கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநில மாநாடு கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி வாசிக்கப்பட்டது. அந்த வாழ்த்து செய்தி வருமாறு :
எந்த இலட்சியத்திற்காக ஓர் இயக்கம் உருவாக்கப்பட்டதோ அந்த இலட்சியப் பாதையில் உறுதியுடன் பயணித்து, ஒரு நூற்றாண்டு கடந்த நிலையில் அந்த இலட்சியங்களை வென்றெடுத்து, மறுமலர்ச்சி மிக்க சமுதாயத்தை உருவாக்கிய பெருமிதத்துடன், கம்பீரமாக நடைபோடும் சிங்கம் திரும்பிப் பார்க்கும் அரிமா நோக்கு போல, பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு கொண்டாடப்படுகிறது.
இந்தப் பெருமை இந்தியாவில் வேறு எந்த இயக்கத்திற்கும் கிடையாது என்பதுதான் திராவிட இயக்கத்தின் வரலாற்று சாதனை.
சுயமரியாதை இயக்கத்தைத் தந்தை பெரியார் உருவாக்கிய ஈரோடு நகரை உள்ளடக்கிய அன்றைய ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் கோயம்புத்தூரில் இந்த சிறப்பான நிகழ்வை இரண்டு நாள் விழாவாகக் கொண்டாடும் திராவிட இயக்கத் தமிழர் பேரவைக்கும், அதன் பொதுச்செயலாளர் என் அன்பிற்குரிய திராவிட அறிவுசார் சொத்து பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களுக்கும், சுயமரியாதை இயக்கத்தின் வழிவந்த அரசியல் இயக்கமும், சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளையும் தீர்மானங்களையும் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் நிறைவேற்றி இந்தியாவுக்கே வழிகாட்டியதுமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் திராவிட மாடல் அரசின் முதலமைச்சராகவும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சமுதாய ஏற்றத் தாழ்வுகளை அகற்றும் சமூகநீதிக் கொள்கை, அதன் மூலமாக அனைத்து சமூகங்களுக்கும் கல்வி வேலைவாய்ப்பு ஆளுக்கு இணையாக பெண்களை முன்னேற்றும் உரிமைகளை வழங்கும் பாலியல் சமத்துவம். கிராமங்களுக்கும் நவீனக் கட்டமைப்புகளை அளிக்கும் அறிவியல் தொழில்நுட்பங்கள், சாதி மத வன்மங்களைத் தவிர்த்து சகோதரத்துவ வாழ்க்கை முறை, ஆதிக்க மொழிகளுக்கு இடம் கொடுக்காமல் தாய்மொழியான தமிழ் மொழியைக் காக்கும் உணர்வு எனத் தமிழ்நாடு எந்தெந்த துறைகளில் இந்தியாவுக்கே வழிகாட்டும் அளவில் முன்னேறியிருக்கிறதோ அவை அனைத்தும் நாற்றாண்டு காணும் சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளே, நாம் அனைவரும் தந்தை பெரியாரின் கொள்கை வாரிசுகள், பேரறிஞர் அண்ணாவின் கொள்கைத் தம்பிகள், முத்தமிழறிஞர் கலைஞரின் கொள்கை வழி உடன்பிறப்புகள். அந்த உணர்வுடன்தான் திராவிட இயக்க தமிழர் பேரவை நடத்துகின்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அன்புத் தங்கை கனிமொழி அவர்களும், துணைப் பொதுச் செயலாளர் அன்புச் சகோதரர் ஆ.இராசா அவர்களும், மாண்புமிகு துணை முதலமைச்சர் இளைஞரணிச் செயலாளர் அன்புத் தம்பி உதயநிதி அவர்களும், சட்டமன்ற உறுப்பினர்கள், கழகத்தின் மாணவரணி உள்ளிட்ட பல அணிகளைச் சேர்ந்தவர்களும் கொள்கை உணர்வுடன் பங்கேற்றுச் சிறப்பித்து வருகிறார்கள்.
தந்தை பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கம்தான் பேரறிஞர் அண்ணாவை நமக்குத் தந்தது. முத்தமிழறிஞர் கலைஞரை வளர்த்தது. இந்தியாவில் ஒரு மாநிலக் கட்சி 75 ஆண்டுகள் நிலைத்து நின்று, பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டபோதும் பவள விழா ஆண்டிலும் அது ஆட்சியில் இருக்கிறது என்றால் அது திராவிட முன்னேற்றக் கழகம்தான். அதற்குக் காரணம் சுயமரியாதை இயக்கம் வகுத்துத் தந்த கொள்கைகள் இன்றைய திராவிட மாடல் அரசின் செயல் வடிவங்களாக இருப்பதுதான்.
நாம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோமோ அதுபோல் நாமும் மற்றவர்களை நடத்த வேண்டும் என்பதுதான் சுயமரியாதை.
உரிமைகள் மறுக்கப்படுகின்ற யாராக இருந்தாலும் அவர்களின் குரலாக ஒலிப்பதுதான் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம். சுயமரியாதை இயக்கம் முழங்கிய உரிமைகளை திராவிட மாடல் அரசு தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்தியாவை மதவாதமும் வெறுப்புணர்ச்சியும் மொழி ஆதிக்கமும் சேர்ந்து கொண்டு நாட்டின் ஒற்றுமையையும் பன்முகத்தன்மையையும் சிதைக்க முற்படுகின்ற ஆபத்தான சூழலில், தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற சுயமரியாதைத் தத்துவம் இன்று இந்தியா முழுவதும் தேவைப்படுகிறது.
மனிதர்களிடையே அன்பையும் சகோதரத்துவத்தையும், மதங்களிடையே நல்லிணக்கத்தையும், அந்தந்த மாநிலங்களின் தாய்மொழிக்கான உரிமைகளையும், ஜனநாயக விழுமியங்களையும் மீட்டெடுக்கச் சுயமரியாதை இயக்கத்தின் கருத்துகள் நாடெங்கும் பரவ வேண்டும்.
திராவிட முன்னேற்றக் கழகம் அந்தப் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ளும் என்ற உறுதியினை வழங்கி, சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டை மிகச் சிறப்புடன் முன்னெடுத்துள்ள அன்பிற்குரிய பேராசிரியர் சுபவீ அவர்களின் திராவிட இயக்கத் தமிழர் பேரவைக்கும் அதன் நிர்வாகிகளுக்கும் என் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும். சுயமரியாதைக் கொள்கை இந்தியா முழுவதும் பரவும்.