தமிழ்நாடு

கலைஞர் செம்மொழித் தமிழ் விருது : தாயம்மாள் அறவாணனுக்கு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கலைஞர் செம்மொழித்தமிழ் விருதை முனைவர் தாயம்மாள் அறவாணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

கலைஞர் செம்மொழித் தமிழ் விருது : தாயம்மாள் அறவாணனுக்கு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (3.6.2025) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளான செம்மொழிநாள் விழாவில், 2025-ஆம் ஆண்டுக்கான கலைஞர் செம்மொழித்தமிழ் விருது, செம்மொழி நாள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள்

5 பேருக்கு உயர்த்தப்பட்ட உதவித் தொகை ஆணைகளை வழங்கி, தமிழ்நாடு அரசின் நான்காண்டு சாதனை மலரினையும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழ் வினையடிகள் – வரலாற்று மொழியியல் ஆய்வு மற்றும் சங்க இலக்கியச் சொல்வளம் ஆகிய நூல்களையும் வெளியிட்டார்.

தொன்மை, தனித்தன்மை, பொதுமைப்பண்பு, நடுவுநிலைமை, பலமொழிகளுக்குத் தாய், பட்டறிவு வெளிப்பாடு, பிறமொழித் தாக்கமின்மை, இலக்கிய வளம், உயர் சிந்தனை, கலை, இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு-பங்களிப்பு, மொழிக்கோட்பாடு ஆகிய தகுதிப்பாடுகளைக் கொண்ட தமிழுக்கு செம்மொழித் தகுதி பெற்றுதந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெருமையைப் போற்றிடும் வகையில் அவர் பிறந்த நாளான ஜுன் திங்கள் 3 ஆம் நாள் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆண்டுதோறும் செம்மொழிநாள் விழாவாகக் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பின்படி, இன்று (3.6.2025) சென்னை, கலைவாணர் அரங்கில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளான இன்று “செம்மொழி நாள் விழா” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் இன்றையதினம் நடைபெற்றது.

இவ்விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்மொழி உருவாக்கம், தொல்லியல் சான்றுகள், செம்மொழித் தகுதி, 1815 முதல் 1950 வரை வெளிவந்த செவ்வியல் நூல்கள் 2021 முதல் 2025 வரை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தமிழ் வளர்ச்சித் துறையால் வெளியிடப்பட்ட நூல்கள், தமிழ் இணையக் கல்விக் கழகத்தால் உருவாக்கப்பட்ட கலைஞர் கருவூலம் மற்றும் ஒளிப்படங்கள் கொண்டு கலைவாணர் அரங்கத்தில் அமைக்கப்பட்ட கண்காட்சியைப் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து, “முத்தமிழறிஞரின் முத்தமிழ்” இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சியும், “எல்லோர்க்கும் எல்லாமுமாய்” என்ற தலைப்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் குறித்த ஆவணப்படமும், செய்தித்துறையால் உருவாக்கப்பட்ட “செம்மொழி நாள்” குறித்த குறும்படமும் திரையிடப்பட்டன.

கலைஞர் செம்மொழித் தமிழ் விருது

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முனைவர் தாயம்மாள் அறவாணன் அவர்களுக்கு, 2025-ஆம் ஆண்டுக்கான கலைஞர் செம்மொழித் தமிழ் விருதினையும், விருதுத் தொகையாக 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையும் வழங்கி சிறப்பித்தார்.

முனைவர் தாயம்மாள் அறவாணன் அவர்கள் 23.05.1944-இல் கன்னியாகுமரி சேந்தன்புதூர் என்ற ஊரில் பிறந்தவர். சுசீந்திரம் பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றவர். தென்திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் புகுமுக வகுப்பில் சேர்ந்து, அதே கல்லூரியில் தமிழில் இளங்கலைப் பட்டமும், கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலைப் பட்டமும் பெற்றவர். 'குழந்தை இலக்கியம் - ஒரு பகுப்பாய்வு’ தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டத்தைப் பெற்ற சிறப்புக்குரியவர்.

செம்மொழிநாள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள்

பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள்

செம்மொழி நாளையொட்டி, தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில் நடத்தப்பெற்ற பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்ற திண்டுக்கல் மாவட்டம், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவன் சா. முஹம்மது அர்ஷத்துக்கு 15,000/- ரூபாயும், இரண்டாம் பரிசு பெற்ற விழுப்புரம் மாவட்டம், பெரியதச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவி பா. தமிழரசிக்கு 10,000/- ரூபாயும், மூன்றாம் பரிசு பெற்ற தருமபுரி மாவட்டம், அரசு மாதிரிப்பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவி மு.கோகிலாவுக்கு 7,000/- ரூபாயும்;

கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மதுரை மாவட்டம், பாரதியார் பதின்ம மேல்நிலைப் பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவன் செ. அழகுபாண்டிக்கு 15,000/- ரூபாயும், இரண்டாம் பரிசு பெற்ற கோயம்புத்தூர் மாவட்டம், விசயலெட்சுமி பதின்ம மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு மாணவன் ர. தரணீஷ்க்கு 10,000/- ரூபாயும், மூன்றாம் பரிசு பெற்ற தஞ்சாவூர் மாவட்டம், ஸ்ரீ சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு மாணவி பி. கீர்த்தனாவுக்கு மூன்றாம் பரிசாக 7,000/- ரூபாயும்;

கலைஞர் செம்மொழித் தமிழ் விருது : தாயம்மாள் அறவாணனுக்கு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கலைஞர் செம்மொழித் தமிழ் விருது : தாயம்மாள் அறவாணனுக்கு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள்

கல்லூரி மாணாக்கர்களுக்கு மாநில அளவில் நடத்தப்பெற்ற பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கன்னியாகுமரி மாவட்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி நா.சீ. நந்தனாவுக்கு 15,000/- ரூபாயும், இரண்டாம் பரிசு பெற்ற தருமபுரி மாவட்டம், வருவான் வடிவேலன் கல்வியியல் கல்லூரி மாணவர் த. தங்கமுத்துக்கு 10,000/- ரூபாயும், மூன்றாம் பரிசு பெற்ற புதுக்கோட்டை மாவட்டம், கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவி வீ. ஜெயலட்சுமிக்கு ரூ.7,000/- ரூபாயும்;

கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற திண்டுக்கல் மாவட்டம், ஜி.டி.என். கலைக் கல்லூரி மாணவர் க. விஜயகாந்த்துக்கு 15,000/-ரூபாயும், இரண்டாம் பரிசு பெற்ற தென்காசி மாவட்டம், ஸ்டெல்லா மேரீஸ் கல்வியியல் கல்லூரி மாணவி இல. இலக்கியாவுக்கு 10,000/- ரூபாயும், மூன்றாம் பரிசு பெற்ற திருநெல்வேலி மாவட்டம், யுனிவர்ஸ் கல்வியியல் கல்லூரி மாணவி அ. பிரியதர்ஷினிக்கு 7,000/- ரூபாயும், பாராட்டுச் சான்றிதழுடன் வழங்கப்பட்டன.

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகை உயர்த்தப்பட்டதற்கான அரசாணை

தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக தற்போது மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை தமிழறிஞர்களுக்கு ரூ.4,500/-லிருந்து ரூ.7,500/-ஆகவும், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ரூ.3,500/-லிருந்து ரூ.7,500/-ஆகவும், எல்லைக்காவலர்களுக்கு ரூ.5,500/-லிருந்து ரூ.7,500/-ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என 2025-2026ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தற்போது உதவித்தொகை பெற்று வரும் தமிழறிஞர்கள் 217 பேருக்கும், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 621 பேருக்கும், எல்லைக்காவலர்கள் 60 பேர் என மொத்தம் 898 பேருக்கும் உயர்த்தப்பட்ட வீதத்தில் உதவித்தொகை பெற ஒரு ஆண்டிற்கு ரூ.3,90,60,000/- தொடர் செலவினமாக நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம், ம. சக்கரவர்த்தி, இரா. மோகனசுந்தரம், ப. பானுமதி (எ) ஆதிரா முல்லை, அ. இதயகீதம் இராமானுஜம், ந. சுந்தரி ஆகிய அகவை முதிந்த தமிழறிஞர்கள் 5 பேருக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகைக்கான ஒப்பளிப்பு அரசாணையினை வழங்கினார்.

அதைத் தொடர்ந்து, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை வாயிலாக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் நான்காண்டு சாதனை மலரினை தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட 2 நூல்களை வெளியிடுதல் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட இராசேந்திரன் சங்கரவேலாயுதன் அவர்கள் எழுதிய “தமிழ் வினையடிகள் – வரலாற்று மொழியியல் ஆய்வு” மற்றும் பா.ரா. சுப்பிரமணியன் அவர்கள் எழுதிய “சங்க இலக்கியச் சொல்வளம்” ஆகிய நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டார்.

banner

Related Stories

Related Stories