தமிழ்நாடு

நீட் தேர்வு - தாலி to ஆடையில் அதிக பட்டன்கள் : மாணவர்களை வாட்டி வதைக்கும் ஒன்றிய அரசு!

தமிழ்நாட்டில் நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் பல்வேறு கெடுபிடிகளுக்கு இடையே மாணவ-மாணவிகள் நீட் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

நீட் தேர்வு - தாலி to ஆடையில் அதிக பட்டன்கள் : மாணவர்களை வாட்டி வதைக்கும் ஒன்றிய அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2025 ஆம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்பு நீட் நுழைவுத் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த நீட் நுழைவுத் தேர்வை, நாடு முழுவதும் மொத்தம் 23 லட்சம் மாணவ, மாணவியரும், தமிழ்நாட்டில் மட்டும் ஒன்றரை லட்சம் மாணவ, மாணவியரும் எழுதினர்.

சென்னை, மதுரை, திருச்சி உட்பட மொத்தம் 31 நகரங்களில், நீட் நுழைவுத் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னையில் மட்டும் 40 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தென்காசி, திருப்பத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மட்டும் நீட் நுழைவுத் தேர்வு மையங்கள் அமைக்கப்படவில்லை. வழக்கம்போல் கடும் சோதனைக்கு பிறகு மாணவ-மாணவிகள் நீட் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

திருப்பூரில் உள்ள நீட் தேர்வு மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியின் உடையில் அதிக பட்டன்கள் இருந்ததாக கூறி, தேர்வு மைய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாணவியை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர். இதனைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக நீட் தேர்வு மையத்தில், தேர்வு எழுத வந்த மாணவியிடம் தேர்வு மைய அதிகாரிகள், அவர் அணிந்திருந்த தாலியை கழட்டி கொடுக்குமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து அந்த மாணவி தாலி, மூக்குத்தி, மெட்டி, கொலுசு ஆகியவற்றை பெற்றோரிடம் கழட்டி கொடுத்து விட்டு தேர்வு எழுதச் சென்றார்.

தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களின் ஹால் டிக்கெட்டில் தேர்வு மைய முகவரி தவறாக பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனால் தர்மபுரியில் தேர்வு எழுத வேண்டியவர், சேலம் சென்று தேர்வு மையத்தை தேடி அலைந்துள்ளார். ஆனால் அங்கு சென்றபோதுதான், தர்மபுரியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மீண்டும் தர்மபுரி தேர்வு மையத்திற்கு விரைந்த மாணவர்கள் தேர்வு மையத்திற்கு வருவதற்கு தாமதமானதால் நீட் தேர்வை எழுதமுடியாமல் போனது.

இதேபோல் தஞ்சை கிறிஸ்தவ பெண்கள் மேல்நிலைப்பள்ளி நீட் தேர்வு மையத்தில் தேர்வு எழுதச் சென்ற மாணவிகளிடம் அவர்கள் கொண்டு வந்த நுழைவு சீட்டில் 6-க்கு 4 அளவிலான புகைப்படங்கள் ஒட்ட வேண்டும் என கூறியதால் கடைசி நேரத்தில் பதற்றமடைந்த மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் அருகில் இருந்த போட்டோ ஸ்டுடியோவிற்கு அவசரமாக அவரசமாக சென்று புகைப்படம் எடுத்தனர். புகைப்படத்தில் பெயர் மற்றும் அப்ளிகேஷன் தேதி டைப் செய்து புதிதாக கொடுக்கப்பட்ட பிறகு மீண்டும் மாணவ மாணவிகள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தேர்வு மையத்திற்கு வந்த உடனேயே இது தொடர்பாக அறிவிப்பு கொடுத்திருந்தால் முறையாக எடுத்து வந்திருப்போம் எனவும், கடைசி நேரத்தில் இப்படி ஒரு பதற்றம் ஏற்பட்டிருக்காது எனவும் பெற்றோர்கள் தெரிவித்தனர். இப்படி ஒவ்வொரு ஆண்டும் நீட் நுழைவுத் தேர்வு மாணவர்களை வதைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories