தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று உயர்கல்வித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.இதில் அமைச்சர் அமைச்சர் கோவி.செழியன் 39 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
1.செம்மொழியான தமிழ் மொழியின் சிறப்பினை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில், கல்லூரிகளில் “மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சிகள்” ரூ.3 கோடி செலவில் நடத்தப்படும்.
2. அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பசுமைத் தோற்ற முகப்பு மற்றும் ஒரே மாதிரியான கல்லூரி பெயர் பலகைகள் தலா ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
3.அரசு கல்லூரிகளில் கலைத் திருவிழா தலா ரூ.2 இலட்சம் வீதம் ஆண்டுதோறும் நடத்தப்படும்.
4.அரசு கல்லூரிகளில் விளையாட்டு வசதிகள் தலா ரூ.1.5 இலட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
5.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்குத் தேவைப்படும் புதிய பாடப்பிரிவுகளை பரிந்துரை செய்திட பாடப்பிரிவு பரிசீலனைக் குழு அமைக்கப்படும்.
6.அரசுக் கல்லூரி மாணாக்கர்கள் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒரு பருவம் கல்வி பயில்வதற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
7.அரசு கலை மற்றும் அறிவியல், பொறியியல் மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் முன்னாள் மாணாக்கர்கள் சங்கம் தலா ரூ.2 இலட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
8.மாநில உயர்கல்வி நிறுவனங்களுக்கான தர வரிசை தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தால் வெளியிடப்படும்.
9.அந்தியூர் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய இரண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு தலா ரூ.17.50 கோடி மதிப்பீட்டில் கட்டடங்கள் கட்டப்படும்.
10.சென்னை, பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்திற்கு
“புதிய நடமாடும் அறிவியல் கண்காட்சிப் பேருந்து” ரூ.80 இலட்சம் மதிப்பீட்டில் வாங்கப்படும்.
11.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும்
அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் அருகலை (Wifi) வசதி ஏற்படுத்தப்படும்.
12.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாகக் கட்டப்பட்ட வகுப்பறைகளுக்குத் தேவையான தளவாடங்கள் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.
13.சுற்றுச்சுவர் இல்லாத அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சங்கிலி இணைப்பு வேலி ரூ.5.02 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
14.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஊடாடும் திறன் பலகைகள் ரூ.4.35 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
15.அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படும். இதற்காக, கல்லூரி ஆசிரியர் மாநில பயிற்சி மையம் அமைக்கப்படும்.
16.அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும்.
17.அரசு கலை, அறிவியல், கல்வியியல் மற்றும் பொறியியல் கல்லூரி முதல்வர்களுக்கு நிர்வாகப் பயிற்சி வழங்கப்படும்.
18.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணாக்கர்களுக்கான உள்ளிடைப் பயிற்சி, வேலைவாய்ப்பு வழிகாட்டி மற்றும் வேலைவாய்ப்பு மையம் மேம்படுத்தப்படும்.
19.முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணாக்கர்களுக்கான வலை முகப்பு (Web Portal) ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
20.சென்னை, தரமணி, மைய தொழில்நுட்ப வளாகம் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
21.உலகத்திறன் போட்டிக்கு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி மாணாக்கர்களை தயார்படுத்தல்
22.ஐந்து அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன் ஆய்வகங்கள் தலா ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
23.அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொழில் நிறுவன இடைமுகப் பிரிவு தலா ரூ.2 இலட்சம் மதிப்பீட்டில் நிறுவப்படும்
24.ஐந்து அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஆளில்லா வான்கல பயிற்சி மையங்கள் தலா ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
25.தொழில்நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்காக பொறியியல் மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு துவங்க அனுமதி அளிக்கப்படும்.
26.அரசு கலை மற்றும் அறிவியல், பொறியியல் மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
27.அரசுக் கல்லூரி மாணாக்கர்களுக்கு பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வுக் குழு அமைக்கப்படும்.
28.அரசுக் கல்லூரிகளில் நிறுவன மேலாண்மைக் குழு அமைக்கப்படும்.
29.அரசு உயர்கல்வி நிறுவனங்களின் ஆய்வகங்கள் ரூ.61.16 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்.
30.இரண்டு மாவட்ட தலைநகரங்களில் ஸ்டெம் (STEM) ஆய்வகங்கள் தலா ரூ.10 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
31.அரசுக் கல்லூரி மாணாக்கர்கள் முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களில் சேர்வதற்கு முறையான பயிற்சிகள் ஆண்டுதோறும் ரூ.28 இலட்சம் செலவில் வழங்கப்படும்.
32. பாடத்திட்ட படைப்பாற்றல் கண்காட்சி ஆண்டுதோறும் ரூ.20 இலட்சம் செலவில் நடத்தப்படும்.
33.சென்னை, பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் “இருதய காட்சிக்கூடம்” ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் நவீனப்படுத்தப்படும்.
34.சென்னை, பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் இணையதள நுழைவுச்சீட்டு மற்றும் காட்சிப் பொருட்களுக்கு QR Code மற்றும் வலைதள செயலி ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
35.சென்னைக்கு அருகில் ஆளில்லா வான்கலன் சான்றிதழ் வழங்கும் சிறப்பு பிரிவு ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
36.தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் ஜப்பானிய திசு தொழில்நுட்ப முறை பயன்படுத்தி ஆவணங்களை செப்பனிடும் பணிக்கு கூடுதலாக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
37.தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் எண்ம ஆவணக்காப்பகம் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
38.தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறையால் பத்து மாவட்டங்களுக்கு மாவட்ட விவரச்சுவடிகள் வெளியிடப்படும்.