முரசொலி தலையங்கம்

”பிரதமர் மோடி நிம்மதியாக எப்படித் தூங்குகிறார்? - அதானிக்காக விழித்திருக்கிறாரா?” : முரசொலி சரமாரி கேள்வி

குஜராத்தோ, கேரளாவோ, தமிழ்நாடோ, எந்த மாநிலங்களுக்கும் பாதுகாப்பு இல்லை.

”பிரதமர் மோடி நிம்மதியாக எப்படித் தூங்குகிறார்? - அதானிக்காக விழித்திருக்கிறாரா?” : முரசொலி சரமாரி கேள்வி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (05/05/2025)

பிரதமர் மோடிக்கு எப்படி தூக்கம் வருகிறது?

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்து உரையாற்றி இருக்கிறார் பிரதமர் மோடி. அங்கேயும் அவரை ‘இந்தியா’ கூட்டணிதான் மிரள வைத்திருக்கிறது. “இந்தியா கூட்டணியின் முக்கியத் தூணாக இருக்கும் பினராயி விஜயனும், சசிதரூரும் ( காங்கிரசை சேர்ந்தவர்) இங்கே என்னோடு பங்கேற்றதால் பலர் தூக்கத்தை இழப்பார்கள்” என்று பேசி இருக்கிறார் பிரதமர் மோடி.

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து ஓராண்டு ஆனபிறகும் ‘இந்தியா’ கூட்டணி அவரை தூங்க விடாமல் வைத்திருக்கிறது என்பதற்கு உதாரணம்தான் இந்தப் பேச்சு.

நடப்பது அரசு விழா. கேரளாவில் நடக்கிறது. இதில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்து கொள்கிறார். கேரளாவைச் சேர்ந்த சசி தரூர் கலந்து கொள்கிறார். இதில் என்ன புதுப் பெருமை கிடைத்துவிடப் போகிறது பிரதமர் மோடிக்கு?

‘இந்தியாவில் நல்லாட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் மோடி’ என்று பினராயி விஜயன் பேசி விட்டாரா? அல்லது ‘இந்தியா கூட்டணி அமைத்து மோடியை எதிர்த்த பாவத்தைச் செய்துவிட்டோம்’ என்று பினராயி விஜயனும் சசிதரூரும் பேசிவிட்டார்களா? அப்படி எதுவும் நடக்கவில்லை. ஏன் இந்த ‘டிராமா’? இப்போது ஏன் இது அவருக்குத் தேவைப்படுகிறது?

பட்டப்பகலில் இந்திய நாட்டுக்குள் வந்து 28 பேரை சுட்டுப் பொசுக்கிவிட்டுப் போயிருக்கிறார்கள் பயங்கரவாதிகள். இதன்பிறகும் பிரதமர் மோடிக்கு எப்படி தூக்கம் வருகிறது?

‘கேரளாவில் இவ்வளவு பெரிய துறைமுகம் அமைக்கும் அதானியைப் பார்த்து குஜராத் மக்கள் கோபித்துக் கொள்வார்கள். ஏனென்றால் குஜராத்தில் கூட இவ்வளவு பெரிய துறைமுகம் இல்லை’ என்று அந்த மேடையில் அதானிக்கு கிச்சுக்கிச்சு மூட்டும் வகையில் பிரதமரால் எப்படி பேச முடிகிறது?

பகல்காமில் கொல்லப்பட்டவர் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லப் போகவில்லை. காஷ்மீர் செல்லவில்லை. ஆனால் எப்போதோ நடக்கப் போகிற பீகார் தேர்தலுக்கு இப்போதே அவரால் போக முடிகிறது. அதானிக்காக கேரளாவை நோக்கி ஓடி வர முடிகிறது. ஆனால் பயங்கரவாத சம்பவத்தில் இறந்து போன குடும்பங்களுக்கு அஞ்சலி செலுத்தவோ, ஆறுதல் சொல்லவோ போக முடியவில்லை.

“இந்த நாட்டிலே இந்த நாட்டின் வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இந்த நாட்டின் எல்லைக்கு பாதுகாப்பு இல்லை. உள்நாட்டிலே இருக்கின்ற மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. அது குஜராத்தோ, கேரளாவோ, தமிழ்நாடோ, எந்த மாநிலங்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இந்த மாதிரி எதற்குமே பாதுகாப்பு இல்லாத அரசாங்கம் இருக்கிறது என்று சொன்னால், நமது கடமை என்னவென்று சொன்னால் அந்த அரசாங்கத்தைத் தூக்கி எறிய வேண்டியது நமது கடமையாக அமைந்திருக்கிறது” என்று குஜராத் முதலமைச்சராக இருந்த போது மோடி பேசினார். 11 ஆண்டுகளாக இந்தியாவை அவர் ஆள்கிறார். இதுதான் நிலைமை. அவருக்கு எப்படி நிம்மதியாக தூக்கம் வருகிறது.

பதான்கோட் தாக்குதலில் 7 வீரர்கள் பலி- பொம்பொரியில் எட்டு ராணுவ வீரர்கள் பலி - உரி தாக்குதலில் 19 படைவீரர்கள் பலி - போபால் வெடிகுண்டு தாக்குதலில் எட்டுப் பேர் காயம் - அமர்நாத் கோவில் தாக்குதலில் ஏழு பேர் பலி - லெத்திபோரா தாக்குதலில் 5 பாதுகாப்பு வீரர்கள் பலி - புல்வாமா தாக்குதலில் 40 படைவீரர்கள் பலி - இரஜோரி ராணுவ முகாம் தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் பலி - ஷோபியான் பகுதியில் நடந்த தாக்குதலில் 2 பேர் பலி - பகல்காம் தாக்குதலில் 28 பேர் பலி இவை அனைத்தும் அவரது ஆட்சியில் நடந்த தாக்குதல்கள். அவரால் எப்படி நிம்மதியாக தூங்க முடிகிறது?

”பிரதமர் மோடி நிம்மதியாக எப்படித் தூங்குகிறார்? - அதானிக்காக விழித்திருக்கிறாரா?” : முரசொலி சரமாரி கேள்வி

2014 முதல் இந்திய எல்லைக்குள் சீன ஊடுருவல் அதிகமாகி வருகிறது. 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீன தரப்பில் 40 வீரர்களும் பலியானாவர்கள். அருணாச்சல பிரதேசத்தில் 30 இடங்களுக்கு சீன மொழியில் பெயர்கள் வைத்து அதிர்ச்சியைக் கொடுத்தது சீனா. 2017 ஆம் ஆண்டு 6 பகுதிகளுக்கும், 2021 ஆம் ஆண்டு 15 பகுதிகளுக்கும், 2023 ஆம் ஆண்டு 11 பகுதி களுக்கும், 2024 ஆம் ஆண்டு 30 பகுதிகளுக்கு பெயர் வைத்தது சீனா. “2000 சதுர கி.மீ. இந்திய பூமியை சீனா அபகரித்திருக்கிறது. சீனா அபகரித்துள்ள நிலம் ஒரு சிறிய தீவை விட 1000 மடங்கு பெரியது” என்று குற்றம் சாட்டினார் முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். இதன்பிறகும் பிரதமர் மோடியால் நிம்மதியாக எப்படி தூங்க முடிகிறது?

கடந்த பத்தாண்டு காலத்தில் 3100 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டார்கள்.கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் 560 மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அண்டை நாடான இலங்கை, இந்திய மீனவர்களை வேட்டையாடுவது நிற்கவில்லை. ‘பலவீனமானவர் இந்தியாவை ஆள்வதால் தான் இந்தத் தாக்குதல்கள்’ என்று மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது மோடி சொன்னார். ஆனால் அவரது ஆட்சியிலும் அதுதான் நடக்கிறது. அவரால் எப்படி நிம்மதியாகத் தூங்க முடிகிறது?

அமெரிக்கா மீது வரிகளையும் பிற தடைகளையும் விதித்துள்ள ‘மோசமான நாடுகளில்’ ஒன்றாக இந்தியாவை பட்டியலிட்டுள்ளது அமெரிக்கா. இதன் காரணமாக இந்தியா மீது 27 விழுக்காடு வரி விதித்துள்ளது அமெரிக்கா. இதுவரை 2 விழுக்காடு வரி மட்டுமே விதிக்கப்பட்டு வந்த நிலையில், இந்தியா மீது தற்போது 27 விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டிக்காத பிரதமர் மோடி, நிம்மதியாக எப்படித் தூங்குகிறார்? அதானிக்காக மட்டுமே விழித்திருக்கிறாரா?.

banner

Related Stories

Related Stories