தமிழ்நாடு

”கலவரங்களை தூண்டலாம் என்று நினைப்பவர்களுக்கு தமிழ்நாடே பதிலடி தரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

கலவரங்களை தூண்டலாம் என்று சிலர் நினைத்தாலும், தமிழ்நாட்டு மக்களே அதை முறியடித்துவிடுகிறார்கள்.

”கலவரங்களை தூண்டலாம் என்று நினைப்பவர்களுக்கு தமிழ்நாடே பதிலடி தரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதிலுரையில், தமிழ்நாடு அமைதியான மாநிலமாக திகழ்ந்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்," அனைத்துத் துறை வளர்ச்சி - அனைத்து மாவட்ட வளர்ச்சி” என்று குறிப்பிட்டு திட்டங்களைத் தீட்டியிருக்கிறோம். ஏப்ரல் மாதம் முழுவதும் தமிழ்நாட்டிற்கு ஏற்றம் அளிக்கும் மாதமாக அமைந்ததால் மகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் இருக்கிறேன்.

அமைச்சர் பெருமக்கள் இந்த மாமன்றத்தில் பேசும்போது, தமிழ்நாடு எந்தெந்த வகையில் எல்லாம் வளர்ந்திருக்கிறது… அவர்களின் துறைகள் எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்று பெருமையுடன் குறிப்பிட்டு பேசினார்கள். அவர்கள் எல்லோருக்கும் என்னுடைய பாராட்டுகள்! வாழ்த்துகள்!

இந்த அவையை மாண்பு தவறாமால் கண்ணியத்துடன் கட்டுக்கோப்பாகவும் மக்களாட்சி இலக்கணம் சொல்லும் வகையில் வழிநடத்திய பேரவைத் தலைவர் அவர்களுக்கும், பேரவை துணைத் தலைவர் அவர்களுக்கும் இந்த மாமன்றத்தின் சார்பாக என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைச்சர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது உங்கள் துறையை வளர்தெடுத்ததற்கு, உங்களின் திறமை காரணமாக இருந்தாலும், இந்த வளர்ச்சிக்கு அடிப்படையான - முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. அதுதான் மாநிலத்தின் அமைதி! அதற்கு என்னுடைய துறையான காவல்துறை தான் காரணம்.

ஏன் என்றால், அமைதியான மாநிலத்தில்தான் தொழில் வளரும்; தொழிற்சாலைகள் வரும்; கல்வி மேம்படும்; பெண்களும் இளைஞர்களும் முன்னேற்றம் காண்பார்கள்; விளையாட்டுத் துறை மேம்படும்; உற்பத்தியும் ஏற்றுமதியும் அதிகரிக்கும்; சுற்றுலா பயணிகள் வருவார்கள்; கோயில்கள் தழைக்கும்! தமிழ்நாட்டில் நிலவும் இந்த அமைதிக்குக் காரணம், என்னுடைய துறையான, காவல்துறை!

சட்டம் – ஒழுங்கை முறையாக பேணி, இந்த சாதனைகளுக்கு அடித்தளமிட்ட காவல்துறை சார்ந்த அனைவருக்கும் நானும் – நீங்களும் – தமிழ்நாட்டு மக்களும் நன்றிக்குரியவர்கள்!

சட்டம் – ஒழுங்கு சீராகவும் – தமிழ்நாடு அமைதிமிகு மாநிலமாகவும் இருப்பதால்தான், பெரிய அளவிலான சாதிச் சண்டைகளோ – மதக் கலவரங்களோ – பெரிய கலவரங்களோ – வன்முறைகளோ இல்லை. கலவரங்களை தூண்டலாம் என்று சிலர் நினைத்தாலும், தமிழ்நாட்டு மக்களே அதை முறியடித்துவிடுகிறார்கள்.

இதெல்லாம் நடந்திருந்தால்தான், சட்டம் – ஒழுங்கு சரியில்லை என்று புழுதி வாரி தூற்ற முடியும்? மொத்தத்தில், சட்டம் – ஒழுங்கில் கல் விழாதா என்று துடிப்பவர்கள் ஆசையில்தான் மண் தான் விழுந்திருக்கிறது!

நான் இன்னும் சொல்கிறேன், குற்றச் சம்பவம் நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள். ஏதாவது சில இடங்களில் கவனக்குறைவாக சில தவறுகள் நடந்திருந்தால்கூட அது சுட்டிக்காட்டப்பட்டால் உடனடியாக அதை திருத்திக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.

“நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்”-என்று பிடிவாதமாக இருப்பவன் இல்லை நான். மக்களாட்சியில் எல்லோருடைய கருத்துகளையும் கவனித்து – ஆராய்ந்து – சரியானவற்றை சரியான நேரத்தில் செய்யவேண்டும் என்று நினைப்பவன் நான்!

உள்நோக்கத்தோடு – அரசியல் ஆதாயத்திற்காக தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு சரியில்லை என்று பேசுபவர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்: இது, மணிப்பூர் அல்ல! இது, காஷ்மீர் அல்ல! உத்தரப் பிரதேச கும்பமேளா மரணங்கள் இங்கு நடக்கவில்லை! இது, தமிழ்நாடு! அதை மறந்துவிடாதீர்கள்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories