தமிழ்நாடு

”இது உங்களுக்கு கிடைத்த அங்கீகாரம்” : மகளிர் சுய உதவிக்குழுக்களை பாராட்டிய துணை முதலமைச்சர் உதயநிதி!

உணவுத் திருவிழாவை வெற்றிகரமாக நடத்திய மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

”இது உங்களுக்கு கிடைத்த அங்கீகாரம்” : மகளிர் சுய உதவிக்குழுக்களை பாராட்டிய துணை முதலமைச்சர் உதயநிதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (8.1.2025) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், நகர்ப்புறத்தில் செயல்படும் 180 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 2,136 மகளிருக்கு 15.71 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகளையும், கடந்த மாதம் நடைபெற்ற உணவுத் திருவிழாவின் வெற்றிக்கு செயலாற்றிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என 138 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள், உணவுத் திருவிழா குறித்த “Flavours of Fortune” என்ற புத்தகத்தை வெளியிட்டு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் உருவாக்கப்பட்ட குறும்படம் பார்வையிட்டார். 

இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை:-

நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய அறிவுறுத்தலின் பேரில், வழிகாட்டுதலின் பேரில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக, சென்னையில் கடந்த மாதம் டிசம்பர் 20 லிருந்து 24 வரை ஐந்து நாட்கள் நடத்தப்பட்ட உணவுத் திருவிழாவில் சிறப்பாக செயல்பட்ட  மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த அருமை சகோதரிகளுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி கவுரவிப்பதில் நாங்கள் அனைவரும் பெருமை அடைகின்றோம், மகிழ்ச்சி அடைகின்றோம்.

அதே போல, இங்கே வருகை தந்திருக்கக் கூடிய மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 2 ஆயிரம் மகளிருக்கு
ரூபாய் 15 கோடி அளவில் வங்கி கடன் இணைப்பையும் வழங்க இருக்கின்றோம். சென்னையில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில், கிட்டத்தட்ட 300 சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் பங்கேற்று, உணவுப்பொருட்களை தயார் செய்து விற்பனை மேற்கொண்டீர்கள்.

  சமையல் என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. ஒரு குடும்பத்தில் இருப்பவர்களை திருப்திப்படுத்த சமைப்பதே மிகப் பெரிய விஷயம். ஆனால், இங்கே வந்திருக்கிற மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த சகோதரிகள் நீங்கள், சென்னை உணவுத் திருவிழாவில் கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் பேருக்கு, அதாவது கிட்டத்தட்ட ஒரு 1 இலட்சம் குடும்பத்தினருக்கு சமைத்திருக்கின்றீர்கள்

  உணவுத்திருவிழா நடைபெற்ற அந்த 5 நாட்களிலுமே அவ்வளவு கூட்டம் நின்றிருந்தது. நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் உணவினை வாங்கி சென்று ருசித்ததை நாங்கள் அனைவரும் கண்கூடாக பார்த்தோம். மெரினாவில் வருகிற கடல் அலையைவிட  உணவுத்திருவிழாவுக்கு வருகிற மக்கள் தலையே அதிகமாக இருந்தது என்பதை சென்னை மக்கள் அனைவரும் பார்த்தார்கள்.

இங்கே நம்முடைய ஊரக வளர்ச்சித் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி அவர்கள் பேசும்போது என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கும்போது, இந்த நிகழ்ச்சிக்கு நான் வருவேனா என்பது தெரியவில்லை என்று கூறினார். அதன் பிறகு நான் மட்டுமல்ல, அமைச்சர் பெருமக்கள், அண்ணன் சேகர்பாபு அவர்கள், அண்ணன் தயாநிதி மாறன் அவர்கள், நம்முடைய மேயர் அவர்கள் அத்தனை பேரும் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியை பெரிதாக்கிவிட்டார்கள் என்று சொன்னார்கள். அவர் ஒன்றை சொல்ல தவறிவிட்டார். நாங்கள் வந்தோடு மட்டுமல்ல, நாங்கள் வந்து எல்லாவற்றையும் சாப்பிட்டோம். அவர்கள் அன்போடு கொடுத்தார்கள், ஒவ்வொன்றையும் ருசித்தோம். 

  அவ்வளவு சுவையாக இருந்தது. இதனை நான் வெறும் வார்த்தைக்காக சொல்லவில்லை. 5 தினங்கள் மட்டுமே நடத்தப்பட்ட இந்த உணவுத் திருவிழாவுக்கு சுமார் மூன்றரை லட்சம் பேர் வருகை தந்து மொத்தம் ரூபாய் 1 கோடியே 55 லட்சம் அளவுக்கு உணவுப் பொருட்களை வாங்கி சுவைத்துள்ளனர்.

  பொதுமக்கள் அனைவரின் பாராட்டுதலையும் பெற்று, மிகப் பெரிய அளவில் இந்த உணவுத் திருவிழா வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி, சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த உங்களின் உழைப்பிற்கும், தன்னம்பிக்கைக்கும், ஒற்றுமைக்கும் கிடைத்துள்ள ஒரு வெற்றி, அங்கீகாரமாகும்.

இங்கே எனக்கு முன் பேசிய, கிருஷ்ணகிரி மாவட்டம் சபரி முருகன், சுய உதவிக் குழுவைச் சேர்ந்த சகோதரி வளர்மதி அவர்கள், பல தடைகளை கடந்து வந்துதான் இங்கே வந்ததாக அவர்கள் விளக்கிக் கூறினார்கள். நடந்து முடிந்த உணவுத் திருவிழாவில் No oil, No boil என்ற concept -ல் அவர் அமைத்திருந்த ஸ்டால் மூலம் 82,000 ரூபாய் அளவிற்கு உணவுப் பொருட்களை விற்பனை செய்து மிகப் பெரிய ஒரு சாதனையை செய்துள்ளார்.

அக்கா வளர்மதி போன்றோர் அவருடைய குடும்பத்திற்கு மட்டும் ஆதாரமாக இல்லாமல் இந்த சமுதாயத்திற்கே முன்னுதாரணமாக திகழ்கிறார் என்று சொன்னால், அது மிகையல்ல. அது மட்டுமல்ல, இங்கே வந்திருக்கக்கூடிய நீங்கள் ஒவ்வொருவரும் இந்த சமுதாயத்திற்கே ஒரு எடுத்துக்காட்டாக திகழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

  இந்த உணவுத் திருவிழாவில் கலந்து கொண்ட கடலூர் மாவட்டம், சுய ஜோதி மகளிர் சுய உதவிக் குழுவானது நெல்லி ஊறல் (Amla Fermented Juice) வகைகளைத் தயாரித்து, இன்று வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு உயர்ந்துள்ளது என்பதை இங்கே நான் பெருமையோடு கூற விரும்புகின்றேன்.

  அதேபோல, இந்த உணவுத் திருவிழாவில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்வர்ண வராகியம்மன் சுய உதவிக் குழு கலந்து கொண்டது. இந்தக் குழுவானது, இரண்டே வாரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூன்று இடங்களில் முட்டை மிட்டாய் கடைகளை தொடங்கியுள்ளது. அவர்களின் தயாரிப்புக்கு நமது உணவுத் திருவிழாவிலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. 

  மேலும், நமது உணவுத் திருவிழாவில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஊட்டி ரோஸ் மகளிர் சுய உதவிக் குழுவினர், 5 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மட்டன் பிரியாணி உணவுகளை விற்பனை செய்து சாதனை படைத்திருக்கிறார்கள். 

மகளிரை தொழில் முனைவோர் ஆக்கி அழகு பார்க்க வேண்டும் என்பதில் றுதியுடன் செயல்படுகிற நம்முடைய முதலமைச்சர் தலைமையிலான நம்முடைய திராவிட மாடல் அரசு, இந்த உணவுத்திருவிழாவின் மூலம், பல்லாயிரக்கணக்கான மகளிர் தொழில் முனைவோரை உருவாக்கி உள்ளது. அதற்காக தான் இன்றைக்கு இந்தியாவே திரும்பி பார்க்கிற வகையில், ஏராளமான திட்டங்களை நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகின்றது.

மகளிரை உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியில், இந்திய அளவில் தமிழ்நாடு முக்கியமான இடத்தில் உள்ளது. அதனால் தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் மகளிருக்கென்று பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றார். நம்முடைய அரசு பொறுப்பேற்றவுடன், நம்முடைய முதலமைச்சர் அவர்களின் முதல் கையெழுத்தே மகளிருக்கான விடியல் பயண திட்டம், கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம். ஒவ்வொரு மகளிரும் இந்தத் திட்டத்தின் மூலம் மாதம் 900 ரூபாய் வரைக்கும் சேமிக்கிறார்கள். 

”இது உங்களுக்கு கிடைத்த அங்கீகாரம்” : மகளிர் சுய உதவிக்குழுக்களை பாராட்டிய துணை முதலமைச்சர் உதயநிதி!

அதேபோல, பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டும், உயர் கல்வி படிக்க வேண்டும் என்று கல்வி ஊக்கத் தொகையாக  வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம்  4 லட்சம் மாணவிகள் வருடந்தோறும் பயன் பெற்று வருகிறார்கள். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மூலம் 20 லட்சம் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் பயனடைந்து வருகிறார்கள்.  இதற்கெல்லாம், மகுடம் போல, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. 

மகளிரின் முன்னேற்றத்துக்கு நம்முடைய அரசு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதற்கு இந்தத் திட்டங்களே சாட்சி. இங்கே கூட, நம்முடைய  180 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களுக்கு ரூபாய் 15 கோடி அளவுக்கு வங்கி கடன் இணைப்புகளை வழங்குகிறோம்.

இதற்கு நம்முடைய முதலமைச்சர் அவர்களுக்குதான் நன்றி சொல்லவேண்டும். ஏனென்றால், உணவுத் திருவிழா நடைபெறப் போகிறது என்று தெரிந்தவுடன், அவர் என்னை அழைத்து ஒவ்வொரு நாளும் என்னென்ன ஏற்பாடு செய்திருக்கிறீர்கள், எத்தனை நாட்கள் நடத்தப் போகிறீர்கள், வந்திருக்கக்கூடிய தாய்மார்களுக்கு, சகோதரிகளுக்கு தங்குவதற்கு சரியான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறதா? அவர்களுக்கு உணவு, போக்குவரத்து வசதிகள் எல்லாம் செய்யப்பட்டிருக்கிறதா? பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கப்பட்டிருக்கிறதா? என்று அந்த அளவுக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். எனவே, இந்த நேரத்தில், வெற்றிக்கு மிக மிக முக்கியமான காரணம்  நம்முடைய முதலமைச்சர் அவர்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும்.

உணவுத்திருவிழாவில் ஒரு சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல், மிகுந்த கட்டுக்கோப்புடன் இந்த உணவுத்திருவிழா நடத்தப்பட்டு இருக்கிறது. இதனை சிறப்பாக ஒருங்கிணைத்த நம்முடைய தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்க அலுவலர்கள் மற்றும் பங்கேற்ற சுய உதவிக் குழுவினருக்கு அத்தனைப் பேருக்கும் எங்களுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதே போல, மெரினாவில் நாள் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினருக்கும், மூன்றரை லட்சம் பேர் வந்து போனாலும், அந்த இடத்தை மிகத் தூய்மையாக பராமரித்த சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும், இந்த உணவுத் திருவிழா இவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருக்கிறது என்றால், இதற்கு மிகவும் முக்கிய காரணம் சென்னை மக்களுக்கும் இந்த நேரத்தில் எங்களுடைய நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

அடுத்தடுத்த ஆண்டுகளிலும், உணவுத் திருவிழாவை இன்னும் பெரிதாக, அதிக கடைகளோடு, இன்னும் பிரம்மாண்டமாக நடத்திட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதையும் இங்கு மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக் கொள்கிறேன். சுய உதவிக்குழுவைச் சேர்ந்த உங்கள் அனைவரின் வெற்றிப்பயணம் ஒவ்வொரு ஆண்டும் தொடரட்டும்.

banner

Related Stories

Related Stories