தமிழ்நாடு

5 ஆண்டுகளாக குறைந்து வரும் குழந்தைகள் இறப்பு விகிதம்... ‘தமிழகம் பெருமைப்படலாம்’ என்று தினமணி பாராட்டு!

குழந்தைகள் நலனில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அக்கறையை குறிப்பிட்டு 'தமிழகம் பெருமைப்படலாம்' என்ற தலைப்பில் தினமணி நாளிதழ் தலையங்கம் வெளியிட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.

5 ஆண்டுகளாக குறைந்து வரும் குழந்தைகள் இறப்பு விகிதம்... ‘தமிழகம் பெருமைப்படலாம்’ என்று தினமணி பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

குழந்தைகள் நலனில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அக்கறையை குறிப்பிட்டு ‘தமிழகம் பெருமைப்படலாம்’ என்ற தலைப்பில் தினமணி நாளிதழ் தலையங்கம் வெளியிட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தினமணி நாளிதழ் வெளியிட்டுள்ள தலையங்கம் வருமாறு :

தமிழகம் பெருமைப்படலாம்!

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக குறைந்து வருகிறது. இது குழந்தைகளின் நலன் மீதான அரசின் அக்கறையைக் காட்டுகிறது. நாட்டின் வளர்ச்சி குழந்தைகளின் ஆரோக்கியத்துடனும் நேரடித் தொடர்பு கொண்டது. மேலும், தமிழகத்தில் செயல்படுத்தப்படும் குழந்தைகள் நலக் கொள்கைகளும் இதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.

தமிழக பொது சுகாதாரத் துறை மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை அண்மையில் வெளியிட்ட தரவுகளின்படி, 2022-23-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 1,000 பிறப்புகளுக்கு 10.9 சதவீதமாக இருந்த குழந்தைகள் இறப்பு விகிதம் 2023-24-ஆம் ஆண்டு 8.9 சதவீதமாகக் குறைந்தது. இது கடந்த 2024-25-ஆம் ஆண்டில் 8.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.

குழந்தைகளின் வளர்ச்சியைத் தொடர்ந்து கண்காணித்தல், தேவையான ஊட்டச்சத்தை உரிய நேரத்தில் வழங்குதல், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியதால் தமிழகம் இந்த விகிதக் குறைப்பை எட்ட முடிந்தது. இந்த வெற்றியில் தமிழக அரசின் சமூக நலத் துறைக்கு முக்கியப் பங்கு உள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கண்காணித்தல், நோய்த் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவற்றை பொது சுகாதாரத் துறையின் வழிகாட்டுதலுடன் சமூக நலத் துறையும் மேற்கொண்டது.

5 ஆண்டுகளாக குறைந்து வரும் குழந்தைகள் இறப்பு விகிதம்... ‘தமிழகம் பெருமைப்படலாம்’ என்று தினமணி பாராட்டு!

மருத்துவத்துறை கண்டிருக்கும் வளர்ச்சியால் வயிற்றுப்போக்கு, ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றால் குழந்தைகள் நேரடியாக இறப்பது தற்போது இல்லை என்றாலும், நோய்த்தொற்றுகள், எதிர்பாராத காயங்கள் போன்றவை 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புக்கு முக்கிய காரணிகளாகப் பார்க்கப்படுகின்றன.

நிமோனியா பாதிப்பு, வயிற்றுப்போக்கு ஆகியவை முந்தைய காலங்களில் குழந்தைகள் இறப்புக்கு காரணமாக இருந்த நிலையில், ஓஆர்எஸ் கரைசல் கொடுத்தல், ரோட்டோ வைரஸ் தடுப்பூசியைச் செலுத்தியது போன்றவை காரணமாக வயிற்றுப்போக்கால் ஏற்படும் மரணங்கள் குறைந்தன.

நோய் தொற்றுகளில் இருந்து காப்பதற்காக சிறந்த எதிர்ப்பு சக்தி மருந்துகள், தட்டம்மையைத் தடுக்கும் தடுப்பூசிகள், சுற்றுப்புற சுகாதாரத்தை நல்ல நிலையில் வைத்துக் கொள்ளுதல், பாதுகாக்கப்பட்ட குடிநீர் போன்றவையும் குழந்தைகளை வயிற்றுப்போக்கு மரணத்திலிருந்து காத்தன.

5 ஆண்டுகளாக குறைந்து வரும் குழந்தைகள் இறப்பு விகிதம்... ‘தமிழகம் பெருமைப்படலாம்’ என்று தினமணி பாராட்டு!

இந்த விஷயத்தில் அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பச்சிளம் குழந்தைகள் நலப் பிரிவுகளுக்கும் முக்கியப் பங்கு உள்ளது. எடைக் குறைவு, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்னைகளுடன் பிறக்கும் குழந்தைகள் உடனடியாக மேற்கண்ட பிரிவுக்கு மாற்றப்பட்டு மருத்துவர்களின் 24 மணி நேர நேரடிக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, அந்தக் குழந்தைகளின் ஆரோக்கியம் உறுதி செய்யப்படுகிறது. மேலும், தொடர் மருத்துவக் கண்காணிப்புக்கும் இங்கு அளிக்கும் மருத்துவக் குறிப்புகள் உதவுகின்றன.

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் விகிதம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளால் மேம்பட்டிருக்கிறது. இதற்காக கர்ப்பிணிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து, சரிவிகித உணவு உள்ளிட்டவை குறித்து கிராம சுகாதார செவிலியர்களைக் கொண்டே கண்காணிக்கப்படுகிறது. சத்துக் குறைபாடு உடைய கர்ப்பிணிகளுக்கு, தேவையான ஊட்டச்சத்துக்கான மருந்துகள் போன்றவையும் வழங்கப்படுகின்றன. இதனால், பிரசவத்துக்குப் பிறகு தாய்ப்பால் கொடுப்பதில் தாய்மார்களுக்கு பிரச்னை வராமல் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிறந்த குழந்தைகளுக்கு இயற்கையான எதிர்ப்புச் சக்தியான தாய்ப்பால் ஊட்டப்படுவதும் அந்தக் குழந்தைகளின் சீரான ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. எனவேதான், 2 வயது வரை குழந்தைகளுக்கு கட்டாயம் தாய்ப்பால் புகட்ட வேண்டும் என்று சுகாதாரத் துறையால் அறிவுறுத்தப்படுகிறது.

5 ஆண்டுகளாக குறைந்து வரும் குழந்தைகள் இறப்பு விகிதம்... ‘தமிழகம் பெருமைப்படலாம்’ என்று தினமணி பாராட்டு!

தற்போதைய இளம் பெற்றோரிடையே குழந்தைகளுக்கான ஆரோக்கியம் சார்ந்த நடவடிக்கைகள், உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரிடம் ஆலோசனை பெறுதல் போன்றவையும், நோய் ஆரம்பகட்டத்தில் இருக்கும்போதே, அதன் தீவிரத்தைத் தடுப்பதுடன், நோயை முற்றிலும் குணப்படுத்திக் கொள்வதும் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்ததற்கு மற்றொரு காரணம்.

குழந்தைகள் பிறந்ததில் இருந்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அதன் வளர்ச்சியைக் கண்காணிப்பதன் மூலம் சற்று வளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்கு, அதற்கான காரணத்தை அறிந்து தொடக்கத்திலேயே சரிசெய்து கொள்ளவும் வாய்ப்புள்ளது. மருத்துவர்களின் இந்த அறிவுறுத்தலைக் கடைப்பிடிப்பதாலும் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படுகிறது. ரத்த சோகை ஏற்படுவது என்பது குழந்தைகளுக்கான பொதுவான பிரச்னை என்றாலும், ஊட்டச்சத்துக் குறைபாடு சரிசெய்யப்பட்டதும் நோய்த் தொற்றுக்கு உள்ளாக மாட்டார்கள்.

குழந்தை பிறந்ததில் இருந்து குறைந்தபட்சம் 6 மாதங்களுக்காவது தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். பின்னர், போதுமான ஊட்டச்சத்தை உரிய காலத்தில் வழங்க வேண்டும். இதற்கு அந்த இளம் தாய்க்கு அவரது குடும்பம், சமூகம், மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரின் ஆதரவும் தேவை.

எனவேதான், பாலூட்டும் பெண்களுக்காக கடந்த 2022-ஆம் ஆண்டு "ஊட்டச்சத்தை உறுதி செய்' என்ற திட்டம் தமிழக அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்மூலம் ஊட்டச்சத்துப் பெட்டகத்தை பாலூட்டும் பெண்களின் வீடுகளுக்கே சென்று வழங்குவதுடன், குழந்தைகளின் நிலையைக் கண்காணிக்கவும் முடிகிறது.

தாய்-சேய் சுகாதார குறியீடுகளில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. இதற்கு தமிழகத்தின் பங்கும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது என்பது பெருமைக்குரிய விஷயமே.

- நன்றி தினமணி!

banner

Related Stories

Related Stories