சென்னை சவுகார்பேட்டை மற்றும் பாரிமுனையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை கிழக்கு மாவட்ட செயலாளருமான பி.கே.சேகர்பாபு விதி வீதியாக சென்று பொதுமக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு,"பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதியை கொடுத்துள்ளது இந்த கழக அரசு. முந்தைய அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி வழக்கு குற்றவாளிகளை பாதுகாக்கவே பார்த்தார்கள். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தியதன் காரணமாகதான் இந்த வழக்கை அதிமுக அரசு சிபிஐக்கு மாற்றியது.
இந்த தீர்ப்பு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு ஒரு எச்சரிக்கையாகும். இந்த வழக்கி திமுக அரசு உரிய தீர்ப்பை பெற்று கொடுத்தன் காரணமாக பெண்கள் அனைவரும் கழக அரசை பாராட்டி வருகின்றனர். இதன் வயிற்று எரிச்சல் காரணமாகதான் எடப்படி பழனிசாமி அவதூறுகளை பேசி வருகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வே இல்லாமல் மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார். நீலகிரியில் அரசு பள்ளி, மருத்துவமனையில் ஆய்வு செய்தார். மேலும் யானை முகாம்களில் நடத்தக்கூடிய பணிகளை ஆய்வு மேற்கொண்டு இருக்கிறார்.எங்கள் முதலமைச்சருக்கு நாட்டில் நடக்கும் அனைத்து விவரங்களையும், விரல் நுனியில் வைத்திருப்பார். எடப்பாடி பழனிசாமியை போல் நான் டி.வியை பார்த்து தெரிந்து கொண்டேன் என கூறமாட்டார்" என தெரிவித்துள்ளார்.