தமிழ்நாட்டில் எப்படியாவது இந்தியை திணித்துவிட வேண்டும் என ஒன்றிய அரசு பல வடிவங்களில் முயற்சித்து வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மாணவன் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 100க்கு 96 மதிப்பெண்கள் எடுத்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், சாங்கிலி மாவட்டம் கார்வேவ் நகரைச் சேர்ந்தவர் ஜாதவ் சங்கர். இவரது மனைவி அருணா. இவர்களது மகன் பிரணவ். இவர்களது குடும்பம் பிழைப்பிற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் உள்ள தேனி மாவட்டம், ஆண்டிபட்டிக்கு குடிபெயர்ந்தனர்.
அங்கு உள்ள தனியார் பள்ளியில் பிரணவ் படித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வெளியான 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பிரணவ் தமிழ் பாடத்தில் 100க்கு 96 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார்.
மேலும், ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்களும், அறிவியலில் 100 மதிப்பெண்களும் எடுத்து 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதையடுத்து மாணவர் பிரணவ்-க்கு அனைவரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறனர்.
சென்னையில் வசித்து வரும் பீகாரை சேர்ந்த மாணவி தமிழ் பாடத்தில் 93 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இவர் அரசு பள்ளி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.