உலக வங்கி நிதி உதவியுடன் தொடங்கப்பட்ட தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம் ரூ.2,961.79 கோடி செலவில் 2,626 ஏரிகள், 355 அணைக்கட்டுகள், 5,026 கிலோமீட்டர் விநியோகக் வாய்க்கால்கள் மற்றும் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் அறிக்கை :
நீர் மேலாண்மையை மேம்படுத்துதல் திட்டம் தமிழ்நாடு அரசின் ஏழு துறைகள் மற்றும் மதிப்புமிக்க மூன்று பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைத்து ஒரு கூட்டு அணுகுமுறையுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவை, நீர்வளம், வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள், வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறைகள் ஆகியவை ஆகும். கூடுதலாக, இத் திட்டம் 110 ஆண்டுகள் பழமையான தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை மற்றும் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்திக் கொள்கிறது.
இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் நீர்ப்பாசன உள்கட்டமைப்பை நவீனமயமாக்குதல், நீர் பயன்பாட்டு திறனை மேம்படுத்துதல் மற்றும் விவசாய உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மொத்தம் ₹2,961.79 கோடி (70% உலக வங்சி நிதி மற்றும் 30% தமிழ் நாடு அரசு நிதி)செலவில், இத் திட்டம் வெற்றிகரமாக 2,626 ஏரிகள், 355 அணைக்கட்டுகள், 5,026 கிலோமீட்டர் விநியோகக் வாய்க்கால்கள் மற்றும் கால்வாய்களை சீரமைத்துள்ளது. கூடுதலாக, 94 நீர் செறிவூட்டு கிணறுகள், 107 கிலோமீட்டர் விவசாய வாய்க்கால் கரைகள் உட்பட 1,25,000 ஹெக்டேர் பரப்பளவில் பாசனப் பகுதி மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இத்திட்டம் 34 மாவட்டங்களில் உள்ள 16 இலட்சத்திற்க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இந்த விரிவான முயற்சிகள் பயனளித்துள்ளதுடன், அப்பகுதியின் விவசாய நிலப்பரப்பு மற்றும் நீர் மேலாண்மை நடைமுறைகளில் இத்திட்டத்தின் குறிப்பிடத்தக்க தாக்கத்தை எடுத்துக் காட்டுகிறது.
திருந்திய நெல் சாகுபடி மற்றும் நீர் மறைய நீர் கட்டுதல் போன்ற நிலையான நீர்ப்பாசன நடைமுறைகளை செயல்படுத்துவதன் மூலமாக இத்திட்டம் நீர் பயன்பாட்டு திறனை கணிசமாக மேம்படுத்தி மீத்தேன் வெளியேற்றத்தை 25-40 % குறைத்து விவசாய உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும், 13,047 ஹெக்டேரில் சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர்ப்பாசன முறைகள் மூலம், 20-48% நீர் சேமிக்கப்படுவதுடன் சாகுபடி செலவை 15-30% குறைக்கிறது.
இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு விவசாயிகள் பாசன அமைப்புகள் மேலாண்மைச் சட்டம், 2000-க்கு இணங்க, 34 மாவட்டங்களில் 4,000க்கும் மேற்பட்ட நீரினைப் பயன்படுத்துவோர் சங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன. இச்சட்டத்தின் மூலம் நீர் பயனாளர்களுக்கு நீர்பாசன அமைப்புகளின் மேலாண்மை மற்றும் பராமரிப்பில் பங்கேற்க்கவும், நிலையான நீர்பயன்பாட்டை உறுதி செய்யவும், விவசாய நடைமுறைகளின் ஒட்டுமொத்த செயல் திறனை மேம்படுத்தவும் அதிகாரம் அளிக்கிறது.
இந்தத் திட்டம் சந்தை இணைப்புகளை கணிசமாக வலுப்படுத்தி, ₹94.95 கோடி மதிப்பிலான 41,000 மெட்ரிக் டன் விளைபொருட்களை ஒருங்கிணைத்துள்ளது. இத்திட்டம் விவசாயிகளுக்கு சேமிப்பு மற்றும் வர்த்தக முயற்சிகள் மூலம் அவர்களின் சந்தை அணுகல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது. நிலையான மீன்வளர்ப்பு நடைமுறைகள் 27,264 ஹெக்டேர்களில் கூடுதலாக விரிவுபடுத்தப்பட்டுள்ளதன் மூலம், மீன் உற்பத்தி அதிகரித்து, மீன் வளர்ப்பாளர்களின் வருமானம் அதிகரித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட TANUVAS GRAND மூலம் கால்நடைகளின் செரிமானத் திறனை மேம்படுத்தி, மீத்தேன் உமிழ்வு ஒரு நாளைக்கு 18.82% ஆக குறைக்கப்பட்டு அதன் மூலம் பால் உற்பத்தியை ஒரு நாளைக்கு 711.90 மிலி / கால்நடை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 9,50,850 செயற்கை கருவூட்டல் மற்றும் 6,244 ஹெக்டேர் மாட்டுத் தீவனப் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. மேலும், 57,450 ஊட்டச்சத்துக் கலவை விநியோகம் மற்றும் 2,14,854 உயர் தகுதி வாய்ந்த பசுக் கன்றுகளின் பெருக்கம் ஆகியவற்றின் காரணமாக பால் உற்பத்தியை ஒரு நாளைக்கு 5.0 - 6.5 லிட்டர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவின் மூலம் இயங்கும் எம்-வேளாண்மை செயலியை உபயோகிப்பதன் மூலம் விவசாயிகள் விரைவான மற்றும் துல்லியமான தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெறுகின்றனர். மேலும், TNIAMP நிலக் குறியீடு செயலி திட்டத்தின் செயல்பாடுகளை புவிசார் குறியீட்டுடன் புகைப்படங்களை சேகரிக்கப் பயன்படுகிறது.
ஒன்றிய அரசின், ஒன்றிய நீர்பாசன மற்றும் மின் வாரியத்தால் (CBIP) வழங்கப்படும் "ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மையில் சிறந்து விளங்குதல்" 2024-ஆம் ஆண்டிற்கான தேசிய விருது, உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்திற்கு (TNIAMP) வழங்கப்பட்டுள்ளது. இவ்விருது, இத்திட்டத்தின் வெற்றிக்கான சான்றாக விளங்குவதுடன், முக்கியமான நீர் ஆதார சவால்களை எதிர்கொள்வதிலும், நிலையான விவசாய வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் இதன் வெற்றியை பறைசாற்றுகிறது. இத்திட்டம் நீர் வள மேலாண்மையில் சிறந்து விளங்குவதற்காக மதிப்புமிக்க தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது.
இந்த சாதனைகள், காலநிலை மாற்றத்திற்கான தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து, கார்பன் உமிழ்வுகளை குறைப்பதற்கான திட்டங்களை செயல்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுவதோடு, நீர் மேலாண்மை நடைமுறைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, ஒரு புதிய கட்டத்தில் நுழைவதற்கான திட்ட வரைவுகளை வடிவமைப்பதன் மூலம், எதிர்காலத்தில் மேம்படுத்தப்பட்ட நீர்ப் பாசனத்திற்கான மாற்றங்களை உருவாக்கிட வழிவகுக்கும்.
உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் (TNIAMP) செயல்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நம்ம சென்னை செல்ஃபி பாயிண்டில் கிராமிய கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. பாரம்பரிய நடனங்கள் மூலம், இந்த நிகழ்ச்சி நீர் பாதுகாப்பு, மேம்பட்ட நீர்ப்பாசன நடைமுறைகள் மற்றும் இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் நலனை மேம்படுத்துதல் பற்றிய செய்திகளை திறம்பட தெரிவித்தது.