தமிழ்நாடு

”பட்டா எனும் கனவை நனவாக்கி வரும் திராவிட மாடல் அரசு” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!

திராவிட இயக்கம் தான் நம் ஒவ்வொருவருக்கும் முகவரியை வழங்கிக் கொண்டிருக்கக்கூடிய இயக்கம்.

”பட்டா எனும் கனவை நனவாக்கி வரும் திராவிட மாடல் அரசு” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை, செனாய் நகர் விங்ஸ் கன்வென்ஷென் சென்டரில் நடைபெற்ற அரசு விழாவில் 2,500 பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டாக்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:-

இன்றைக்கு சென்னை அண்ணா நகர் தொகுதி செனாய் நகரில் 2 ஆயிரத்து 500 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குகின்ற இந்த நிகழ்ச்சியில் உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன், பெருமை அடைகின்றேன். ஏற்கனவே நம்முடைய திராவிட மாடல் அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக, மாதவரம், சோழிங்கநல்லூர், திருவொற்றியூர், ஆவடி போன்ற இடங்களில் நானே நேரில் சென்று மக்களுக்கு பட்டாக்களை வழங்கி வருகின்றேன். அதன் தொடர்ச்சியாக, இன்றைக்கு இந்த நிகழ்ச்சியில் 2 ஆயிரத்து 500 பேருக்கு பட்டாக்களை நாம் இந்த மேடையில் வழங்க இருக்கின்றோம்.

இன்றைக்கு திராவிட மாடல் அரசை பார்த்து, சில பேர் திராவிட மாடல் என்றால் என்ன? திராவிட மாடல் அரசு என்றால் என்ன? என்று கேட்கின்றார்கள். ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குகின்ற இந்த சிறப்பான மேடையில் இருந்து அதற்கான பதிலை சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நான் நம்புகின்றேன்.

“இன்னாருக்கு மட்டும் தான் இது” என்பதற்கு எதிராக, எல்லோருக்கும் எல்லாம் என்று சொல்வது தான் உண்மையான திராவிட மாடல் அரசு. இந்த இலக்கை நோக்கி தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள்.

ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவை என்று மூன்று விஷயங்களை சொல்வார்கள். உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம். இந்த மூன்று விஷயங்களுக்காகத் தான் நாம் அத்தனை பேரும் பாடுபட்டு, உழைத்துக் கொண்டு வருகின்றோம். இந்த மூன்று விஷயத்தையும், ஒரு மனிதனுக்கு உறுதி செய்வதுதான் நம்முடைய முதலமைச்சர் அவர்களின் திராவிட மாடல் அரசு.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தன்னுடைய ஆட்சிக் காலத்திலேயே, ‘உண்ண உணவு’ என்கிற சிக்கலை தீர்த்து வைத்தார்கள். தமிழ்நாட்டில், கலைஞர் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்றபோது மிகப் பெரிய பட்டினி பஞ்சம். தமிழ்நாட்டில் யாரும் பட்டினியோடு இருக்கக் கூடாது என்று ஒரு கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கு வழங்கினார். அதன் பிறகு அந்த ஒரு ரூபாயும் இல்லாமல், ரேஷன் கார்டு உள்ளவர்கள் எல்லாருக்குமே கட்டணமில்லா அரிசி வழங்கியவர் தான் நம்முடைய முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள். அதனால் தான், இன்றைக்கு தமிழ்நாட்டில், கிராமங்களில் பஞ்சம் ஒழிந்தது பட்டினி இல்லாத நிலை ஏற்பட்டது.

உணவு பிரச்சினையை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அடியோடு தீர்த்து வைத்த காரணத்தினால், அடித்தட்டு மக்கள் வாழ்க்கையில் முன்னேற மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள்.

அடுத்து, பொங்கலுக்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர் அவர்கள். மாற்று உடை இல்லாதவர்களின் நிலைமையை அந்தத் திட்டம் மாற்றியது. 'உடுத்த உடை' என்பது இன்றைக்கு தமிழ்நாட்டில் ஒரு பிரச்சனையே கிடையாது.

இப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கின்ற அடுத்த தேவை என்னவென்றால் அது, 'இருக்க இடம்' என்பது தான் தமிழ்நாட்டு மக்களின் தேவை. இதற்கு ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தீவிரமாக, மும்முரமாக செயல்பட்டுக் கொண்டு வருகின்றார்கள்.

முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, பட்டாக்களை வழங்குவதற்காக நம்முடைய வருவாய்த்துறை அமைச்சர் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அந்தக்குழு எடுத்த நடவடிக்கைகளால் இன்றைக்கு 89 ஆயிரத்து 400 பட்டாக்கள் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மட்டும் வழங்கப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்ல, தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். கடந்த வாரம் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அமைச்சரவை கூட்டத்தைக் கூட்டி, அனைத்து அமைச்சர்களையும், அரசு அதிகாரிகளையும் வரவழைத்து, ஆலோசனைகளை வழங்கி ஒரு சிறப்பான, மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டார்கள்.

அது என்னவென்றால், தமிழ்நாடு முழுக்க நகர பகுதிகளில் 86 ஆயிரம் பட்டாக்களை 6 மாத காலத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தான் அந்த செய்தி. இதை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கு, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது.

சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் மட்டும் ஆட்சேபணையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 29 ஆயிரத்து 187 பேருக்கு பட்டா வழங்கப்பட உள்ளது. அதேபோல, மதுரை, நெல்லை போன்ற மாநகராட்சிகள், நகராட்சிகள், மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் மட்டும் 57 ஆயிரத்து 84 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட இருக்கிறது.

”பட்டா எனும் கனவை நனவாக்கி வரும் திராவிட மாடல் அரசு” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!

ஏறத்தாழ 63 ஆண்டு கால பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்துகின்ற வகையில், 86 ஆயிரம் பட்டாக்களை வழங்க நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்திருக்கிறார்கள். இது தமிழ்நாட்டின் வரலாற்றில் நிலைத்து இருக்கப் போகின்ற ஒரு நடவடிக்கை என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது.

திராவிட இயக்கம் தான் நம் ஒவ்வொருவருக்கும் முகவரியை வழங்கிக் கொண்டிருக்கக்கூடிய இயக்கம். திராவிட இயக்கம் இல்லாமல் போயிருந்தால், நாம் இன்னும் முகவரி இல்லாமல், கல்வி, வேலைவாய்ப்பற்ற மனிதர்களாக தான் இருந்திருப்போம். திராவிட இயக்கம் வந்த பிறகு தான், கல்வி, வேலைவாய்ப்பில் தமிழ்நாடு ஒரு தன்னிறைவு நிலையை அடைந்திருக்கிறது என்று சொல்லலாம்.

உங்கள் வீட்டுப் பிள்ளைகளை ‘பட்டதாரிகளாக’ ஆக்கிய திராவிட மாடல் அரசு, இன்றைக்கு உங்கள் எல்லோரையும் 'பட்டா'-தாரர்களாவும் ஆக்கிக் கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் பெருமையோடு கூறிக் கொள்ள விரும்புகிறோம். ஏனென்றால், திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பேற்ற இந்த 4 வருடத்தில் மட்டும் இதுவரைக்கும் 12 லட்சத்து 29 ஆயிரம் பேருக்கு பட்டாக்களை வழங்கி சாதனை படைத்திருக்கின்றோம்.

தமிழ்நாட்டில், எந்த ஒரு நபரும் வீடோ, நிலமோ இல்லாமல் இருக்கக் கூடாது என்கின்ற முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் கனவை நனவாக்குகின்ற வகையில், நம்முடைய திராவிட மாடல் அரசும், நம்முடைய முதலமைச்சர் அவர்களும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த நேரத்தில், பட்டா வழங்குகின்ற நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்த அனைத்துத் துறை அரசு அதிகாரிகளுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் என்னுடைய நன்றியையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன். பட்டாக்களைப் பெற வந்துள்ள உங்கள் அத்தனை பேருக்கும் மீண்டும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து இந்த வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

banner

Related Stories

Related Stories