மு.க.ஸ்டாலின்

“எவ்வித ஆபத்தான பொருட்களும் தமிழ்நாட்டின் கடற்கரையில் ஒதுங்கவில்லை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

எல்சா 3 கப்பல் விபத்தால் தமிழ்நாட்டின் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் ஒதுங்கும் பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் இதர பொருட்களை அகற்ற மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு.

“எவ்வித ஆபத்தான பொருட்களும் தமிழ்நாட்டின் கடற்கரையில் ஒதுங்கவில்லை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில் கடந்த 24.05.2025 அன்று கேரள மாநில கடற்கரையில் 38 கடல் மைல் தொலைவில் எல்சா-3 என்ற கப்பல் விபத்துக்குள்ளாகி, அதிலிருந்த எரிபொருள், பிளாஸ்டிக் துகள்கள், ஆபத்தான பொருட்கள் கொண்ட பெட்டகங்கள் கடலில் விழுந்தன.

வலுவடைந்த தென்மேற்கு பருவ மழையின் காரணமாக பிளாஸ்டிக் துகள்கள், பெட்டகங்கள் உட்பட பிற பொருட்கள் கேரள மாநிலத்தின் கடற்கரையிலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரையிலும் கரை ஒதுங்கி வருகிறது.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (30.05.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் தென்கடலோர பகுதிகளில் ஒதுங்கும் பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் பிற பொருட்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துதல், மீன்வளத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்பு மற்றும் சுற்றுச் சூழலை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், பிளாஸ்டிக் துகள்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரையில் கரை ஒதுங்கியதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், எண்ணெய் பரவல் உள்ளதா எனவும், மீன்வளம் மற்றும் கடல்சார் உயிரினங்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்தும் முதலமைச்சர் அவர்கள் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளரிடம் கேட்டறிந்தார்.

அதற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு செய்யப்படுகிறது எனவும், கப்பல் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு, பெட்டகங்களில் ஆபத்து விளைவிக்கக் கூடிய பொருட்கள் உள்ளதா எனவும், இதனால் சுற்றுச்சூழலுக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டால் அதனை திறம்பட எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவித்தார்.

மேலும், தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம், தேசிய கடலோர நிலைத்திட்ட மேலாண்மை மையம், தேசிய கடல் ஆராய்ச்சி மையம், அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த அறிவியல் வல்லுநர்களுடன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, கால்நடை, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் மீன்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா எனவும், பிளாஸ்டிக் துகள்கள் மீன்கள் வயிற்றில் உள்ளதா என்பதை ஆய்வு செய்யவும், இப்பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்வதை தவிர்க்குமாறும் மீன் வளத்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

“எவ்வித ஆபத்தான பொருட்களும் தமிழ்நாட்டின் கடற்கரையில் ஒதுங்கவில்லை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்களுக்கும் மற்றும் தொடர்புடைய அனைத்து அரசு துறையினருக்கும் பிளாஸ்டிக் துகள்களை அப்புறப்படுத்துவதற்கான அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுநெறிமுறைகள் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது என்றும், ஊடகங்கள் மூலம் பிளாஸ்டிக் துகள்கள், பெட்டகங்கள் மற்றும் இதர பொருட்கள் கரை ஒதுங்குவதை தொடாமல் தவிர்க்குமாறும், உடனடியாக காவல்துறைக்குத் தெரிவிக்குமாறும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் பெட்டகங்கள் வானிலை சூழலுக்கேற்ப நகரும் திசை மற்றும் கரை ஒதுங்கக்கூடிய பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.

பிளாஸ்டிக் துகள்களை அகற்ற தன்னார்வலர்கள் மூலம் பாதுகாப்பான முறையில் பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், காவல் துறை, தீயணைப்புத் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை ஒருங்கிணைத்து பணிகள் விரைவாக மேற்கொள்வதை உறுதி செய்யுமாறும், பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்களும் மீனவர்களும் பின்பற்றவேண்டிய நெறிமுறைகளை வழங்குமாறும் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், இந்நிகழ்வினால் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த குறுகிய மற்றும் நீண்டகால ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மீன்வளத்துறையின் மூலமாக மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் மீதான தாக்கத்தினை கண்டறிய ஆய்வினை துரிதப்படுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

“தற்போதைய நிலவரப்படி எவ்வித ஆபத்தான பொருட்களும் தமிழ்நாட்டின் கடற்கரையில் ஒதுங்கவில்லை. பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் பிளாஸ்டிக் துகள்கள், பெட்டகங்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய பொருட்கள் கடலிலோ அல்லது கடற்கரையிலோ கண்டறியப்பட்டால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல் துறைக்கும் தெரிவிக்க வேண்டும்.

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் சூழ்நிலையை தொடர்ந்து கவனமாக கண்காணிக்க வேண்டும். பொதுமக்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அரசால் மேற்கொள்ளப்படும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories

live tv