ஸ்விட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மன்றத்தின் கூட்டத்தில் இந்திய அரங்கை தொழில்துறை அமைச்சர் - முனைவர் டி.ஆர்.பி.ராஜா தொடங்கி வைத்தார்.
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, “உலகளவில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தும் பெருமைமிக்க தருணமாக இது அமைந்துள்ளது. இது உலகளாவிய பொருளாதார அரங்கில் இந்தியாவின் இருப்பை வலுப்படுத்தும் மற்றொரு முக்கியபடியாகும்.
இந்தியாவின்பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஒருங்கிணைந்த வளர்ச்சியின் அடையாளம்.
முதலீடுகளை ஈர்ப்பதில் மாநிலங்களுக்கு இடையே போட்டி இருப்பதில் பிரச்சினை இல்லை. வேறு நாடுகளுக்கு முதலீடுகள் நழுவிச் சென்றுவிட கூடாது.
இந்தியாவில்மின் ஊர்திகள் தயாரிப்பில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக, இருசக்கர மின் ஊர்திகள் அதிக அளவில் உற்பத்தி ஆகிறது. இந்தியாவின் தொழிற்சாலைகளில்உள்ள பெண் பணியாளர்களின் எண்ணிக்கையில் 43 சதவீதம் தமிழ்நாட்டின் பெண் பணியாளர்கள் என்பது பெருமைக்குரியது.
கல்வியில் பெண்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மூலமாக தமிழ்நாடு இதை சாத்தியப்படுத்தி இருக்கிறது. முதலமைச்சரின் திட்டத்தால் கல்லூரி மாணவர்கள் மாணவிகள் பெரிய நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் ஈடுபட்டு தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றனர்.இந்தியாவுக்கு பெருமைச் சேர்க்கும் வகையில் தமிழ்நாட்டின் தொழில் கட்டமைப்பு விளங்குகிறது" என்று தெரிவித்தார்.