தமிழ்நாடு

ஆண்டொன்றுக்கு 82,000 பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் : துணை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமை நாட்களில், நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஆண்டொன்றுக்கு 82,000 பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் : துணை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (17.5.2025) திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமை நாட்களில், நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு நிறைவான உணவு வழங்க அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி, திருக்கோயில்களில் ஒருவேளை அன்னதானம், நாள் முழுவதும் அன்னதானம், திருவிழா மற்றும் சிறப்பு நாட்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

2021 ஆம் ஆண்டிற்கு முன் ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் மற்றும் பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் ஆகிய 2 திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானமும், 754 திருக்கோயில்களில் ஒருவேளை அன்னதானமும் வழங்கப்பட்டு வந்தது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், கடந்த நான்காண்டுகளில் கூடுதலாக 11 திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு தற்போது 13 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஒருவேளை அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு தற்போது 764 திருக்கோயில்களில் ஒருவேளை அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆண்டொன்றுக்கு 82,000 பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் : துணை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

இத்திட்டத்தின் மூலம் ஆண்டொன்றுக்கு சுமார் 3.5 கோடி பக்தர்கள் பயனடைந்து வருகிறார்கள். 2025-2026 ஆம் நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில், “சென்னை, திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமைகள் மற்றும் விழா நாட்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும்” என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் துணை முதலமைச்சர் அவர்கள் திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் இன்று (17.05.2025) சனிக்கிழமை அன்று நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதனடிப்படையில் திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் வாரந்தோறும் சனிக்கிழமைகள், புரட்டாசி மாதம் முழுவதும் அனைத்து நாட்களிலும், அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருத்தேரோட்டம், அருள்மிகு நரசிம்மர் சுவாமி திருத்தேரோட்டம், மாசிமகம், வைகுண்ட ஏகாதசி ஆகிய 82 நாட்களில் வடை, பாயசத்துடன் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

இதன்மூலம் மேற்குறிப்பிட்ட நாட்களில் ஆண்டொன்றுக்கு திருக்கோயிலுக்கு வருகை தரும் 82,000 பக்தர்கள் பயன்பெறுவார்கள்.

banner

Related Stories

Related Stories