2025 ஆம் ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு பயணிகளின் முதல் குழுவினர் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் தனி விமானத்தில் ஜெட்டாவுக்கு புறப்பட்டு சென்றனர். தமிழ்நாடு பயணிகள் 402 பேர் அடங்கிய முதல் குழுவினரை சென்னை விமான நிலையத்தில் இருந்து அமைச்சர் நாசர் வழி அனுப்பி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நாசர், “இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக இருக்கக்கூடிய ஹஜ் புனித பயணத்தின் முதல்கட்ட பயணம் இன்று (மே 16) தொடங்கியுள்ளது. இன்று தொடங்கி வருகின்ற மே 30 வரை சுமார் 14 விமானங்கள் மூலம் 5,730 பேர் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள். இன்று முதல் நாள் மட்டும் 843 நபர்கள் ஹஜ் பயணத்தை மேற்கொள்ள உள்ளனர். அவர்களை வழி அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
200 நபர்களுக்கு ஒரு நபர் என்ற வகையில் வகுப்புகள் எடுக்கப்பட்டு, அவர்கள் தங்கும் இடம், தேவையான உணவு, புனித பயணத்தை மேற்கொள்வதற்கான வழிக்காட்டுதல் உள்ளிட்டவை குறித்து விளக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவற்றை கண்காணிக்க அலுவலர்களை நியமித்து இருக்கிறோம். இந்த அலுவலர்கள் அனைவருமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான்.
கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சிபோல அல்லாமல், திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பிறகு சிறுபான்மை மக்கள் மீது உள்ள அக்கறையின் காரணமாக ஹஜ் பயணம் மேற்கொள்ள, ஒவ்வொருவருக்கும் 25 ஆயிரம் ரூபாய் மானியமாக கொடுத்து வருகிறோம்
இந்த ஆண்டு மட்டும் 14 கோடியே 21 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு விண்ணப்பித்த அனைத்து நபர்களுக்கும் மானியம் கொடுக்கப்பட்டு அனைவரும் பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். இந்த பயணத்தை அரசு கண்காணித்து வருகிறது” என்றார்.