ஹைதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் பரத்குமார் என்பவரிடம், அதிமுக நிர்வாகியும், நடிகருமான அஜய் வாண்டையார் ரூ. 2 கோடியே 11 லட்சம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பாதிக்கப்பட்டோர் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், நுங்கம்பாக்கம் போலீசார், அஜய் வாண்டையார் மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே, நுங்கம்பாக்கத்தில் கடந்த 22 ஆம் தேதி மதுபான கூடத்தில் நடந்த மோதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட அஜய் வாண்டையார் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குடிபோதையில் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக இவர் மீது பட்டினம்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் மீது பணமோசடி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதே போல் பண மோசடி தொடர்பாக அதிமுக ஐடி பிரிவு நிர்வாகி பிரசாத் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுசெய்யப் பட்டுள்ளது. அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சேலத்தை சேர்ந்த குழந்தைவேலு என்பவரிடம் 11 லட்சம், அசோக் என்பவரிடம் 5 லட்சத்து 20 ஆயிரம் பெற்றுக்கொண்டு அதிமுக ஐடி பிரிவு நிர்வாகி பிரசாத் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நுங்கம்பாக்கம் பாரில் நடைபெற்ற மோதல் தொடர்பாக கடந்த 29ஆம் தேதி அதிமுக ஐடி பிரிவு மாநில நிர்வாகி பிரசாத் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.