நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, உதகமண்டலத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் ரூ.143.69 கோடி செலவில் 700 படுக்கைகளுடன் 8 தனித்துவமான கட்டடங்களை ஒன்றாக இணைக்கும் மையக் கட்டடம், வெளிநோயாளிகள் மருத்துவ சேவைகளுக்கான Block A மற்றும் B கட்டடங்கள், Block C-யில் 10 நவீன அறுவை சிகிச்சை அறைகள், Block D-யில் தீவிர மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகள், Blocks E, F, G, H ஆகியவற்றில் உள்நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் வகையில் நான்கு பிரிவுகள், மலைவாழ் மக்களிடையே காணப்படும் இரத்தசோகை, சிக்கில்செல் அனீமியா மற்றும் தலசீமியா ஆகிய நிலைப்பாடுகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் Block-Fல் சிறப்பு மருத்துவப் பிரிவு, 20 படுக்கைகளுடன் 24 மணி நேரமும் விபத்து மற்றும் அவசர மருத்துவ சேவைகளான அவசர மருத்துவப் பிரிவு (Emergency Block) ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இப்புதிய மருத்துவமனை வளாகத்தில் அவசர மற்றும் திட்டமிட்ட அறுவை சிகிச்சைகளுக்குத் துணையாக அனைத்து வசதிகளும் கொண்ட இரத்த வங்கி, நோயாளிகளுக்கு சத்துள்ள உணவு வழங்குவதற்காக சமையலறை, அதிநவீன வசதிகளுடன் தானியங்கி சலவை இயந்திரம், உலர்த்தும் இயந்திரம் மற்றும் சலவை இயந்திரங்கள், தனியான பிரேதக் கூடம் (Mortuary Block) ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட மக்களுக்கு மிகுந்த பயனளிக்கும் இச்சிறப்புமிக்க நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 6.4.2025 அன்று திறந்து வைத்தார்.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (14.5.2025) நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று அதன் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மருத்துவமனையில் உள்ள நோயாளிகளிடம் மருத்துவ வசதிகள் குறித்தும், அவர்களது தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது சிகிச்சைக்கு வந்த மக்கள், தங்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அனைத்து நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இம்மருத்துவமனையை திறந்து வைத்ததற்காக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இந்த ஆய்வின்போது, முதலமைச்சர் அவர்கள், சிகிச்சைக்கு வரும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், மருத்துவமனைக்கு நேரில் வந்து சிகிச்சை பெற முடியாத நோயாளிகளுக்கு “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டம், சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு “இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48” திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் மருத்துவர்களிடம் அறிவுறுத்தினார்.
மேலும், பயிற்சி மருத்துவர்களிடம் முதலமைச்சர் அவர்கள் கலந்துரையாடி, சிகிச்சைக்கு வரும் மக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். அத்துடன் மருத்துவப் பணியாளர்களின் வருகை பதிவேடுகள், மருந்து இருப்பு பதிவேடுகள் ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடியபோது, வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமைத் தேடி தரும் வகையில் சேவை மனப்பான்மையுடன் மருத்துவப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். பின்னர், மருத்துவக் கல்லூரி மாணவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்விற்கு பின்னர், முதலமைச்சர் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த ஏப்ரல் மாதம் திறந்து வைத்த நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இன்று நேரில் வந்ததாகவும், 143 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இம்மருத்துவமனை மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என்றும், தினசரி 1300 வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் தெரிவித்தார். மேலும், உள்நோயாளிகள் சிகிச்சையும் சிறப்பாக அளிக்கப்பட்டு வருகிறது என்றும், தனியார் மருத்துவமனையில் அதிக கட்டணம் செலுத்தி எடுத்து வந்த எம்.ஆர்.ஐ. சி.டி. ஸ்கேன் போன்றவை கட்டணமில்லாமல் தற்போது நோயாளிகள் எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
மருத்துவக் கல்லூரி மாணவர்களை நேரில் சந்தித்த போது, அவர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், தேவைகள் குறித்தும் கேட்டறிந்ததாகவும், அப்போது எந்த குறையுமில்லாமல் சிறப்பாக உள்ளதாக அம்மாணவர்கள் தெரிவித்தாகவும், தேவைப்படும் கூடுதல் வசதிகளையும் செய்து தர அரசு தயாராக உள்ளதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்தார்.