கடந்த காலங்களில் நீலகிரி மாவட்டத்தில் போதுமான மருத்துவ கட்டமைப்புகள் இல்லாததால் அவசர சிகிச்சைகள் பெற நீலகிரி வாழ் மக்கள் சமவெளி பகுதியான கோவை மாவட்டம், கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளுக்கு மருத்துவ சிகிச்சைக்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.
இதை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, திமுக ஆட்சி அமைந்தால் நீலகிரியில் மருத்துவக் கல்லூரி கட்டப்படும் என கூறியிருந்தார்.அதன்படி உதகை அருகே Hpf பகுதியில் 45 ஏக்கர் பரப்பளவில் 700 படுக்கை வசதியுடன், 415 மருத்துவ ஊழியர்களைக் கொண்டு பிரம்மாண்டமாக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் சிம்லாவுக்கு அடுத்தபடியாக மலைப்பிரதேசங்களில் அதிநவீன உயிர் சிகிச்சை பெறும் வகையில், அதிநவீன மருத்துவ கருவிகளுடன் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துமனையை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்தியாவிலேயே சிம்லாவுக்கு அடுத்தபடியாக மலைப்பிரதேசத்தில் மருத்துவக்கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை தமிழ்நாட்டில்தான் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்தியாவிலேயே முதன்முறையாக பழங்குடியினர் சிகிச்சை பெரும் வகையில் 50 படுக்கை வசதியுடன் தனிக்கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.