தமிழ்நாடு

ரூ.3,800 கோடி முதலீடு : டாடா குழுமத்தின் உற்பத்தி ஆலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.3,800 கோடி முதலீட்டில் 4,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் டாடா குழுமத்தின் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

ரூ.3,800 கோடி முதலீடு : டாடா குழுமத்தின் உற்பத்தி  ஆலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் நடைபெற்ற இருவேறு நிகழ்ச்சிகளின்போது, முதலாவதாக 3,800 கோடி ரூபாய் முதலீட்டில் 4,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா பவர் சோலார் நிறுவனம் அமைத்துள்ள 4.3 GW Solar Cell மற்றும் Module உற்பத்தி ஆலையை திறந்து வைத்தார்.

அடுத்ததாக, 2574 கோடி ரூபாய் முதலீட்டில், 2500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் விக்ரம் சோலார் நிறுவனம் 3 GW solar Cell மற்றும் 6 GW Module உற்பத்தி ஆலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். இவற்றில் பெரும்பான்மையான வேலைவாய்ப்புகள் பெண்களுக்கானவை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும், பல்வேறு துறைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாகவும் விளங்கி வருகிறது. முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை, குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுவதாக, 2024-25 ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 2030க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி பெறுவதற்கும் தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகளை மேற்கொண்டுவருகிறது.

இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை சுமார் 10 இலட்சம் கோடி ரூபாய் முதலீடு மற்றும் 31 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் ஈர்க்கப்பட்டுள்ளன. சீரான, பரவலான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற தமிழ்நாடு அரசின் கொள்கைக்கேற்ப, ஈர்க்கப்படும் தொழில் திட்டங்கள் மாநிலம் முழுவதும் பரவலாக அமைக்கப்பட்டு. இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா பவர் சோலார் நிறுவன தொழிற்சாலை திறப்பு விழா

உலகப் புகழ்பெற்ற இந்திய குழுமமான, டாடா குழுமத்தின் துணை நிறுவனங்களான டிசிஎஸ். டைடன், டாடா மோட்டார்ஸ், டாடா எலெக்ட்ரானிக்ஸ், தாஜ் ஹோட்டல்கள், தனிஷ்க் ஆகியவை ஏற்கெனவே தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் தடம் பதித்துள்ளன. இந்நிலையில், டாடா குழுமத்தின் துணை நிறுவனமான TATA Power Ltd., காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை தணிப்பதற்கு அவசியமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் துறையில் முதலீடு மேற்கொள்வதற்காக 2022-ஆம் ஆண்டு ஜுலை மாதம், இத்திட்டத்திற்கான முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது கூடுதலாக முதலீடு மேற்கொள்வதாக இரண்டாவது புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொண்டது.

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் 3,800 கோடி ரூபாய் முதலீட்டில் 4,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் இத்திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் திறந்து வைத்து, உற்பத்தியையும் தொடங்கி வைத்தார். பின்னர், முதலமைச்சர் அவர்கள் தொழிற்சாலையை பார்வையிட்டு, அங்கு பணிபுரியும் பெண் பணியாளர்களிடம் உரையாடி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும், தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த சோலார் பேனலில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “வாழ்த்துகள்” என்று எழுதி கையொப்பமிட்டார்.

பெண்களுக்கு 80 சதவிகித வேலைவாய்ப்பு என்பது மட்டுமின்றி, பெண்களுக்கு தங்கும் விடுதி வசதிகளும் அளிக்கப்படவுள்ளது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும். இந்நிகழ்ச்சியில், காணொலிக் காட்சி வாயிலாக டாடா குழுமத் தலைவர் என். சந்திரசேகரன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.

ரூ.3,800 கோடி முதலீடு : டாடா குழுமத்தின் உற்பத்தி  ஆலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

விக்ரம் சோலார் லிமிடெட் தொழிற்சாலை அடிக்கல் நாட்டு விழா

அதிக திறன் கொண்ட சோலார் PV உற்பத்தியில் நிபுணத்துவம் பெற்ற விக்ரம் சோலார் லிமிடெட், இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் செயல்பட்டு வரும் முன்னணி நிறுவனமாகும். தமிழ்நாட்டில் ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் அமைக்கப்பட்ட 1.3 GW உற்பத்தித்திறன் கொண்ட இதன் ஆலை 2021-ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் 2574 கோடி ரூபாய் முதலீட்டில், 2500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 3 GW solar Cell மற்றும் 6 GW Module உற்பத்தித்திறன் கொண்ட ஆலை அமைப்பதற்கு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் அடிக்கல் நாட்டப்பட்டது.

முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் மாநிலத்தில் அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழில் செய்வதற்கு உகந்த சூழலமைப்பை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளதன் காரணமாகவே, தமிழ்நாட்டில் முதலீட்டாளர்கள் மேன்மேலும் முதலீடுகளை மேற்கொள்ள முன்வருகின்றனர். இதற்கு, இம்முதலீடுகள் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

banner

Related Stories

Related Stories