தி.மு.கழக இளைஞர் அணியின் மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர் - துணை அமைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் அணியின் செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திருச்சியில் நேற்று (மே.25) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், ‘முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளை, மக்களுக்கு பயனுள்ள வகையில் கொண்டாடுவது, இளைஞர் அணியின் எதிர்காலப் பணிகளை விரைந்து மேற்கொள்வது உட்பட 15 சிறப்புக்குரிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தின் நிறைவாக, இளைஞர் அணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:-
“நின்ற தேர்தல்களில் எல்லாம் வென்ற ஒரே தலைவர் என்றால் அது நம் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் மட்டும்தான். அதற்கு ஒரு தொடக்கமாக இருந்தது, ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் இருந்த குளித்தலை தொகுதிதான். இங்குதான் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதன்முதலில் தேர்தலில் நின்று வென்றார்.
நம் கழகம், திருச்சியில் எத்தனையோ மாநாடுகளை நடத்தி இருக்கிறது. 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, இதே திருச்சியில் மிகப்பெரிய மாநாட்டை நடத்திக் காட்டினோம். அதே திருச்சியில் இப்போது மீண்டும் நாம் சந்திக்கிறோம்.
இங்கே முக்கியமான 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. அந்தத் தீர்மானங்களையொட்டி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பலர் சிறப்பாகப் பேசினார்கள். நம் இயக்கத்தில் 23 அணிகள் இருக்கின்றன. ஆனால், கழகத்தின் இதயம் என்றால், அது நம் தலைவர் அவர்கள் உருவாக்கிய இளைஞர் அணிதான்.
கலைஞர் அவர்களால் இயக்கத்தின் முதன்மை அணி என்று தொடர்ந்து பாராட்டப்பட்ட அணியும் இளைஞர் அணிதான். அப்படிப்பட்ட இளைஞர் அணியில் பொறுப்பில் இருப்பதே நமக்கெல்லாம் ஒரு மிகப்பெரிய பெருமை. கழகத்தின் நாற்றங்கால் என்று சொல்கிற அளவுக்கு இளைஞர் அணி பலரை உருவாக்கி இருக்கிறது.
நீங்கள் பொறுப்புக்கு வந்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. இந்த ஒன்றரை வருடத்தில் ஏராளமான பணிகளைச் செய்து இருக்கிறீர்கள். குறிப்பாக, நம் இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்திக் காட்டினோம். வெற்றிமாநாடாக அது அமைந்தது. அந்த மாநாட்டின் வெற்றிக்கு உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பும்தான் காரணம். மாநாடு முடிந்ததும், மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபட்டோம். நம் தலைவர் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று, பிரச்சாரத்தை மேற்கொண்டார். நானும் அனைத்துத் தொகுதிகளிலும் பிரச்சாரத்தை மேற்கொண்டேன்.
அப்போது மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற வேட்பாளர்களை வைத்துக்கொண்டே, ‘இந்தத் தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம். அதற்கு இளைஞர் அணியின் உழைப்பு முக்கியமான ஒரு காரணமாக இருக்கும்’ என்று சொன்னேன். அதைச் செய்து காட்டினீர்கள். கழகம் 40-க்கு 40 வெற்றிப் பெற்றது என்றால், அது இளைஞர் அணி இல்லாமல் சாத்தியம் இல்லை. அதை யாராலும் மறுக்க முடியாது. அதற்கு இந்த நேரத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு, தலைவர் அவர்கள் நமக்கு பல்வேறு பணிகளைக் கொடுத்தார்கள். எந்த இயக்கமும் செய்யாத ஒரு சாதனையாக தொகுதிக்கு ஒரு கலைஞர் நூலகம் அமைக்க வேண்டும் என்று சொன்னார்கள். கிட்டத்தட்ட 100 தொகுதிகளில் இளைஞர் அணியின் சார்பாக கலைஞர் நூலகங்களைத் திறந்து இருக்கிறோம். இன்னும் மீதி இருக்கிற 134 தொகுதிகளிலும் கூடிய விரைவில் திறப்போம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இந்த நூலகங்கள் பெயர் அளவுக்கு இல்லாமல், அதைத் தொடர்ந்து சிறப்பாக இயங்க வேண்டும். மாணவர்கள், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகின்றவர்களை அதிகமாகப் பயன்படுத்த வைக்க வேண்டும். அந்த நூலகத்தைத் தொடங்கியதற்கான பலன், வெற்றி அப்போதுதான் கிடைக்கும்.
இரண்டு நாட்களுக்கு முன்புகூட, என் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில், கலைஞர் நூலகத்தில் வாசகர் வட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். நூலகத்திற்கான பராமரிப்பு, நூலகர் ஊதியம்… இதற்கெல்லாம் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் எனக்குத் தெரியும்.
இந்தியாவிலேயே எந்த இயக்கமும் செய்யாத வகையில், கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டியைச் சிறப்பாக நடத்தினோம். இந்தப் பேச்சுப் போட்டி இன்று மிகப்பெரிய வெற்றியாக மாறி இருக்கிறது. அதற்கும் உங்களின் உழைப்புதான் காரணம்.
மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் நீங்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு கல்லூரிக்கும் ஏறி இறங்கி, விண்ணப்பங்களைக் கொடுத்த பணிகளை, நிச்சயம் மறக்க மாட்டேன். உங்களின் இந்த முயற்சியால் 17,000 விண்ணப்பங்கள் வந்தன.
தலைவர் அவர்கள், `100 இளம்பேச்சாளர்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுங்கள்’ என்று கேட்டார்கள். ஆனால் நாம் 200-க்கும் மேற்பட்ட சிறந்த இளம் பேச்சாளர்களைத் தேர்ந்தெடுத்து, தலைமைக் கழகத்துக்குத் கொடுத்து இருக்கிறோம். தலைமைக் கழகம் தொடர்ந்து பல்வேறு கூட்டங்களை அறிவிக்கிறது. அந்தக் கூட்டங்களிலும் நம் இளம் பேச்சாளர்கள் கலந்துகொண்டு சிறப்பாகப் பேசுகிறார்கள் என்ற தகவல் எனக்கு வருகிறது. இது இளைஞர் அணிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.
இல்லந்தோறும் இளைஞர் அணி முன்னெடுப்பு மூலம் ஒவ்வொரு வீடாகச் சென்று ஆட்சியின் சாதனைகள், கழகத்தின் கொள்கைகளை எல்லாம் விளக்கி, புதிய இளைஞர்களை இளைஞர் அணியில் சேர்த்துகொண்டு இருக்கிறீர்கள்.
சட்டமன்றத் தொகுதிகளில் பாகத்துக்கு ஒரு இளைஞரைத் தேர்வு செய்து அவர்களுக்கான சமூக வலைத்தளப் பயிற்சி முகாம்களையும் தொடர்ந்து நடத்தி வருகிறோம். அந்தப் பணியையும் மிகச்சிறப்பாக செய்து வருகிறீர்கள். இதுவரை 100 தொகுதிகளில் இந்தப் பயிற்சி முகாம்கள் முடிந்து இருக்கின்றன. மீதமுள்ள தொகுதிகளிலும் விரைவில் நடத்தி முடிக்கவுள்ளோம்.
இந்தப் பயிற்சி முகாம்களின் வெற்றியை என்னால் களத்தில் நன்றாக உணர முடிகிறது. அதனுடைய ரிசல்ட் என்னுடைய, தலைவர் அவர்களுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில் நன்றாகத் தெரிகிறது. பலர் பகிர்வதும், நேர்மறை கருத்துகள் வருவதும் இந்த சமூக வலைத்தளப் பயிற்சி முகாம்களின் ரிசல்ட்தான்.
இன்றைக்கு களத்துக்கு இணையாக சமூக வலைத்தளத்திலும் நாம் வலிமையாக இயங்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. உங்களுக்கே தெரியும், இன்றைக்கு நிறைய கட்சிகளுக்குத் தலைமை அலுவலகமே சமூக வலைத்தளமாகத்தான் இருக்கிறது.
அதில் பொய் செய்திகளைப் பரப்புவதும், வதந்திகளைப் பரப்புவதும்தான் அவர்களின் வேலையும், கொள்கையும். எனவே, நாம் எப்படிக் களத்தில் வலுவுடன் இருக்கிறோமோ, அதேபோல் சமூக வலைத்தளத்திலும் உணர்ச்சியுடனும், வேகத்தோடும் பணியாற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. சமூக வலைத்தளம் என்கிற தளத்திலும் நம் கருப்பு-சிவப்புக் கொடி உயர, உயர பறக்க வேண்டும்.
விரைவில் இளைஞர் அணிக்கு என்று மாவட்டத்துக்கு ஒரு சமூக வலைத்தள துணை அமைப்பாளரை நியமிக்க இருக்கிறோம். அந்தப் பொறுப்புகளுக்கு இதுவரை 1,400 பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள். அவை சரிபார்க்கப்பட்டு வருகின்றன. சமூக வலைத்தளப் பணிகளுக்கான மாவட்ட துணை அமைப்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்.
கழகத் தலைவர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும், நீங்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை உங்களின் மாவட்டங்களில் செய்து இருக்கிறீர்கள். அவற்றையெல்லாம் தொடர்ந்து நான் பார்த்துக்கொண்டுதான் வருகிறேன். மிகவும் சிறப்பாக செய்து இருக்கிறீர்கள்.
அதேமாதிரி, கோடை காலத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் ஏராளமான தண்ணீர் பந்தல்களைத் திறக்க சொன்னேன். நான் தண்ணீர் பந்தலைத்தான் திறக்க சொன்னேன். ஆனால், நீங்கள் `மோர் பந்தல்’, `ஜூஸ் பந்தல்’ எல்லாம் திறந்து விட்டீர்கள். சென்னை அன்பகத்துக்கு வெளியே, ஒரு சிறிய `குட்டி அன்பகம்’ மாதிரியை அமைத்து, ஒரு தண்ணீர் பந்தல் திறந்து உள்ளீர்கள்.இப்படி வெட்டி வா என்றுச் சொன்னால், கட்டி வருகிற அணியாக நம் இளைஞர் அணி செயல்படுவதை நினைத்து நான் மிகுந்த பெருமை அடைகிறேன்.
ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் ஆகிய அமைப்புகளுக்கு இளைஞர் அணி நிர்வாகிகளைத் தொடர்ந்து நியமித்து வருகிறோம்.
இதற்காக நம் மண்டல பொறுப்பாளர், மாவட்ட அமைப்பாளர்களுடன் தினசரி அமர்ந்து, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் குறைந்தது ஒன்றரை மணியிலிருந்து இரண்டு மணி நேரம் செலவிட்டு, ஒவ்வொரு நிர்வாகியின் கழகப் பணி, மாவட்டச் செயலாளரின் பரிந்துரைகளை கருத்தில்கொண்டு பார்த்து பார்த்து மிகவும் கவனமாகத் தேர்வு செய்து உள்ளோம்.
தலைவர் அவர்களே என்னைப் பார்க்கும்போது, ‘எப்போதும் இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்திலேயே இருக்கிறாய், தினமும் முரசொலியில் இளைஞர் அணி தொடர்பான அறிவிப்புகள் வந்துக்கொண்டே இருக்கின்றன’ என்று மகிழ்வார். அந்த அளவுக்குச் சிறப்பாக நம் பணிகளை எல்லாம் நாம் ஒன்றாகச் சேர்ந்து செய்து இருக்கிறோம்.
இன்றைக்கு கிட்டத்தட்ட 73 கழக மாவட்டங்களுக்கு இதற்கான அறிவிப்புகள் வந்துவிட்டன. சுமார் 12 ஆயிரம் புதிய நிர்வாகிகள் நம் இயக்கத்திறகு வந்து இருக்கிறார்கள். ஒவ்வொருவரையும் வடிகட்டி அவர்களின் கழகப் பணிகளுக்கு ஏற்ப பொறுப்புகளை வழங்கி இருக்கிறோம்.
நான் அனைவருக்கும் பொதுவானவன். எனக்கு மாவட்ட அமைப்பாளரும் வேண்டும், மாவட்டச் செயலாளரும் வேண்டும், ஒன்றியச் செயலாளரும் வேண்டும். ஒன்றிய அமைப்பாளரும் வேண்டும். மாவட்ட–ஒன்றிய–நகர–பகுதி–பேரூர் செயலாளர்களுடன் ஒற்றுமையாக இருந்து கழகப் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோல நான் இவருடைய ஆள், அவருடைய ஆள் என்றெல்லாம் பார்க்கக்கூடாது. புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும்.
நாம் அனைவரும் ஒரே அணிதான். அது நம் தலைவர் அணிதான். கழகத் தலைவரின் தொண்டர்கள், கலைஞரின் உடன்பிறப்புகள் என்ற ஒரே எண்ணம் மட்டும்தான் நம் மனதில் இருக்க வேண்டும். அதைப் புரிந்துகொண்டு நீங்கள் அனைவரும் கழகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அடுத்து மாநகர பகுதி – நகர – பேரூர் வார்டுகள் மற்றும் ஒன்றியத்துக் கீழ் வருகின்ற ஊராட்சி கிளைகளில் அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை நியமிக்க இருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் இப்படி நியமித்தால், நிர்வாகிகள் மட்டுமே நம்மிடம் 5 லட்சம் பேர் இருப்பார்கள். இந்தியாவில் எந்த இயக்கத்திற்கும், எந்த அணிக்கும் இல்லாத பெருமை இது.
அதேபோல மண்டலம் வாரியாக நிர்வாகிகளுக்கான மாநாடுகளை நடத்தவும் திட்டமிட்டுட்டு இருக்கிறோம். முதற்கட்டமாக சென்னையில் இந்த மாநாட்டை நடத்த தலைவர் அவர்களிடம் தேதி கேட்டு இருக்கிறோம்.
திராவிட முன்னேற்றக் கழகம், பதவிக்காகவோ, ஆட்சிக்காகவோ தொடங்கப்பட்ட இயக்கம் கிடையாது. நம் இயக்கக் கொள்கைகளை நீங்கள் முதலில் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அதே நேரம் ஆட்சிக்கு வந்தால்தான் மக்களுக்குச் செய்ய வேண்டிய நன்மைகளைச் செய்யமுடியும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் ஆட்சிக்கு வருதற்கான பணிகளை மேற்கொள்கிறோம்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஏழெட்டு மாதங்கள்தான் உள்ளன. எனக்கு தெரிந்து பிப்ரவரி கடைசி வாரத்தில், தேர்தல் தேதியை அறிவித்துவிடுவார்கள். நம்மிடம் இருக்கும் நேரம் மிகமிக குறைவு. அந்த நேரத்தை வீணாக்காமல் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நீங்கள் மக்களோடு, மக்களாக இருக்க வேண்டும். மக்களுடன் தினமும் தொடர்பில் இருக்க வேண்டும். அவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், அவர்கள் வந்து சொல்கின்ற முதல் ஆளாக நீங்கள் இருக்க வேண்டும்.
அவர்களின் கோரிக்கையை உங்களால் செய்து கொடுக்க முடியும் என்றால், நீங்களே செய்து கொடுத்துவிடுங்கள். அதை உங்களால் செய்ய முடியவில்லை என்றால், உங்களின் மாவட்டச் செயலாளரிடமோ, மாவட்ட அமைச்சர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் அதைக் கொண்டுச் சென்று தீர்வு காணுங்கள். அப்படி செய்தாலே மக்களுக்கு நம் மீது நம்பிக்கை வந்துவிடும்.
மக்கள் சீக்கிரம் மறந்து விடுவார்கள். அதனால் நம் ஆட்சியின் சாதனைகளைத் தொடர்ந்து, மக்களிடம் நினைவுப்படுத்திக் கொண்டே இருங்கள். ஒவ்வொரு திட்டத்தையும் தலைவர் அவர்கள் பார்த்து, பார்த்து செய்துகொண்டு இருக்கிறார். கடும்நிதி நெருக்கடியிலும் செய்து இருக்கிறார். இதையெல்லாம் மக்களிடம் பேசுங்கள்.
அடுத்த ஒரு வருடத்திற்கு தேர்தல் மட்டும்தான், தேர்தல் வெற்றி மட்டும்தான் நம் கண்களுக்கு தெரிய வேண்டும். அதை நோக்கி, நாம் பயணம் செய்ய வேண்டும். உங்களுக்குள் இருக்கிற சின்னச் சின்ன பிரச்சினைகள், கருத்து வேறுபாடுகளை ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு தேர்தல் பணியில் நீங்கள் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இன்று எல்லோரின் கைகளிலும் செல்போன் இருக்கிறது. ஏதாவது ஒரு தப்பு நடக்காதா, அதை பூதாகரமாக்கலாமா என்று எதிர்கட்சிகாரர்கள் காத்திருக்கிறார்கள்.
எனவே, நீங்கள் எந்தக் கெட்டப்பெயரையும் வாங்கிவிடாமல் நற்பெயரை மட்டுமே வாங்க வேண்டும் என்பது உங்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும். அதுதான் நம் இயக்கத்திற்கும், இளைஞர் அணிக்கும், தலைவர் அவர்களுக்கும் நாம் செய்ய வேண்டிய ஒரே காரியம். நீங்கள் சரியாக இருந்தீர்கள், மிகச்சரியாக உழைத்தீர்கள் என்றால், நிச்சயம் அதற்கான அங்கீகாரம், அதற்கான வாய்ப்பு உங்களைத்தேடி வரும்.
ஜுன் 3-ஆம் தேதி கலைஞர் அவர்களின் பிறந்த நாள். கலைஞர் பிறந்த நாளுக்கு என்னென்ன பணிகளை இளைஞர் அணி செய்ய வேண்டும் என்று நம் தலைவர் அவர்கள் சொல்வார். அவர் சொன்னபிறகு அதை எப்படி செய்ய வேண்டும் என்று அதற்கான அறிவிப்புகள் அன்பகத்திலிருந்து உங்களுக்கு வரும்.
இந்த முறை கலைஞர் பிறந்த நாளில் நாம் எடுக்க வேண்டிய ஒரே உறுதிமொழி, அடுத்தமுறை கலைஞர் பிறந்த நாள் ஜுன் 3 அன்று நம் தலைவர் அவர்களை இரண்டாவது முறையாக முதலமைச்சராக அமர்த்த வேண்டும் என்ற ஒரு உறுதியை மட்டும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டின் அரசியல் நிலைமை உங்களுக்குத் தெரியும். அடிமைகள் மீண்டும் பழைய முதலாளிகளைத் தேடிச் சென்றுவிட்டார்கள். சென்றமுறை பிரிந்து வந்தார்கள் தமிழ்நாட்டு மக்கள் ஓட விட்டார்கள். இப்போது இருவரும் ஒன்றாக வர உள்ளனர்.
எடப்பாடி பழனிச்சாமி, ஐந்து மாதங்களுக்கு முன்பு, 2026–ல் மட்டுமல்ல 2036-லும் நாங்கள் பி.ஜே.பி. பக்கம் போக மாட்டோம் என்று சொன்னார். ஆனால், இன்றைக்கு அவர்கள் காலில்போய் விழுந்துவிட்டார்கள். இதையெல்லாம் நீங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அ.தி.மு.க.வின் ஆட்சியில் 10 ஆண்டுகளில் மாநிலத்தின் அனைத்து உரிமைகளையும் விட்டுக்கொடுத்து, தமிழ்நாட்டை மிகவும் மோசமான நிலைமைக்கு கொண்டுபோய் விட்டார்கள். அதிலிருந்து நம் தலைவர் அவர்கள்தான் தமிழ்நாட்டை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறார். அ.தி.மு.க. அடகுவைத்த மாநில உரிமைகள் அத்தனையும் மீட்க போராடிக்கொண்டு இருக்கிறோம். எனவே, அந்த நிலைமை மீண்டும் வந்துவிடக் கூடாது என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.
தலைவர் அவர்கள், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றதை எடப்பாடி பழனிச்சாமி விமர்சிக்கிறார். முதலமைச்சர் ஏன் சென்றார் என்று கேட்கிறார். எடப்பாடி பழனிச்சாமி ஒரு மாதத்திற்கு முன்பு டெல்லி சென்றார். எப்படி சென்றார். மூன்று கார்களில் மாறி மாறி சென்றார். அவரின் பேட்டி தொலைகாட்சியிலேயே வந்தது. டெல்லி விமான நிலையத்தில் இறங்கியவுடன் செய்தியாளர்கள் கேட்கிறார்கள். `எதுக்கு சார் வந்து இருக்கிறீர்கள்’ என்று. `எதற்கு வந்தேன் என்று, எனக்கே தெரியவில்லை’ என்று சொல்லிவிட்டார். ஆனால் நம் தலைவர் தெம்பாக, தைரியமாக நிதி ஆயோக் கூட்டத்தில் உட்கார்ந்து, இந்த வருடத்தில் இருந்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் நீங்கள் 50 சதவிகிதம் நிதிப் பகிர்வினைக் கொடுத்தாக வேண்டும் என்று நம் மோடி அவர்களிடமே சொல்லிவிட்டு வந்துள்ளார்.
பா.ஜ.க.வின் அணிகளான ஈ.டி, ஐ.டி, ஆகிய அணிகள் எல்லாம் அவர்களின் வேலையை ஆரம்பித்துவிட்டார்கள். இப்போது நம் கழகத்தின் அணியான இளைஞர் அணி நம் தேர்தல் பணி வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். எந்த உருட்டல், மிரட்டலுக்கும் பயப்படுகின்ற தலைவர், நம் தலைவர் கிடையாது. நானும் எந்த உருட்டல், மிரட்டலுக்கும் பயப்பட மாட்டேன். எதுவாக இருந்தாலும், `வா ஒரு கை பார்த்துவிடலாம்’ என்று களத்தில் இறங்குகிறவன்தான் நானும். தவறு செய்தவன்தான் பயப்பட வேண்டும். தலைவர் மேலும், என் மேலும் எந்த ஒரு தவறையும் யாராலும் சொல்ல முடியாது.
எப்படியாவது ஒரு கெட்டபெயரை ஏற்படுத்திவிடலாம் என்று முயற்சித்தார்கள். தெளிவாக, நம் தலைவர் அவர்கள் உச்சநீதிமன்றத்தில் உத்தரவு வாங்கிவிட்டார்கள். உச்சநீதிமன்றமே, `நீ அளவுக்கு மீறி போகிறாய்’ என்று ஈ.டி–யைக் கண்டித்துள்ளது. நாங்கள் எல்லாம் ஈ.டி-க்கும் பயப்பட மாட்டோம். மோடிக்கும் பயப்பட மாட்டோம். 2026-ல் நம் தலைவர் அவர்கள் நமக்கு கொடுத்து இருக்கின்ற இலக்கு 200. வெல்வோம் இருநூறு, படைப்போம் வரலாறு. நாம் முயற்சி செய்தால் அந்த 200-க்கும் மேற்பட்ட தொகுதியிலும் நிச்சயமாக நம் இயக்கம் வெல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.
எனவே, நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கி, ‘இந்தத் தெருவுக்கு நான் பொறுப்பு, இந்த வார்டுக்கு நான் பொறுப்பு’ என உங்களுக்குள் பிரித்துக்கொண்டு அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி தேர்தல் பணியாற்றவேண்டும். அப்படி செய்தோமென்றால் வெற்றி நிச்சயம் என்பதைக் கூறிக்கொள்கிறேன். கழகத் தலைவர் அவர்கள் தலைமையில், தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! என்பதை மனதில் கொண்டு உழையுங்கள், வெற்றி நிச்சயம்.
இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.