தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்டம் : தமிழ்நாடு அரசு விதித்த கட்டுப்பாடுகள் செல்லும்... சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

ஆன்லைன் சூதாட்டம் : தமிழ்நாடு அரசு விதித்த கட்டுப்பாடுகள் செல்லும்... சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த, கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ், ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாட ஆதார் இணைப்பு கட்டாயமாக்கியும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாட்டுக்கு யாரையும் அனுமதிக்க கூடாது என நேர கட்டுப்பாடும் விதித்தும் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன.

கடந்த பிப்ரவரி மாதம் கொண்டுவரப்பட்ட இந்த விதிகளை எதிர்த்து, ப்ளே கேம்ஸ் 24*7 பிரைவேட் லிமிட்டெட், ஹெட் டிஜிட்டல் வொர்க்ஸ், எஸ்போர்ட் ப்ளேயர்ஸ் நலச்சங்கம் உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

ஆன்லைன் சூதாட்டம் : தமிழ்நாடு அரசு விதித்த கட்டுப்பாடுகள் செல்லும்... சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வு, தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள இந்த விதிகளை செல்லும் என தீர்ப்பளித்துள்ளது. அந்த தீர்ப்பில், ரம்மி, போக்கர் போன்ற பணம் வைத்து விளையாடும் விளையாட்டுக்கள் பொது சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளதால், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் விதிகள் ஒன்றிய அரசின் விதிகளுக்கு முரணாக இல்லை. நிபுணர் குழுவின் அறிக்கையில் அடிப்படையில் ஆன்லைன் விளையாட்டுக்கள் ஏற்படுத்தும் எதிர்மறை பாதிப்புகளை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது இந்த ஒழுங்குமுறை விதிகள் உடனடி தேவையாகிறது எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவின் குறிப்பிட்டுள்ளனர்.

ஆன்லைன் சூதாட்டம் : தமிழ்நாடு அரசு விதித்த கட்டுப்பாடுகள் செல்லும்... சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

ஒன்றிய அரசின் தகவல் தொழில்நுட்ப விதிகள் இன்னும் அமலுக்கு வராத நிலையில், வெற்றிடத்தை நிரப்பும் வகையில் மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தனது ஆளுமைக்குட்பட்ட பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளை முறைப்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆன்லைன் விளையாட்டுக்களால் தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால் பொது சுகாதாரத்துடன் நேரடி தொடர்பு கொண்ட இந்த ஆன்லைன் விளையாட்டுகளை அரசு முறைப்படுத்த முடியும். மக்கள் தீவிரமான மன மற்றும் உடல் ரீதியிலான தாக்கங்களுக்கு உள்ளாகும் போது அரசு மௌனம் காக்க முடியாது எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அதோடு இந்திய அரசியலமைப்புச் சட்டம் தொழில் புரியும் உரிமை வழங்கி உள்ள போதிலும், அதற்கு நியாயமான கட்டுப்பாடுகளும் உள்ளன. தொழில் புரியும் உரிமையை மக்கள் வாழ்வுரிமையை பாதிக்கும் செயல்களை செய்ய அனுமதிக்க முடியாது. மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது என கூறி இந்த வழக்குகளை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்

banner

Related Stories

Related Stories