சென்னை மாநகராட்சி அலுவலகம் ரிப்பன் கட்டிட வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தூய்மை இயக்கத்தின் சார்பில் பல்வேறு வகையான குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்காக தனித்தனியாக சேகரிக்கும் நடவடிக்கைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டங்களில் சேரும் குப்பைகளின் அளவு, தரம், மறுசுழற்சி செய்யும் குப்பைகள் மற்றும் அதை தரம் பிரித்தல், அதை அகற்றும் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மாநகராட்சி ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறையில் காணொளி காட்சி வாயிலாக பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கடந்த சட்டப்பேரவை தொடரின் போது தமிழகத்தில் பல ஆண்டுகளாக குப்பைகள் அள்ளப்படாமல் இருக்கிறது. அந்த குப்பை மேலாண்மையை சரி செய்ய வேண்டும் என்பதற்காக தூய்மை மிஷன் என்ற திட்டத்தை முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, சிறப்புத் திட்ட செயலாகத்கதுறை சார்பில் மானிய கோரிக்கையில் அறிவித்தோம். இதற்காக முதலமைச்சர் 10 கோடி ஒதுக்கீடு செய்ததாகவும் கூறினார்
அதன் முதல் படியாக உலக சுற்றுச்சூழல் தினமான இன்று, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் உள்ள 1100 அரசு அலுவலகங்களில் குப்பைகளை கண்டறிந்து சேகரிக்கும் இந்த மாபெரும் திட்டத்தை துவங்கியிருக்கிறோம். இந்த அனைத்து பணிகளையும் கண்காணிக்கவும் மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் பேசுவதற்கும், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் "வார் ரூம்" தயார் செய்திருக்கிறோம். 2 நாட்களில் மட்டும் 250 டன் குப்பை சேகரிக்கப்பட்டிருக்கிறது. சட்ட விதிகளின்படி அந்த குப்பைகளை அகற்ற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியருக்கும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
அடுத்த கட்டமாக கிராம பஞ்சாயத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் அரசு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளிலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும், அனைத்து அரசு அலுவலகங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்களை திட்டத்தில் பங்கு பெறச் செய்து தூய்மையான தமிழ்நாட்டை நாம் அனைவரும் சேர்ந்து உருவாக்குவோம்.
இந்தத் திட்டத்தை இப்போதுதான் துவங்கி இருக்கிறோம் இதை நீண்ட காலத்திட்டமாக கொண்டு செல்ல வேண்டும். நம்மிடமிருந்து இந்த முயற்சியை துவங்க வேண்டும் . ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரிடமும் நானும் முதன்மை செயலாளரும் பேசி இருக்கிறோம். இதைத்தொடர்ந்து செய்தால்தான் பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் முடியும். கண்முன்னே மாற்றத்தை காட்டினால் பொதுமக்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள். தூய்மை மிஷன் திட்டம் முழுக்க முழுக்க மாநில அரசு & முதலமைச்சர் கொடுத்தது என்றும் ஒரே நாளில் அகற்றி விட முடியாது சிறிது சிறிதாக அரசு பள்ளிகள் கல்லூரிகள் என ஒவ்வொரு இடங்களிலும் இதை செயல்படுத்த உள்ளோம்" என தெரிவித்தார்.