முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, மருத்துவத்துறையில் தனி கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக அறியவகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நவீன முறையில் இலவசமாக சிகிச்சைகள் அளித்து அவர்களின் வாழ்க்கையில் வெளிச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி தான்யா முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, அவரது கல்விக்கு இந்த கழக அரசு உதவியது. மேலும் திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம் பாக்கம் கிராமத்தில் புதிதாக வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது.
தற்போது, பிறவியிலேயே கால் சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுவன் ரிஷ்வந்துக்கு அறுவை சிகிச்சை மூலம் செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சொக்கனூர் கிராமத்தை சேர்ந்த முத்துக்குமாரின் மூன்று வயது குழந்தை ரிஸ்வந்த் பிறவியிலேயே கால் சிதைவால் பாதிக்கப்பட்டிருந்தான்.
இந்நிலையில், குழந்தை ரிஸ்வந்தை சிகிச்சைக்காக பெற்றோர், கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், செயற்கைக்கால் பொருத்த முடிவு செய்தனர். அதன்படி, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, செயற்கைக் கால் பொருத்தப்பட்டது. வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சை செய்து, சிறுவனை நடக்கும் அளவுக்கு கொண்டு வந்துள்ள மருத்துவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ”நடந்தாய் வாழி ரிஷ்வந்த் ”என சிறுவனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.