தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட 300 ஆன்மிக நூல்கள் : இதில் முக்கிய நூல்கள் என்ன?

புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 300 ஆன்மிக நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட 300 ஆன்மிக நூல்கள் : இதில் முக்கிய நூல்கள் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (15.04.2025) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் பதிப்பகப் பிரிவின் சார்பில் மூன்றாம் கட்டமாக புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 300 ஆன்மிக நூல்களை வெளியிட்டார்.

இந்து சமய அறநிலையத்துறையானது தொன்மை வாய்ந்த திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல், திருக்கோயில்களுக்கு வருவாய் ஈட்டும் வகையில் புதிய திட்டங்களை செயல்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், சமய நெறிகளை பரப்பிடும் வகையில் அரிய ஆன்மிக நூல்களை மறுபதிப்பு செய்து புதுப்பொலிவுடன் நூலாக்கம் செய்திடும் பணிகளையும், அவை அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் திருக்கோயில்களில் புத்தக விற்பனை நிலையங்களையும் அமைத்து செயலாற்றி வருகிறது.

அந்த வகையில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் பதிப்பகப் பிரிவு தொடங்கப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் முதற்கட்டமாக தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை, அபிராமி அந்தாதி, நாலாயிர திவ்யபிரபந்தம், தமிழகக் கலைகள், சைவமும் தமிழும், இந்தியக் கட்டடக் கலை வரலாறு, அவ்வையார் வரலாறு, பதினெண் புராணங்கள் உள்ளிட்ட அரிய 108 ஆன்மிக நூல்கள் 19.01.2023 அன்றும், இரண்டாம் கட்டமாக தலவரலாறு, தலப்புராணங்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட பக்தி இலக்கியங்கள் புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 108 ஆன்மிக நூல்கள் 27.02.2024 அன்றும் வெளியிடப்பட்டன. இந்நூல்கள் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் ஆணையர் அலுவலகம் மற்றும் 203 திருக்கோயில்களில் புத்தக விற்பனை நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

2024 -2025 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற மானியக் கோரிக்கையில், “இந்து சமய அறநிலையத்துறை சார்பாக நடத்தப்படும் பதிப்பகப்பிரிவின் மூலம் சமயம் சார்ந்த தொன்மையான மற்றும் அரிய 300 ஆன்மிக நூல்கள் மறுபதிப்பு செய்து வெளியிடப்படும்” என அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் பதிப்பகப் பிரிவின் மூலம் மூன்றாம் கட்டமாக, திருப்பேரூர் புராணம், பாவநாசத் தலபுராணம் போன்ற தலபுராண நூல்கள், சிவபுராணம், கந்தபுராணம் போன்ற புராணக்கதை நூல்கள், வழிபாட்டு பாடல்கள், மகாபாரதம், கம்பராமாயணம் போன்ற இதிகாச நூல்கள், காரைக்கால் அம்மையார். நம்மாழ்வார் போன்ற அடியார் புலவர் வரலாற்று நூல்கள், நுண்கலைகள், ஓவியச் செந்நூல் போன்ற கோயில் கலை வரலாற்று நூல்கள், சைவ, வைணவ இலக்கியங்கள், வேலும் வில்லும், வள்ளி மணம் போன்ற ஆன்மிக ஆய்வு நூல்கள், Temples gifted with Devaram, How soul becomes light போன்ற ஆங்கில நூல்கள் என புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 300 ஆன்மிக நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று வெளியிட்டார்.

எங்கும் கிடைக்கபெறாமல் இருந்த அரிய ஆன்மிக நூல்களை மறுபதிப்பு செய்து வெளியிடுவதன் மூலம் நமது பண்பாடு, கலாச்சாரம் மற்றும் கலை நுட்பங்களை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ள வழிவகை செய்வதோடு, சமய நெறிகளை பாதுகாக்கும் காலப் பெட்டகமாகவும் இந்நூல்கள் திகழ்கின்றன.

இந்த அரசு பொறுப்பேற்றபின், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பங்கேற்று சிறப்பித்த இந்து சமய அறநிலையத்துறையின் 100-வது நிகழ்ச்சியாக அரிய 300 ஆன்மிக நூல்கள் வெளியிட்ட நிகழ்ச்சி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

banner

Related Stories

Related Stories