தமிழ்நாடு முழுவதும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்னர் சென்னை மேற்கு மாம்பலத்தில் மாட்டுப் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
அப்போது இந்த விழாவில் ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி பேசுகையில், "அப்பாவுக்கு ஜுரம் இருந்தபோது மருத்துவரை கூப்பிடலாம் என்று சொன்னார். அப்போது வந்த ஒரு சந்நியாசி மாட்டு கோமியத்தை குடிக்க சொன்னார். உடனே மாட்டின் கோமியத்தை குடித்தார். குடித்த 15 நிமிடங்களில் ஜுரம் போய்விட்டது. மாட்டு கோமியதம் பாக்டீரியா, பூஞ்சை, செரிமான கோளாறு பிரச்னைகளை எதிர்க்க கோமியம் சிறந்த மருந்து" என்றார்.
ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பல்வேறு கருத்துகளை பெற்று வருகிறது. தற்போது நவீன மருத்துவ உலகில், இதுபோன்ற மூடநம்பிக்கைகளை ஒரு ஐஐடி இயக்குநர் பொதுவெளியில் கூறியிருப்பது கண்டனங்களை எழுப்பி வருகிறது. மேலும் இவரது பேச்சுக்கு தமிழ்நாடு மாணவர் கழகத்தினர், அரசியல் தலைவர்கள், இணையவாசிகள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
எந்த அறிவியலும் மாட்டு கோமியத்தை குடிக்க சொன்னதில்லை. அறிவியலுக்கு எதிரான, அடிப்படை ஆதாரங்கள் இல்லாத பிற்போக்கு கருத்தை ஐஐடி இயக்குநர் கூறியிருப்பதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஐஐடி இயக்குநர் கூறிய இந்த மூடநம்பிக்கையை தகர்த்தெறிய வேண்டும் என்று விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் விழுப்புரம் மாவட்ட ஊடகவியலாளர்கள் சார்பில் பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை வனத்துறை அமைச்சர் க.பொன்முடி மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி, தலைமையில் துவக்கி வைத்தார். இச்சிறப்பு மருத்துவ முகாமில், நீரிழிவு நோய் பரிசோதனை, இரத்தப் பரிசோதனை, கண் பரிசோதனை, பல் பரிசோதனை மற்றும் ECG உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட ஊடகவியலாளர்கள் சார்பில் நடைபெற்ற பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமில், விழுப்புரம் மாவட்ட பத்திரிகையாளர்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வனத்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது, “நவீன மருத்துவ வசதிகள் வளர்ந்து வரும் காலத்தில், நவீன மருத்துவ வசதிகள் எல்லோரிடமும் சென்றடைய வேண்டும் என்பதுதான் தமிழக முதலமைச்சர் அவர்களின் நோக்கம். இதுபோன்ற தவறான கருத்துகளை கூறி மக்களை திசை திருப்பக் கூடாது. கோமியத்தை அந்த காலத்தில் இருந்து தெளித்துக் கொள்வதுதான் வழக்கம்.
அதை ஐஐடி இயக்குனர் குடிக்க கூறுகிறார். ஒரு ஐஐடி இயக்குனர் இது போன்ற கருத்தை கூறுவது ஏற்க கூடியதல்ல. இது போன்ற மூடநம்பிக்கைகளை தகர்த்தெறிய செய்திகள் மூலமாக பத்திரிகையாளர்கள் நீங்கள் தான் பத்திரிகை மூலமாக வெளிக் கொண்டு வர வேண்டும்” என்றார்.