ஒன்றியத்தில் பா.ஜ.க ஆட்சி அமைந்ததில் இருந்தே இந்தியை திணிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு அதற்கான முன்னெடுப்புகளை வேகமாக எடுத்து வருகிறது. மேலும் ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளை தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.
இது தவிர ஒன்றிய அரசின் அலுவலங்களில் இந்தியை பயன்படுத்த சொல்வது, அலுவல் பூர்வ கடித பரிமாற்றம் போன்றவற்றுக்கு ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை பயன்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
தற்போது மும்மொழி கொள்கை மூலம் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்க பார்க்கிறது. மேலும் மும்மொழி கொள்கையை ஏற்கவில்லை என்றால் கல்விக்கான நிதியை தரமுடியாது என மாநிலங்களை மிரட்டி வருகிறது.
மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை வழங்கும் சென்னை மண்டல வானிலை மையம் தனது அன்றாட வானிலை அறிக்கையை தற்போது இந்தியிலும் வழங்கத் தொடங்கியுள்ளது.
தற்போது இந்திய ரயில்வே பயணக் கட்டுரைக்கான போட்டியிலும் இந்தியை ஒன்றிய அரசு திணித்துள்ளது. இந்திய ரயில்வே துறை பயணிகளுக்கான ஒரு கட்டுரைப் போட்டியை நடத்துகிறது. இதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இப்போட்டியில் பங்கேற்க விரும்புவர்கள் தங்களது ரயில் பயண அனுபவத்தை ’இந்தி’ மொழியில் மட்டுமே எழுதி அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த இந்தி திணிப்பு அறிவிப்புக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கேடசன், ”இந்திய ரயில்வே பயணக் கட்டுரைகளுக்கான போட்டியை அறிவித்துள்ளது. ஆனால் இந்தியில் தான் எழுதப்பட வேண்டும் என்று நிபந்தனை.
இவர்களின் நோக்கம் பயணத்தை நினைவுக் கூறுவதல்ல, இந்தியை திணிப்பது மட்டுமே. இரயில்வே நிர்வாகமே,போட்டி விதிகளை மாற்று” என சமூகவலைதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.