முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுரைக்கிணங்க முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102ஆம் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள “தமிழ்ச் செம்மொழி” குறித்த மாபெரும் கண்கவர் கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்காக 03.6.2025 முதல் 09.06.2025 வரையிலான ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (3.6.2025) முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102ஆம் பிறந்த நாளானசெம்மொழி நாள் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்ச் செம்மொழி நாளினை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அரிய ஒளிப்படங்களின் தொகுப்பு, தமிழ்ச் செவ்வியல் முதல் பதிப்பு நூல்கள், காலந்தோறும் தமிழ் மற்றும் தமிழ் மொழியின் வரலாறு, தமிழர் தொன்மை குறித்த ஓலைச்சுவடிகள் அடங்கிய “தமிழ்ச் செம்மொழி” கண்காட்சியினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
மேலும், இக்கண்காட்சியின் சிறப்புகளை பொதுமக்கள் அனைவரும் அறிந்து பயன்பெறும் வகையில் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்குமாறு தெரிவித்துள்ளார்கள். இக்கண்காட்சியில் செம்மொழியான தமிழின் வரலாறு, சிந்துவெளி வரிவடிவங்களும் தமிழ்நாட்டு குறியீடுகளும், தமிழகத்தில் தமிழில் எழுத்துப் பொறிப்புக் கிடைத்த இடங்கள், சங்க கால கல்வெட்டுகள், காலம் தோறும் தமிழ், பானை ஓடுகளில் தமிழில் எழுத்துக்கள் பற்றிய குறிப்பு, வைகை நதி வரும் தங்கத்தில் தமிழ் எழுத்துக்கள் பற்றிய குறிப்பு , திருவாலங்காடு செப்பேடுகள் பற்றிய குறிப்பு, துண்டுக் கல்வெட்டு பற்றிய குறிப்பு, முதலாம் ராஜராஜ சோழன் 23ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு பற்றிய குறிப்பு, வீரசோழபுரம் நடுகல் கல்வெட்டு வீர மரபின் நினைவுச் சின்னம் பற்றிய குறிப்பு, கீழ் முக்கூட்டூர் நடுகல் கல்வெட்டு வீர மரபின் அரிய சான்று பற்றிய குறிப்பு, கலைஞர் கருவூலம்(தொடுதிரை வசதியுடன்) , நாட்டுடைமை செய்யப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூல்கள் பட்டியல் மற்றும் தமிழர் தொன்மை, தமிழ் செவ்வியல் நூல்களின் முதல் அச்சுப் பதிப்புகள் (காலம் 1812 ஆம் ஆண்டு முதல் 1935 வரை), கடந்த நான்காண்டுகளில் (மே 2021 முதல் மே 2025 வரை) தமிழ் வளர்ச்சித் துறை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வாயிலாக வெளியிடப்பட்ட தமிழ் செவ்வியல் நூல்கள் கண்காட்சியில் அணி செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, சென்னை கலைவாணர் அரங்கம் முதல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்ச் செம்மொழி குறித்த கண்கவர் கண்காட்சி 3.6.2025(செவ்வாய்க்கிழமை) முதல் 9.6.2025 (திங்கட்கிழமை) வரை (ஒரு வார காலத்திற்கு) நீட்டிக்கப்படுகிறது. இதனை, பொதுமக்கள், பள்ளி/கல்லூரிமாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழறிஞர்கள், வரலாற்று அறிஞர்கள் எவ்வித கட்டணமுமின்றி நாள்தோறும் காலை 10.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை பார்வையிட்டு பயன்பெறலாம்"என்று அதில் கூறப்பட்டுள்ளது.