தமிழ்நாடு சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
1. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலப் பள்ளி விடுதிகள் ரூ.4 கோடியே 15 லட்சத்து 16 ஆயிரம் செலவில் கல்லூரி விடுதிகளாக நிலை உயர்த்தப்படும்.
2. வாடகை கட்டடங்களில் இயக்கும் 7 கல்லூரி மாணவியர் விடுதிகள் ரூ.47 கோடியே 84 லட்சம் செலவில் சொந்தக் கட்டடம் கட்டப்படும்.
3. ரூ.3 கோடி செலவில் புதியதாக 5 கல்லூரி மாணவியர் விடுதிகள் துவங்கப்படும்.
4. ரூ.30 கோடி செலவில் விடுதிகளுக்கு சிறப்பு பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
5. 12 விடுதிகளுக்கு ரூ.2 கோடியே 81 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் கட்டப்படும்.
6. 37 விடுதிகளில் மாணவர்களின் எண்கிக்கை உயர்த்தப்படும். இதனால் 885 மாணவர்கள் பயனடைவர்.
7. விடுதியில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.16 கோடியே 24 லட்சத்து 68 ஆயிரம் செலவில் Welcome Kit வழங்கப்படும்.
8. 15 தனியார் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உணவு மானியத் தொகை உயர்த்தி வழங்கப்படும்.
9. 318 மாணவர்கள் விடுதிகளில் இன்வெர்ட்டர், குளிர்சாதனப்பெட்டி, தண்ணீர் சுத்திகரிப்புக் கருவி வழங்கப்படும்.
10. கல்லூரி விடுதிகளில் தங்கி படிக்கும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொடர்பான பயிற்சி வழங்கப்படும்.
11. மலைப் பகுதியில் அமைந்துள்ள விடுதி மாணவர்களுக்கு இரண்டு அடுக்கு தேக்கு மரக்கட்டில்கள் வழங்கப்படும்.
12. விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவிகளுக்கு சுய பாதுகாப்பு மற்றும் தன்னம்பிக்கையினை ஊக்கப்படுத்தும் வகையில் தற்காப்புக் கலையில் அடிப்படை பயிற்சி வழங்கப்படும்.
13. கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் விடுதி மேலாண்மை தகவல் அமைப்பினை செயல்படுத்த திட்டக் கண்காணிப்புப் பரிவு அமைக்கப்படும்.
14. வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியை மேற்கொள்வதற்காக டாப்செட்கோ மூலம் கடனுதவி வழங்கப்படும்.
15. மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்கத்திற்கு தடையில்லா மின்சாதனங்களும், கள்ளர் சீரமைப்பு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு இன்வெர்ட்டர் வசதியும் ஏற்படுத்தப்படும்.
16. கள்ளர் சீரமைப்பு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
17. கிரமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் சலவைத் தொழிலில் ஈடுபட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இன மக்களுக்கு கரியால் இயங்கும் பித்தளைத் தேய்ப்புப் பெட்டிகள் மற்றும் LPG மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகள் வழங்கப்படும்.
18. சீர்மரபினர் நல வாரியத்திற்கு நிதி ஒதுக்கீடு ரூ.1 கோடி உயர்த்தி வழங்கப்படும்.
19. சீரமரபினர் நல வாரிய உறுப்பினர்களுக்கு மூக்குக்கண்ணாடி உதவித்தொகை ரூ.500 லிருந்து ரூ,750 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
20. தமிழ்நாடு வன்னியகுல சத்திரியர் பொது அறநிலைப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள் வாரியத்திற்கு அரசால் வழங்கப்படும் தொடர் மானியம் உயர்த்தி வழங்கப்படும்.