தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (11.4.2025) தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் கீழ் செயல்படும் பொது நூலக இயக்ககத்தின் சார்பில் ரூ.84 கோடியே 76 லட்சம் செலவில் அனைத்து மாவட்டங்களிலும் கட்டப்பட்டுள்ள 326 நூலகக் கட்டடங்களை திறந்து வைத்தார். மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 100 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 32 கோடியே 64 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 199 வகுப்பறைக் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.
மிழ்நாடு அரசின் 2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் பொது நூலகங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட 213 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
பொது நூலக இயக்ககத்தின் கீழ் செயல்படும் நூலகங்களுக்கு 2023-2024-ஆம் ஆண்டில் மாநிலங்களுக்கு மூலதன முதலீட்டிற்கான சிறப்பு உதவித் திட்டம் பகுதி VII இன் கீழ், 821 பொது நூலகங்களுக்கு கூடுதல் கட்டடம் கட்டுதல் / தேவையான மேஜைகள், நாற்காலிகள் போன்ற தளவாடங்கள், கணினி தொடர்புடைய சாதனங்கள் மற்றும் புத்தகங்கள் வாங்குதல் போன்றவற்றிற்கு சிறப்பு நிதியுதவியாக 213 கோடியே 46 இலட்சம் ரூபாய் அனுமதிக்கப்பட்டது. இதில் ஒரு நூலகக் கட்டடம் 500 சதுர அடி பரப்பளவில் 821 பொது நூலகங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் வழியாக புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
தற்பொழுது ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் 246 நூலகங்களும், பேரூராட்சிகள் இயக்ககம் மூலம் 44 நூலகங்களும், நகராட்சி நிர்வாகத் துறை (நகராட்சி) மூலம் 28 நூலகங்களும், பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் 8 நூலகங்கள், என அனைத்து மாவட்டங்களிலும் மொத்தம் 71 கோடியே 72 இலட்சம் ரூபாய் செலவிலான நூலகக் கட்டடங்கள், 6 கோடியே 52 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நூல்கள், 4 கோடியே 73 இலட்சம் ரூபாய் மதிப்பிலான மேஜைகள், நாற்காலிகள் போன்ற தளவாடங்கள், 1 கோடியே 79 இலட்சம் ரூபாய் மதிப்பிலான கணினி தொடர்புடைய சாதனங்கள், என மொத்தம் 84 கோடியே 76 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 326 நூலகக் கட்டடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் திறந்து வைத்தார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக கட்டப்பட்டுள்ள பள்ளி வகுப்பறைக் கட்டடங்களை திறந்து வைத்தல்
கல்விக்கு முக்கியத்துவம் அளித்திடும் வகையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம், எண்ணும் எழுத்தும், இல்லம் தேடி கல்வி, பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் போன்ற பல்வேறு வரலாற்று முன்னெடுப்புகளை நிறைவேற்றி வருவதன் தொடர்ச்சியாக, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு சுமார் 800 கோடி மதிப்பீட்டில் 6 ஆயிரம் புதிய வகுப்பறைகள் கட்டப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார். இத்திட்டம் “குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்” என்று ஊரகப் பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் கட்டடங்கள் அனைத்தும் குழந்தை நேய சிறப்பு அமைப்புகளான உயர்த்தப்பட்ட மேற்கூரை, விசாலமான தாழ்வாரம், காற்றோட்டமிக்க ஜன்னல் வசதிகள், வழுக்காத தரைகள், கற்றலை ஊக்குவிக்கும் சுவர் ஓவியங்கள், வாழ்க்கைப் பாடங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.
குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், இதுவரை 1014 கோடி ரூபாய் செலவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 3148 வகுப்பறைக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக, குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கள்ளக்குறிச்சி மாவட்டம் – திருக்கோவிலூர், காஞ்சிபுரம் மாவட்டம் – ஸ்ரீபெரும்புதூர், கிருஷ்ணகிரி மாவட்டம் – ஓசூர் மற்றும் தளி, மதுரை மாவட்டம் – செல்லம்பட்டி மற்றும் மதுரை கிழக்கு, நாகப்பட்டினம் மாவட்டம் – திருமருகல், புதுக்கோட்டை மாவட்டம் – அன்னவாசல், கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி, குன்றாண்டர் கோவில், விராலிமலை மற்றும் மணமேல்குடி, இராமநாதபுரம் மாவட்டம் – கடலாடி, கமுதி, ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் திருப்புல்லானி, இராணிப்பேட்டை மாவட்டம் – அரக்கோணம், சோளிங்கர், திமிரி மற்றும் காவேரிப்பாக்கம், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி மற்றும் வாழப்பாடி, தஞ்சாவூர் மாவட்டம் – பூதலூர், மதுக்கூர், கும்பகோணம், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருவிடைமருதூர், தஞ்சாவூர், திருப்பனந்தாள் மற்றும் அம்மாபேட்டை, திருச்சிராப்பள்ளி மாவட்டம் – மண்ணச்சநல்லூர், மணப்பாறை, புள்ளம்பாடி மற்றும் திருவெறும்பூர், திருப்பத்தூர் மாவட்டம் – மாதனூர், ஜோலார்பேட்டை, கந்திலி மற்றும் நாட்ராம்பள்ளி, தருமபுரி மாவட்டம் – நல்லம்பள்ளி மற்றும் அரூர், திருவாரூர் மாவட்டம் – முத்துபேட்டை மற்றும் திருவாரூர் ஆகிய இடங்களில் 100 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 32 கோடியே 64 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 199 வகுப்பறைக் கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் திறந்து வைத்தார்.