும் கை கொடுக்க மாட்டார்.
மதுரையில் நடைபெற்ற மாநாட்டினால் அவர்களுக்கு எந்த பலனும் கிடைக்காது. முழுக்க முழுக்க அரசியலுக்கன வித்தை இது. இந்த மாநாட்டின் மூலம் ஆறுபடை வீடுகளுக்கு செட் போட்டவர்களுக்குதான் நல்ல வருமானம் கிடைத்துள்ளது.
திமுக கூட்டணியில் விரிசல் என்று ஊடகத்தினர் சொல்கின்றனர். எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்று சேர்ந்த கூட்டணி இது. இன்று வரை உறுதியுடன் இருக்கிறது. இந்த கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது. திமுக ஆட்சி மீது எத்தனை அவதூறுகளை நீங்கள் வீசினாலும் அது எல்லாம் வயலுக்கு வீசப்படும் உரமாகவே மாறும்” என தெரிவித்துள்ளார்.