தமிழ்நாட்டில் கீழடி எனும் வரலாற்றுத் தொல் நகரம் கண்டறிய நடத்தப்பட்ட, தொல்லியல் ஆய்வின் அறிக்கையை அமர்நாத் இராமகிருஷ்ணன் 2023 ஜனவரி மாதம் ஒன்றிய தொல்லியல் துறைக்கு சமர்பித்தார்.
ஆனால், ஒன்றிய தொல்லியல் துறை அந்த ஆய்வறிக்கையை வெளியிடவில்லை. இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பபட்ட போது “விரைவில் வெளியிடப்படும்” என்று தொல்லியல் துறையால் உறுதி மொழி அளிக்கப்பட்டது. ஆனாலும், இப்பொழுது வரை அறிக்கை வெளியிடப்படவில்லை.
அதேபோல்,முதல் மற்றும் 2–ஆம் கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையிலும் வழக்கு தொடரப் பட்டது. உயர்நீதிமன்றத்தில் கடந்த 2024 பிப்ரவரியில் விசாரணைக்கு வந்தபோது, 9 மாதத்தில் அறிக்கை வெளியிடப்படும் என ஒன்றிய அரசு கூறியிருந்தது. 16 மாதங்கள் ஆன பிறகும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு, கீழடி அறிக்கையில் திருத்தம் தேவை என ஒன்றிய தொல்லியல் துறை, அமர்நாத் இராமகிருஷ்ணனின் அறிக்கையை திருப்பி அனுப்பியுள்ளது. இதற்கு அமர்நாத் இராதாகிருஷ்ணன், தான் சமர்ப்பித்த அறிக்கை சரியாகவே உள்ளது. திருத்தம் தேவையில்லை என தெளிவாக கூறிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, “கீழடி குறித்த அறிக்கை அறிவியல் அடிப்படையிலும், தொழில் நுட்ப அடிப்படையிலும் நிரூபிக்கப்படவில்லை” என ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியுள்ளார்.
இந்த நிலையில்,போலி அறிவியலைப் போற்றிடும் நீங்களா அறிவியல் ஆதாரம் பற்றிப் பேசுவது ? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”கீழடி அகழாய்வு அறிக்கை விசயத்தில்அறிவியல் பூர்வமான ஆதராங்கள் வேண்டும் என்று இப்போது கேட்கும் நீங்கள் , ஏன் இதற்கு முன்பு நீதிமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ இதைச் சொல்லவில்லை ?
போலி அறிவியலைப் போற்றிடும் நீங்களா அறிவியல் ஆதாரம் பற்றிப் பேசுவது ?. இது வெறும் அறிக்கை வெளியிடும் பிரச்சனை அல்ல; உண்மைக்கும் கயமைக்கும் இடையில் நடக்கும் போராட்டம். இதில் உண்மையே வெல்லும்" என தெரிவித்துள்ளார்.