தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று (16.6.2025) தேனி மாவட்டம் வீரபாண்டி அண்ணாசாலை அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.
தேனி மாவட்டம், தேனி ஊரகம் வீரபாண்டி அண்ணாசாலை அங்கன்வாடி மையத்திற்கு சென்ற தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அங்கன்வாடியில் கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், அங்கன்வாடி குழந்தைகள் ஆகியோரிடம் கலந்துரையாடினார். கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சத்து மாவு சரியாக வழங்கப்படுகின்றதா என்றும், அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டுள்ளதா?, மதிய உணவு சரியாக வழங்கப்படுகின்றதா என்றும் கேட்டறிந்தார்.
குழந்தைகளின் உடல்நலம் குறித்து மருத்துவ குழுவினர் பரிசோதனை மேற்கொள்கின்றனரா, குழந்தைகளுக்கு பிறவி குறைபாடுகள் ஏதேனும் கண்டறியப்பட்டுள்ளதா என்றும் அங்கன்வாடி பணியாளரிடம் கேட்டறிந்தார்.
குழந்தைகளின் எடை, உயரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றதா? என்றும் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் முன்பருவக் கல்வி குறித்து கேட்டறிந்து, ஆய்வு மேற்கொண்டார். அங்கன்வாடி குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் ஆடல், பாடலுடன் கூடிய முன்பருவக் கல்வி குறித்து குழந்தைகளுடன் கலந்துரையாடி, அவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பாடல்களை ஆடிக்கொண்டே பாடுதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்து பாராட்டினார்.
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கர்ப்பகால மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது குறித்து தாய் சேய் நல அட்டையில் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்தார். மேலும் அங்கன்வாடியில் சத்துமாவு, உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் இருப்பு குறித்து பதிவேடுகளை பார்வையிட்டும், குழந்தைகள் கழிப்பறை நன்றாக பராமரிக்கப்பட்டு வருகின்றதா என்றும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களிடமிருந்து இன்று காலை பெற்ற கோரிக்கை மனுக்களுக்கு தீர்வாக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட அட்டைகளை 5 நபர்களுக்கும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 நபர்களுக்கு சக்கர நாற்காலிகளையும், 2 நபர்களுக்கு தசை பயிற்சி செய்வதற்கான உபகரணங்களையும் (Standing Frame), வருவாய்த்துறையின் சார்பில் 1 நபருக்கு நலத்திட்ட உதவியும் என மொத்தம் 10 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச் செல்வன், சட்டமன்ற உறுப்பினர்கள் என்.இராமகிருஷ்ணன், ஆ.மகாராஜன், கே.எஸ்.சரவணக்குமார், சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ்,இ,ஆ.ப., கூடுதல் செயலாளர் ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங்,இ.ஆ.ப., உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.