முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (7.5.2025) சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில், இவ்வரசு ஆட்சி பொறுப்பேற்று நான்காண்டு நிறைவடைந்து, ஐந்தாம் ஆண்டு தொடங்குவதையொட்டி நடைபெற்ற விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, வேளாண்மை - உழவர் நலத் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கம்/மகளிர் மேம்பாட்டுத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, நெடுஞ்சாலைகள் துறை ஆகிய துறைகளின் சார்பில் 390 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழ்நாடு அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள நான்காண்டு சாதனைகள் பற்றிய குறும்படத்தினையும் முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்.
இவ்விழாவில் “இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48” திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளி பேசியதாவது;
பூந்தமல்லி, நசரத்பேட்டையைச் சார்ந்த ஹரிஷ் என்பவர் பேசும்போது, கடந்த ஆண்டு 16.7.2024-அன்று காலை 9 மணி அளவில் தானும், தன்னுடைய மனைவியும் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது தனக்கு விபத்து ஏற்பட்டது என்றும், விபத்து ஏற்பட்ட பிறகு சுய நினைவு இல்லாமல் இருந்த நிலையில் 108-ஆம்புலன்ஸ் மூலம் பூந்தமல்லி அரசு மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் முதலுதவி செய்யப்பட்டு, அங்கிருந்து கே.எம்.சி. மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும், அப்போது தங்களிடம் செலவு செய்திட பணம் இல்லாமல் தன்னுடைய அம்மா என்ன செய்வது? யாரிடம் கேட்பது? என்று மிகவும் கவலைப் பட்டார்கள்.
அப்போது, இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 – என்ற திட்டத்தைப் பற்றி அறிந்து, தனது அம்மா அதற்காக என்ன செய்ய வேண்டுமோ அதற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் தனக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகவும், தான் அங்கு அனுமதிக்கப்பட்டது முதல் தற்போது இங்கு தங்களின் முன்பு நின்று பேசும் வரை ஒரு ரூபாய் கூட செலவு செய்ய வில்லை என்றும் தெரிவித்தார்.
தனக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மூளைக்கு செல்லும் நரம்பு பாதிக்கப்பட்டு Neuro அறுவை சிகிச்சை செய்ததாகவும், அறுவை சிகிச்சைக்கு பிறகு தான் இப்போது இங்கு நின்று பேசுவதாகவும், அதற்கெல்லாம் காரணம் இந்த திட்டம் தான் என்றும் தெரிவித்தார்.
விபத்து நேரிட்டு எந்நேரத்திலும் மருத்துவமனைக்கு வருபவர்களின் உயிர் காப்பாற்றப்பட்டு அவர்களின் குடும்பத்தினரோடு சேர்க்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு இத்திட்டத்தை அறிமுகம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தன்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
“தோழி விடுதி” திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளி பேசியதாவது;
தோழி விடுதி திட்டத்தின் கீழ் பயன் பெற்றுள்ள பயனாளி சுருதி சுப்பு அவர்கள் பேசும் போது, அவர் திருப்பூர் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு வந்து இளநிலை பட்டப்படிப்பு பயின்று வந்ததாகவும், படிப்பை முடித்துவிட்டு செல்லலாம் என்று இருந்த அவர், ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்துகொண்டே அரசு தேர்வு எழுத தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.
அப்போது, அரசின் சார்பில் நடத்தப்படும் தோழி விடுதி திட்டம் பற்றி அறிந்து, அடையாரில் உள்ள தோழி விடுதியில் தங்கியிருப்பதாகவும், அவ்விடுதியில் உள்ளேயும், வெளியேயும் கேமராக்கள் உள்ளதாகவும், பயோமெட்ரிக் verification உள்ளதாகவும், விடுதியில் தங்கி உள்ளவர்களைத் தவிர வேறுயாரும் உள்ளே வர இயலாது என்றும், நல்ல ஒரு அமைதியான சூழ்நிலையுடன், விடுதி கண்காணிப்பாளர் மற்றும் உடன் தங்கியுள்ளவர்கள் அனைவரும் நட்புணர்வுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், விடுதியில் துணி துவைக்கும் இயந்திரம், Wi-fi வசதி, குளிர்சாதனப் பெட்டி போன்றவை உள்ளதாகவும் தெரிவித்த அவர், தனியார் விடுதியில் தான் 4 வருடங்கள் தங்கியிருந்ததாகவும், இது போன்ற வசதிகள் அங்கு கிடையாது என்றும், மிகக் குறைந்த வாடகையில் அனைத்து வசதிகளுடன் கூடியதாக இவ்விடுதி அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக, போக்குவரத்து வசதிவுள்ள இடத்தில் அமைந்துள்ளதால் பணிபுரியும் இடத்திற்கு சென்று வர எளிதாக இருக்கிறது என்றும், இதனால் பெற்றோர்கள் நிம்மதியாக இருப்பதாகவும் தெரிவித்து, வெளியூரிலிருந்து பணிபுரிய சென்னை வரும் பெண்கள் பாதுகாப்பான முறையில் வசதியுடன் தங்குவதற்கு இந்த திட்டத்தை செயல்படுத்திவரும், முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து, கலைஞர் கைவினைத் திட்டம், பழங்குடியினர் வீட்டு வசதி திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம், கலைஞர் கனவு இல்லம், புதுமைப் பெண் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் ஆகிய திட்டங்களின் மூலம் பயனடைந்த பயனாளிகள் தாங்கள் இத்திட்டங்களின் மூலம் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அடைந்த முன்னேற்றம் மற்றும் பயனடைந்த விவரங்களையும் எடுத்துரைத்து இந்த மகத்தான திட்டங்களை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொண்டனர்.
திராவிட மாடல் ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த நான்காண்டுகளில், மகளிர் விடியல் பயணத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், கலைஞர் கைவினைத் திட்டம், அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர், தோழி விடுதிகள் திட்டம், முதல்வர் மருந்தகங்கள், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48, இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம், வடசென்னை வளர்ச்சி திட்டம், ஊட்டச் சத்தை உறுதிசெய் திட்டம் போன்ற பல்வேறு ஏற்றமிகு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது;
மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறை இணைப்பு கண்ணாடி இழைப்பாலம், சென்னையில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, சென்னை, கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், சென்னையில் முதல்வர் படைப்பகம், கலைஞர் நூற்றாண்டுப் பூங்கா போன்றவையும் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களின் நலனுக்காக மாவட்டங்கள்தோறும் அரசு மாதிரிப் பள்ளிகளும், விளையாட்டு மைதானங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது; விளையாட்டை ஊக்குவிக்கும்பொருட்டு, 44-வது FIDE செஸ் ஒலிம்பிக் போட்டிகள், சென்னையில் கார் ரேஸ் பந்தயங்கள், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள், முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், ஆசிய ஆண்கள் ஹாக்கி போட்டிகள் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
அத்துடன், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டு விளையாட்டுத் துறை மேம்படுத்தப்பட்டு வருவதுடன், விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கணைகளுக்கு உயரிய ஊக்கத் தொகைகளையும் வழங்கப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு அனைத்து துறைகளிலும் பல்வேறு திட்டங்களை அறிவித்து சீரிய முறையில் செயல்படுத்தி வருவதால் நாட்டிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. மேலும், தமிழ்நாட்டினை 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற இலக்கினை அடைந்திட “முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு” என்ற முதலீட்டாளர்கள்
மாநாடுகள் நடத்தி முதலீடுகளை ஈர்த்து, தொழில் துறையில் முன்னணி மாநிலமாக தமிழ்நாட்டினை திகழச் செய்திடவும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில், தொழில் துறையில் பல்வேறு வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து முதலீடுகள் ஈர்க்கப்பட்டுவருதுடன், இதுவரை 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, இதன்மூலம் சுமார் 10 இலட்சம் கோடி முதலீடு பொறுப்புறுதி பெறப்பட்டு, நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளாக சுமார் 32 இலட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று நான்காண்டு நிறைவடைந்து, ஐந்தாம் ஆண்டு தொடங்குவதையொட்டி இன்று நடைபெற்ற விழாவில்;
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், 4 விளையாட்டு வீரர்களுக்கு மொத்தம் ரூபாய் 31 இலட்சத்திற்கான உயரிய ஊக்கத் தொகையும், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில், 4 நபர்களுக்கு ரூபாய் 6 இலட்சத்து 4 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நிதி உதவியையும்;
வேளாண்மை - உழவர் நலத் துறை
வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில், உழவர்களின் மேம்பாட்டிற்காக 4 நபர்களுக்கு பவல் டில்லர், நாற்று நடவு செய்யும் இயந்திரம், விசை களையெடுப்பான், டிராக்டர் ஆகியவை 15 இலட்சத்து 8 ஆயிரத்து 79 ரூபாய் மதிப்பீட்டில் 59 ஆயிரம் ரூபாய் அரசு மானியத்துடனும், மேலும், 2023-2024 ஆம் ஆண்டிற்கான மாநில அளவில் சிறப்பாக சாகுபடி செய்த 11 விவசாயிகளுக்கு உதவிகளும்; வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை நகர்ப்புறப் பகுதிகளில் பட்டாக்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட நெடுங்காலமாக வீடு கட்டி குடியிருக்கும் 15 நபர்களுக்கு நிலங்களை வரன்முறைப்படுத்தி பட்டாக்கள்;
சிறப்புத் திட்டச் செயலாக்கம்/மகளிர் மேம்பாட்டுத் துறை
சிறப்புத் தட்டச் செயலாக்கம் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை சார்பில், சுய உதவிக் குழு கடன் உதவிகளை 52 நபர்களுக்கும் முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் வழங்கினார்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம் மற்றும் கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் 59 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளும்;
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், 20 நபர்களுக்கு வீட்டுவசதி கடன் 5 நபர்களுக்கும், 4 நபர்களுக்கு திருமண உதவித் தொகை, ஓய்வு பெற்ற 8 நபர்களுக்கு நிதியுதவிகள், இயற்கை மரணம் அடைந்த 14 நபர்களுக்கு நிதி உதவிகளும், விபத்தில் உயிரிழந்த 3 நபர்களுக்கு நிதி உதவிகளும், பணிபுரியும் இடத்தில் உயிரிழந்த ஒரு நபருக்கு நிதி உதவியும்;
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில், ஆதிராவிடர்கள், பழங்குடியினர்களுக்கான CM ARISE தொழில் முனைவுத் திட்டத்தில் 50 நபர்களுக்கு கடன் உதவிகளும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிரை நில உடைமையாளர்களாக்கும் நோக்கத்தில் நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தின் கீழ் 8 நபர்களுக்கு உதவிகளும்;
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்படோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில், 10 நபர்களுக்கு சலவை பெட்டிகளும், 9 நபர்களுக்கும் தையல் இயந்திரங்களும், 13 நபர்களுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களும், முஸ்லீம் மகளிர் உதவும் சங்கங்களின் கீழ் 12 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், டாம்கோ கடன் 2 நபர்களுக்கும், டாப்செட்கோ தனி நபர் கடன் 8 நபர்களுக்கும், டாப்செட்கோ குழுக் கடன் 14 நபர்களுக்கும் முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
மாற்றுத் திறனாளிகள் நலத் துறை:
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், திறன்பேசி (Smart Phone), காதொலிக் கருவிகள், பார்வையற்றோருக்கான நவீன வாசிக்கும் கருவிகள் (Modular Reading Device) ஆகிய நலத்திட்ட உதவிகளை 5 மாற்றுத் திறனாளிகளுக்கும்;
நெடுஞ்சாலைகள் துறை:
நெடுஞ்சாலைகள் துறை சார்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நெடுஞ்சாலைத் துறையில் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 75 நபர்கள் மற்றும் தட்டச்சர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 24 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்றையதினம் வழங்கினார்.