தமிழ்நாடு

“முதல்வர் மருந்தகம்” திட்டம் : 8 நாட்களில் 50,053 பேர் பயனடைந்ததாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

“முதல்வர் மருந்தகம்” திட்டம் தொடங்கப்பட்ட 8 நாட்களில் ரூ.27 இலட்சத்திற்கு மேல் மருந்துகள் விற்பனையாகியுள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

“முதல்வர் மருந்தகம்” திட்டம் : 8 நாட்களில் 50,053 பேர் பயனடைந்ததாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

“முதல்வர் மருந்தகம்” திட்டம் தொடங்கப்பட்ட 8 நாட்களில் ரூ.27 இலட்சத்திற்கு மேல் மருந்துகள் விற்பனையாகியுள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த மருந்தகங்கள் மூலம் 50 ஆயிரத்து 53 பேர் பயனடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியான அறிக்கையில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு 2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய நடுத்தர குடும்பங்களின் பொருளாதாரச் சுமையைக் குறித்து அவர்கள் வளம்பெற பல அருமையானத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள்.

மகளிர்க்கும், மாணவியர்க்கும், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர்க்கும் அரசு நடத்திவரும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா “விடியல் பயணத் திட்டம்”. மகளிர்க்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்”. அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் “புதுமைப் பெண் திட்டம்”; அதேபோல மாணவர்களுக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கும் “தமிழ்ப் புதல்வன் திட்டம்”, “கலைஞர் வீடு வழங்கும் திட்டம்”, முதலான பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறார்கள்.

“முதல்வர் மருந்தகம்” திட்டம் : 8 நாட்களில் 50,053 பேர் பயனடைந்ததாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

இத்தகையத் திட்டங்களால், குடும்பங்களில் ஏற்படும் செலவுகள் குறைகின்றன. பொருளாதாரம் உயர்கிறது. பொதுவாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் உணவுச் செலவை அடுத்து அதிகம் செலவாவது அக்குடும்பத்தின் கல்வி வளர்ச்சிக்கும், மருத்துவச் செலவுகளுக்குமேயாகும். இந்த இரண்டு செலவினங்களையும் குறைப்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனால்தான், கல்வியும் மருத்துவமும் என் இரண்டு கண்களுக்குச் சமம் என்று கூறி இந்த இனங்களில் குடும்பங்களுக்கு ஏற்படும் செலவினங்களை குறைத்து வருகிறார்கள்.

மருத்துவத் துறையைப் பொருத்தவரை, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தைச் செயல்படுத்தி மருத்துவப் பணியாளர்கள் பொதுமக்களின் இல்லங்களுக்கேச் சென்று மருந்துகளையும், மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்கள். இத்திட்டம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று இதுவரை 2 கோடிக்கு மேலான மக்கள் தமிழ்நாட்டில் பயனடைந்து வருகின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனிதாபிமான உணர்வோடு ஏழை எளியவர் மீது கருணைகொண்டு அவர்களுக்கு மேலும் உதவுவதற்காக இந்தியாவிலேயே புதுமையாக முதல் முறையாக ஒரு திட்டடத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அந்தத் திட்டம்தான் முதல்வர் மருந்தகம் திட்டம். தமிழ்நாடு முழுவதிலும் தனியார் மூலமாக 462 முதல்வர் மருந்தகங்களும், கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக 538 முதல்வர் மருந்தகங்களும் ஆக மொத்தம் 1,000 முதல்வர் மருந்தகங்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் கடந்த 24.2.2025 அன்று தொடங்கிவைக்கப்பட்டன.

“முதல்வர் மருந்தகம்” திட்டம் : 8 நாட்களில் 50,053 பேர் பயனடைந்ததாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

இத்திட்டம் தொடங்கிவைக்கப்பட்ட கடந்த 8 நாட்களில் அதாவது 3.3.2025 வரை முதல்வர் மருந்தகங்களில் தனியார் கடைகளில் 13 இலட்சத்து 73 ஆயிரத்து 449 ரூபாய்க்கும், கூட்டுறவு நிறுவனக் கடைகளில் 13 இலட்சத்து 69 ஆயிரத்து 380 ரூபாய்க்கும் மொத்தம் 27 இலட்சத்து 42 ஆயிரத்து 829 ரூபாய்க்கு மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த கடைகளில் வாங்கப்படும் மருந்துகளின் விலையில் 50 % முதல் 75 % வரை குறைந்த விலைக்கு வழங்கப்படுகின்றன. இதன் மூலம் கடந்த 8 நாட்களில் பொதுமக்களுக்கு 7 இலட்சத்து 68 ஆயிரத்து 776 ரூபாய் சேமிப்பு கிடைத்திருக்கிறது.

தனியார் நடத்தும் கடைகளில் 22 ஆயிரத்து 332 பேரும், கூட்டுறவு நிறுவன முதல்வர் மருந்தகங்களில் 27 ஆயிரத்து 721 பேரும் என மொத்தம் 50 ஆயிரத்து 53 பேர் பயனடைந்துள்ளனர். இந்தத் திட்டத்தின் மூலம் 1,000 பேர் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். தனியார் நடத்தும் ஒரு கடைக்கு 3 இலட்சம் ரூபாயும், கூட்டுறவு நிறுவனம் நடத்தும் கடைக்கு 2 இலட்சம் ரூபாயும் மானியமாக வழங்கப்பட்டுள்ளது"என்று கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories