தமிழ்நாடு

”ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படும் அமலாக்கத்துறை” : என்.ஆர்.இளங்கோ MP கண்டனம்!

வங்கிக் கடனை வட்டியுடன் திருப்பி கட்டிய நிலையில் அமலாக்கத்துறை வழக்கு சட்டவிரோதமானது.

”ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படும் அமலாக்கத்துறை” : என்.ஆர்.இளங்கோ MP கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக அமலாக்கத் துறை செயல்படுகிறது. வங்கிக் கடனை வட்டியுடன் திருப்பி கட்டிய நிலையில் அமலாக்கத்துறை வழக்கு சட்டவிரோதமானது என திமுக சட்டத்துறைச் செயலாளர்

மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, எம்.பி. அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

பாரதிய ஜனதா கட்சியை கொள்கைரீதியாக தொடர்ந்து வலுவாக எதிர்க்கும் கட்சிகளையும், மாநில அரசுகளையும் பழிவாங்குவதற்காக, ஒன்றிய அமைப்புகளை ஆயுதங்களாக பயன்படுத்தும் ஒன்றிய அரசின் மேலும் ஒரு நடவடிக்கையாக, பத்து ஆண்டுகளுக்கு முந்தைய வங்கிக்கடன் வழக்கை தூசுதட்டி எடுத்து, எவ்வித ஆதாரமின்றி தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாக துறை பற்றிய பல தவறான தகவல்களை அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்கத்துறை நடவடிக்கையானது, ஒரு தனியார் நிறுவனம் வாங்கிய வங்கிக்கடன் பற்றியதாகும். இந்த கடன்தொகை முழுவதும் வட்டியோடு திருப்பி செலுத்தப்பட்டுள்ள நிலையில், இதில் எந்த விதமான முறைகேடும் இல்லை. மேலும், இந்த வழக்கை சிபிஐ அமைப்பு விசாரிப்பதற்கு, முதல் நோக்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்கனவே தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அமலாக்கத்துறை விசாரணையிலும் எள்ளளவு ஆதாரமும் கிடைக்காத ஏமாற்றத்தில், எந்த முகாந்திரமும் இன்றி, நகராட்சி நிர்வாகத்துறையில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், சட்டத்திற்கு புறம்பான பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இத்துறை கதைகட்டியுள்ளது.

நகராட்சி நிர்வாகத் துறையின் நடவடிக்கைகள் தொடர்பாக, எவ்வித முதல் தகவல் அறிக்கையோ, குற்றப்பத்திரிக்கையோ, வழக்கோ நிலுவையில் இல்லாத போது, இந்தத் துறை பற்றி விசாரணை செய்வதற்கு அமலாக்கத்துறைக்கு எவ்விதமான அதிகாரமும் இல்லை. இந்த நிலையில், புதிதாக சேர்ந்துள்ள கூட்டணிக் கட்சியை திருப்திப்படுத்துவதற்காக, ஆதாரமற்ற இத்தகைய குற்றச்சாட்டுகளை அமலாக்கத்துறை முன்வைத்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது.

அரசியல் உள்நோக்கத்தோடு, சட்டத்திற்கு புறம்பான இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஆதாரங்களின்றி, ஊழல் நடப்பதாக பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுவது அமலாக்கத்துறைக்கு ஒரு வாடிக்கையாகவே ஆகிவிட்டது. சட்டபூர்வாக செயல்பட வேண்டிய அமலாக்கத் துறையானது, ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக இப்படி அரசியல் அறிக்கைகளை வெளியிடுவது அத்துறைக்கு அழகும் அல்ல, சட்டப்படி ஏற்கத்தக்கதும் அல்ல. இத்தகைய அரசியல்ரீதியான பழிவாங்கும் நடவடிக்கைகள் அனைத்தையும் தேவைப்படும் சட்ட நடவடிக்கைகள் மூலமாக எதிர்கொண்டு முறியடிப்போம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories