காவல்துறையில் பெண்கள் பங்கேற்று 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவு கூறும் வகையில் காவல்துறையில் பெண்கள் 11 வது தேசிய மாநாடு சென்னை வண்டலூர், ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்றது.
இந்த 2 நாள் மாநாட்டை, ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய் தொடங்கி வைத்தார்.பொருளாதார குற்றப்பபிரிவின் கூடுதல் காவல் இயக்குநர் பால நாக தேவி ஐ.பி.எஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் காவல்துறை இயக்குநர் ராஜீவ் குமார் ஷர்மா ஐ.பி.எஸ், கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதனிடையே மாநாட்டின் நிறைவு நாள் விழாவில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விழா மலரை வெளியிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”பெண்களின் வளர்ச்சிக்காக திமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றார்.
தமிழ்நாட்டில் முதன்முதலாக திமுக ஆட்சியில்தான் சென்னை மாநகர காவல்துறையில் பெண் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர் என்றும், இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் மகளிர் காவல் படைகள் உருவாக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் 43 விழுக்காடு காவல்நிலையங்கள் பெண் அதிகாரிகள் தலைமையில் இயங்குவது பெருமைக்குரியது என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த 1973ல் 22 பேருடன் தொடங்கப்பட்ட பெண் காவலர்கள் படை தற்போது 27 ஆயிரம் பேருடன் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் உள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.