புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டையில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய திருவுருவச் சிலையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொட்டும் மழையில் நேற்று (23.05.2025) திறந்து வைத்தார்.
அப்போது அவர் அண்ணல் இயற்றிய அரசியலமைப்புச் சட்டத்தை சிதைக்க முயலும் பாசிசத்தை ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரண்டு வீழ்த்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்து எழுச்சிமிக்க உரையாற்றினார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய எழுச்சிமிக்க உரையின் விவரம் வருமாறு:
எனது அரசியல் வழிகாட்டியாக எப்போதும் பெருமையாக சொல்லக்கூடிய எழுச்சி தமிழர் திருமாவளவன் அவர்களின் முன்னிலையில், அவரோடு இணைந்து அம்பேத்கர் அவர்களின் சிலையை திறக்கின்ற வாய்ப்பை அளித்ததற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றிலிருந்து தொடங்கி மூன்று நாட்களுக்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகள், கழக நிகழ்ச்சிகள் பயணிக்க உள்ளேன். அதில் முதலில் சிறப்பு நிகழ்ச்சியாக அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலையை திறந்து வைத்துவிட்டு, மக்கள் பணி ஆற்ற அடுத்த மூன்று நாட்கள் செல்ல இருக்கிறேன்.
இந்த நிகழ்ச்சிக்கு வரும்போது, இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடக்குமா என்று தெரியவில்லை. நன்றாக மழை பெய்துகொண்டு இருக்கிறது. எவ்வளவு தடங்கல் வந்தாலும், இந்த சிறப்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிலையை திறந்து வைத்து இருக்கிறோம்.
இதிலிருந்து என்ன தெரிகிறது. எவ்வளவு தடங்கல்கள் வந்தாலும், நம் தலைவர் அவர்கள் 2024-ஆம் ஆண்டு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை அமைத்தார்கள். ஒன்றிய பா.ஜ.க அரசு மிருக பலத்தோடு நாங்கள் ஆட்சி அமைப்போம் என்று சொன்னார்கள். ஆனால், கடைசியில் அவர்களால் மெஜாரிட்டி பெற முடியவில்லை. அதற்கு, முழுக்காரணம் நம் முதலமைச்சர் அவர்கள், நம் தலைவர் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி.
தமிழ்நாட்டில் 39-க்கு 39 தொகுதிகளில் தமிழ்நாட்டு மக்கள் நம்மை வெற்றி பெற வைத்தார்கள். அதனால்தான், இப்போது மெஜாரிட்டி இல்லாமல், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு இயங்கிகொண்டு இருப்பதால் ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசு இன்னும் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றாமல் வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இல்லையென்றால், அதையும் மாற்றி இருப்பார்கள். அதற்கு தடைப் போட்டவர் நம் தலைவர், நம் தமிழ்நாடு அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே, இங்கு அண்ணன் திருமாவளவன் அவர்கள் சொன்னதைப்போல, திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் பேரியக்கம், ஆகியோர் இணைந்தது தேர்தல் கூட்டணி கிடையாது. இது கொள்கை கூட்டணி. அதனால்தான், தமிழ்நாட்டு மக்கள் நமக்கு ஆதரவு தெரிவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
நம் தலைவர் தலைமையிலான திராவிட மாடல் அரசு சிறப்புடன் செயலாற்றி வருகிறது. நான்காண்டுகள் முடிந்து, இன்னும் 9 மாதங்களில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது. நம் முதலமைச்சர், கழகத் தலைவர் சொல்லி இருக்கிறார். குறைந்தது 200 தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி வெற்றிபெற வேண்டும் என்று. நிச்சயம் வெல்லும், அதில் முதல் தொகுதியாக கந்தர்வக்கோட்டை தொகுதியும் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது.
நம் முதலமைச்சர் சொல்வதுதான். தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! என்று கூறிக்கொண்டு இந்த வாய்ப்பை அளித்த சிலை அமைப்புக் குழுவினருக்கும், எழுச்சி தமிழர் அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்து விடைபெறுகிறேன்.