தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறைபயணமாக நீலகிரி மாவட்டத்திற்கு சென்றுள்ளார். நேற்று தெப்பக்காடு யானைகள் முகாமில் 5 கோடியே 6 இலட்சம் ரூபாய் செலவில் 44 அரசு குடியிருப்புகளுடன் கட்டப்பட்டுள்ள யானை பாகன்களுக்கான மாவூத் கிராமத்தை திறந்து வைத்தார்.
மேலும், முதுமலை புலிகள் காப்பகத்தில் தமிழகத்திலேயே முன்னோடியாக 15 கி.மீ. நீளத்திற்கு தொரப்பள்ளி முதல் தெப்பக்காடு வரை 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வான்வழி தொகுப்பு கம்பிகளின் (Aerial Bunched Cable) சேவைகளை தொடங்கி வைத்து, வன சரகர்களின் பயன்பாட்டிற்காக 2 கோடியே 93 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 32 வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை உதகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது முதலமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து அவர்களது கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற தேர்தலின் போது பொள்ளாச்சி கொடூர சம்பவத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எப்பேர்பட்டவர்களாக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று அப்போதே உறுதி அளித்தேன். இது இப்போது நடந்துள்ளது.
அதேபோல், சட்டமன்ற கூட்டத்தில் கூட அதிமுக ஆட்சிக்கு பொள்ளாச்சி சம்பவமே சாட்சி என்று கூறினேன். இது தீர்ப்பின் மூலம் நிரூபணமாகியுள்ளது. இதுபோல் கொடநாடு கொலைக், கொள்ளை வழக்கிலும் இதேபோல தீர்ப்பு விரைவில் கிடைக்கும்.
எடப்பாடி பழனிசாமி எதற்காக அமித்ஷாவை சந்தித்தார் என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும், ஆனால் நான் சொல்லிதான் மெட்ரோ ரயில் திட்டத்திற்கும், 10 நாள் வேலை ஆகிய திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டதாக கூறுகிறார். தொடர்ந்து இதுபோன்ற பொய், பித்தலாட்டத்தை செல்வதே அவரின் வேலையாக இருக்கிறது. இதுவும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்” என தெரிவித்துள்ளார்.