புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட மாலையீடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் உள்ளிட்ட ஏராளமான திமுகவின் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பிறகு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றைக்குமே இந்திய அரசு ஒற்றுமைக்காக இருக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கக் கூடியவர். எனவே தாக்குதல் நடவடிக்கையில் அவரது முடிவு தான் எங்களின் முடிவு. அவரது நிலைப்பாடு தான் எங்களை நிலைப்பாடு.
மதுரை ஆதீனத்தை மத அடையாளங்களை காண்பித்து தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. அவர் தவறான சாலையில் சென்றபோது அதனால் ஏற்பட்ட விபத்து தான் அது. மதுரை ஆதீனத்தை தாக்குதல் நடத்தி யார் என்ன பயன் அடையப் போகிறார்கள் தெரியவில்லை. ஒருவேளை பாஜகவின் ஆதாயத்திற்காக அவர் இப்படி சொல்கிறாரா அல்லது வேறு யாராவது சொல்ல வேண்டும் என்று அச்சுறுத்தலை கொடுத்தார்களா என்று தெரியாது எங்களைப் பொறுத்தவரை மதுரை ஆதினத்திற்கு எந்தவித அச்சுறுத்தல்களும் இந்த ஆட்சியில் கிடையாது. மதுரை ஆதினத்தின் மீது குற்றச்சாட்டு புகார்கள் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படுமே தவிர பொய் குற்றச்சாட்டுகளுக்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
திமுகவின் நான்காண்டு ஆட்சி மக்களுக்கு வேதனை அல்ல எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் வேதனை. வேறு யாருக்கும் வேதனை இல்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு நாங்கள் கொடுத்திருக்கின்ற அளவிற்கு பாதுகாப்பு வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. உயர்கல்வியில் இங்குள்ள பெண்கள் முன்னேறி வந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டுப் பெண்கள் 58 சதவீதம் அளவிற்கு பணிக்கு செல்லும் வகையில் முன்னேறியுள்ளனர்" என்று கூறினார்.