ஜம்மு - காஷ்மீரில் அமைந்திருக்கும் பஹல்காமிற்கு சுற்றுலா சென்றிருந்த இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது, கடந்த ஏப்.22-ம் தேதி இராணுவ உடையில் இருந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 பேர் உயிரிழந்த நிலையில், நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தது. இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்று தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுக்கும் விதமாக பலகட்ட நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வந்தது. மேலும் பயங்கரவாதிகள் முகாம் மீது 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் நடத்திய தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக இந்திய இராணுவம் தெரிவித்தது. இதையடுத்து பாகிஸ்தானும் திடீரென இந்திய எல்லை மீது தாக்குதல் நடத்தியது.
இப்படியாக தொடர்ந்து அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி வந்த நிலையில் இந்திய இராணுவத்துக்கு இந்தியா முழுவதும் ஆதரவு குவிந்து வருகிறது. பாகிஸ்தானின் இந்த எல்லை மீறிய நடவடிக்கைகளுக்கு கண்டனங்களும் எழுந்தது.
இந்த நிலையில் பாகிஸ்தானை துணிவுடன் எதிர்கொள்ளும் இந்திய இராணுவப்படைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்ததோடு, தமிழ்நாடு சார்பில் மாபெரும் பேரணி நடைபெறும் என்று அறிவித்தார். அதன்படி இன்று (மே 10) மாலை 5 மணிக்கு சென்னையில் உள்ள காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த பேரணி தீவுத்திடலில் உள்ள போர் நினைவுச்சின்னம் அருகே வரை நடைபெறுகிறது. இந்தப் பேரணியில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள் எம்.பி.க்கள், பொதுமக்கள், மருத்துவத்துறை சார்ந்தவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். பேரணி செல்லும் சாலையில் மருத்துவ முகாம்கள், ஆம்புலன்ஸ்கள், குடிநீர் தொட்டிகள், பெண்களுக்கான கழிப்பறைகள் என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைவரும் தேசிய கொடியை தங்கள் கைகளில் ஏந்தி, 'இந்திய இராணுவத்தின் செயலுக்கு துணை நிற்போம்' என வாசகம் பொறித்த தொப்பி மற்றும் 'இந்திய இராணுவம் வெல்லும்' என்ற பேட்ஜ் அணிந்தும் பங்கேற்றுள்ளனர்.