தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது, பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிப்பது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய 10 மசோதாக்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன.
இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டதால், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சட்டப்பேரவையில் மறுநிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்ட 10 மசோதாக்களுக்கும் தனது சிறப்பு அதிகாரம் மூலம் ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, இந்த 10 மசோதாக்களும் சட்டங்களாக மாற்றப்பட்டு, அரசிதழ்களில் வெளியிடப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தன.
இதனிடையே, துணைவேந்தர்களை நியமிக்கும் சட்டப் பிரிவுகளை எதிர்த்து பாளையங்கோட்டையைச் சேர்ந்த பாஜக வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.
கடந்த மாதம் இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கை அவசர அவசரமாக விசாரிப்பது உச்ச நீதிமன்றத்தையே அவமதிப்பதுபோல உள்ளதாக வாதிட்டார்.
இருப்பினும், துணைவேந்தர்கள் நியமன சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், துணைவேந்தர்கள் நியமன சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
அதில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு இயற்கை நீதிக்கு எதிரானது என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆளுநர் நடவடிக்கை காரணமாக துணைவேந்தர்கள் நியமிக்கப்படாமல் இருந்ததாகவும், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மூலம் அதற்கு விடிவு ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சட்டங்கள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் உயர்நீதிமன்றம் இதற்கு தடை விதித்தது தவறானது என்று மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.