புரட்சிக்கவிஞரின் 135 ஆம் ஆண்டு பிறந்த நாள்! உறுதியுடன் ஈரோட்டுப் பாதையில் இறுதிவரை நின்றவர், வென்றவர்! எந்த ஆண்டிலும் அவர் பெறாத பெருமை, புகழை, உலகளாவிய நிலையில், இவ்வாண்டு அவர் பெறுகிறார்! எத்திக்கும் தித்திக்கும் நமது முதலமைச்சரின் அறிவிப்பால் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
‘புரட்சிக்கவிஞர் இவர் ஒருவரே’ என்று சுயமரியாதைச் சூரியன் தந்தை பெரியார் அவர்களாலும், அவர்தம் கொள்கைக் குடும்பத்தின் மூத்த முன்னோடி பேரறிஞர் அண்ணாவினாலும், முத்தமிழறிஞர் கலைஞராலும் அழைக்கப்பட்டவர் ஆன ஒப்பற்ற உலகமகா கவிஞர் நமது புரட்சிக்கவிஞர்.
புரட்சிக்கவிஞரின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம் என்பது. ‘பாரதிதாசன்’ என்று அவரே பெயரிட்டுக் கொண்டார். அந்தப் பெயர் அனைவராலும் அழைக்கப்பட்டு, நிலைத்துவிட்ட பெயராகி, அகிலமும் அறிந்த, அந்த ஓர் ஒப்பற்றக் கவிஞர் புரட்சிக் கவிஞரின் 135 ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று (29.4.2025).
எத்திக்கும் தித்திக்கும் நமது முதலமைச்சரின் அறிவிப்பாணை!
வேறு எந்த ஆண்டிலும் அவர் பெறாத பெருமை, புகழை, உலகளாவிய நிலையில், இவ்வாண்டு அவர் பெறுகிறார்!
தமிழ்நாட்டின் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் ஒப்புவமை இல்லா நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது எத்திக்கும் தித்திக்கும் அறிவிப்பாணையே அதற்குக் காரணமாகும்.
ஆம்!
புரட்சிக்கவிஞரின் பிறந்த நாளில் – ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 29 ஆம் தேதி தொடங்கி, மே 5 ஆம் தேதிவரையில் ஒரு வாரம் தமிழ் மொழி வளர்ச்சி வாரமாகக் கொண்டாடப்படவேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நமது முதலமைச்சர் அறிவித்து, தமிழ்கூறும் நல்லுலகத்தை இன்ப அதிர்ச்சியில் தள்ளினார்!
‘‘ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே,
தமிழ் ஆட்சியின் மாட்சியில், கூடுவோமே!’’
என்று குவலயத்தாரும் குதித்து மகிழ, ஒரு பொன்னான வாய்ப்பை பரிசளித்திருக்கிறார் நமது ‘திராவிட மாடல்‘ ஆட்சியின் முதலமைச்சர்!
புரட்சிக்கவிஞரால் நாம் பெறும் பயன்கள் உணர்ந்து, தமிழ் என்ற எங்கள் தன்மானப் போர்க் கருவிக்கு முதலமைச்சர் அவர்கள் கூர் தீட்டியுள்ளார்.
ஹிந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்பை ‘டில்லி’ திட்டமிட்டு நடத்தும் இவ்வேளையில், இவ்வறிவிப்பு நமது பாடி வீட்டின் பாசறை முழக்கம் போன்றதல்லவா?
தமிழ் மானம், தன்மானம் பாதுகாப்புப் பெறுகிறது!
புரட்சிக்கவிஞரைப் பெருமைப்படுத்தியதால், ஆட்சி பெருமையடைகிறது; அதன் கொற்றத்திற்குக் கீழுள்ள குடிகளின் தமிழ் மானம், தன்மானம் பாதுகாப்புப் பெறுகிறது!
வஞ்சகர்கள் வீசும் வலைகள் அறுத்தெறியப்படுகின்றன!
புரட்சிக்கவிஞர் ஓர் உலகப் பார்வை கொண்ட ஒப்பற்ற மானிட உரிமைப் போராளி! அப்பழுக்கற்ற சுயமரியாதைச் சொற்கோ – இலக்கிய உலகின் ஒப்புவமையற்ற மாமன்னர்!
அவரது பார்வை பல ஆண்டுகளுக்கு முன்பே உலகப் பார்வை; குறுகிய வட்டமல்ல! புதியதோர் உலகு படைத்தவர் அவர்!
உறுதியுடன் ஈரோட்டுப் பாதையில் இறுதிவரை நின்றவர், வென்றவர்!
‘‘எதிரிகள் கோடி இட்டழைத்தாலும் தொடேன்’’ என்று உறுதியுடன் ஈரோட்டுப் பாதையில் இறுதிவரை நின்றவர், வென்றவர்.
வாழ்வில் வீழ்ச்சியுற்ற மக்கள், அவரால் எழுச்சி பெறுவர்!
‘‘விசை ஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்’’ என்ற அவரது கவிதை வரிகளைப் பரப்பி, நமது முதலமைச்சருக்கு நன்றி கூறுகிறோம்!