பொதுமக்கள் தங்களது தங்க நகைகளை வைத்து கடன் பெறுவதில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்றை அண்மையில் வெளியிட்டது.
அந்த அறிவிப்பு, ஏழை மற்றும் நடுத்தர மக்களை குறிவைத்ததாக அமைந்ததால், இந்திய அளவில் பலதரப்பட்டவர்களால், தங்க நகைக்கடனுக்கான கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்புகள் குவிந்தன.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், எளியவர்களை வஞ்சிக்கும் வரையறைகளை உள்ளடக்கிய நகைக்கடன் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என ஒன்றிய நிதியமைச்சருக்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில், எதிர்ப்புகளுக்கு செவிசாய்த்து, ஒன்றிய அரசு, ரிசர்வ் வங்கியால் முன்மொழியப்பட்ட தங்க நகைக்கடன் கட்டுப்பாடுகளை தளர்த்த பரிந்துரை செய்துள்ளது.
இது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “தங்க நகைக்கடன் பெறுவதற்காக ரிசர்வ் வங்கியால் முன்மொழியப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கோரி நான் ஒன்றிய நிதியமைச்சருக்கு எழுதிய கடிதம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
சிறிய தொகைகளை, குறிப்பாக 2 லட்சம் ரூபாய்க்குக் கீழ், கடன்பெறும் உழவர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்குத் தக்க நேரத்தில், எளிதில் கடன் கிடைக்க வேண்டும் என்பதைத்தான் தொடர்ந்து நான் வலியுறுத்தி வந்துள்ளேன்.
அந்த வகையில், நான் கடிதம் எழுதிய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதைப் பாராட்டும் அதேவேளையில், ஏழை எளிய மக்கள் மீது பெரும் தாக்கம் செலுத்தும் இதுபோன்ற கொள்கை முடிவுகளை மாநிலங்களுடன் உரிய முறையில் கலந்தாலோசித்த பிறகே, இனி முடிவுசெய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.