"தமிழ்நாட்டு மக்களின் நலனை மட்டுமே முன்வைத்து முதலமைச்சரின் தலைமையில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் திராவிட மாடல் ஆட்சியால், தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருவதால் அதை தாங்கி கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சலில் கூறிய பொய்களையே திரும்பத் திரும்ப எத்தனை முறை கூறினாலும் எடுபடாது பழனிசாமி” என அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
அறிக்கைகளிலும் எக்ஸ் தளத்திலும் பேட்டிகளிலும் சட்டமன்றத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள் கொந்தளித்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் புஸ்வானமான நிலையில், இப்போது யூடியூப்பிலும் வந்து அதே புலம்பலை... அதே பொய்களைக் கடைப்பரப்ப ஆரம்பித்துவிட்டார்.
ஃபெஞ்சல் புயல், சாத்தனூர் அணைத் திறப்பு, பாலம் உடைப்பு, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சிபிஐ விசாரணை உத்தரவு என அவருடைய சமீபத்திய பொய்களை எல்லாம் உடனுக்குடன் ஆதாரத்துடன் திமுக அரசு தவிடுபொடியாக்கியும்கூட, கொஞ்சமும் கூச்சப்படாமல் அதே பொய்களை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
“ஆபத்தின் விளிம்பில் தத்தளிக்கும் போது அனைத்துக் கத்திகளும் உடைக்கிறதே என்னடா இது” என இம்சை அரசன் 23-ஆம் புலிகேசியின் கேரக்டரைப் போல எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சமீபத்திய பேட்டிகளும் அறிக்கைகளும், உண்மைகளால் தோலுரித்துத் தொங்கிய பிறகும், யூடியூப் மூலம் அதே ஆலாபனையைச் செய்கிறார். அதிலும் ஏற்கெனவே அரைத்த மாவை மொத்தமாகச் சேர்த்து அரைத்திருக்கிறார்.
’ஸ்டாலின்தான் வாராரு விடியல் தரப் போறாரு’ பாடலை யாரோ ஒருவர் கிண்டல் அடித்ததாகச் சொல்கிறார் பழனிசாமி. “வெற்றி நடைபோட்ட தமிழகமே” என 2021 தேர்தல் பிரச்சாரத்தில் பாடிய பழனிசாமியைத்தான் மக்கள் வீட்டுக்கு அனுப்பினார்கள். விடியல் தருவதாகச் சொன்ன ஸ்டாலின் அவர்களைத்தான் ஆட்சியில் அமர்த்தினார்கள். அந்தச் சிறப்பான மூன்று ஆண்டு ஆட்சிக்கு நற்சான்றிதழ்தான் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த 40-க்கு நாற்பது வெற்றி.
* “டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றினோம்” எனச் சொல்லி வந்த அதிமுகவின் பொய்யை நாடாளுமன்றத்தில் கேள்வி பதில் மூலம் அம்பலப்படுத்தினோம்.
* நாடாளுமன்றத்தில் சுரங்கம் மற்றும் கனிமத் திருத்த மசோதாவிற்கு திமுக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனச் சட்டப்பேரவையில் பழனிசாமி சொன்ன பொய்யை அதிமுக எம்.பி. தம்பிதுரை அந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த விஷயத்தால் வெளிப்படுத்தினோம்.
* அதிமுக ஆட்சியில் உடைந்த 8 பாலங்கள், கட்டங்களைப் பட்டியல் போட்டோம்.
* சாத்தனூர் அணை திறப்பதற்கு முன்பே 5 முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டதற்கான ஆதாரத்தைக் காட்டினோம்.
இப்படித் தொடர்ந்து அவமானப்பட்ட பிறகும் கூட பழனிசாமிக்கு ஏன் புரியவில்லை. சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் படித்த அறிவாளிக்கு எப்படிப் புரியும்?
முதலமைச்சர் அவர்களும் அமைச்சர் பெருமக்களும் பழனிசாமி அவர்கள் வைத்த பொய்க் குற்றச்சாட்டுகளை எத்தனையோ முறை மறுத்து அறிக்கை விட்டாலும், அதை எல்லாம் படிக்கவும் மாட்டேன், செய்திகளில் பார்க்கவும் மாட்டேன் எனச் செக்குமாடு போல அதே பொய்களை மீண்டும் மீண்டும் உளறிக்கொண்டிருக்கிறார் பழனிசாமி.
இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட மிக அதிகமான மழை பொழிந்து ஃபெஞ்சல் புயல் சேதத்தை ஏற்படுத்தினாலும், மாண்புமிகு முதலமைச்சரின் உத்தரவின் பேரில் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரிய அளவில் ஏற்பட இருந்த உயிர்ச் சேதங்கள் தடுக்கப்பட்டன. வரலாறு காணாத மழைப்பொழிவு காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பெரும் சேதம் ஏற்படுவதைத் தடுக்கவே சாத்தனூர் அணை திறக்கப்பட்டது. அதுவும் ஐந்து முறை முறையான எச்சரிக்கை அந்தப் பகுதி மக்களுக்குக் கொடுத்து அவர்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்ட பின்புதான் அணை திறக்கப்பட்டது.
அதுவும் அணையின் நீர்த்திறப்பானது எடுத்தெடுப்பில் அதிகமாக திறக்கப்படவில்லை. 32000 கன அடி, 63000 கன அடி , 106000, 130000 கன அடி, 168000 கன அடி என படிப்படியாகத்தான் அதிகரித்துத் திறக்கப்பட்டது. அதன் காரணமாகவே உயிரிழப்புகள் நடக்காமல் தடுக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி எல்லாம் ஏற்கெனவே மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் ஆதாரத்தோடு தெரிவித்தும் அதைப் படிக்காத தற்குறி பழனிசாமி மீண்டும் மீண்டும் பொய் சொல்லிவருகிறார்.
அதிமுக ஆட்சியில் 2015-இல் எந்த முன் அறிவிப்புமின்றி திடுதிப்பென திறந்ததால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் 289 பேர் பலியானார்கள். 23.25 லட்சம் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த இரத்தக்கறையை மறக்கடிக்கத் துடிக்கும் பழனிசாமி அண்டப் புளுகை அள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறார்.
அடுத்ததாக, அதிமுக ஆட்சியில் எந்தப் பாலங்களும் உடைந்து சேதாரம் ஆகவில்லை என்ற பொய்யை பழனிசாமி அடுக்குகிறார். அவருக்கு ஏற்கெனவே மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் அதிமுக ஆட்சியில் உடைந்து விழுந்த 7 பாலங்களின் கதைகளை எடுத்து கூறி இருந்தார். அதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் கண்டதையும் உளறி வருகிறார் பழனிசாமி.
ஃபெஞ்சல் புயலால் பெய்த கனமழைக்குச் சென்னையில் அதிகளவு நீர் தேங்காமல் மழைநின்ற உடனே வெள்ளநீர் வடிந்து சென்னை இயல்பு நிலைக்குத் திரும்பியது. அதை பொறுத்துக்கொள்ள முடியாத பழனிசாமி சென்னையில் மழையே பெய்யவில்லை என பேசிக்கொண்டு இருக்கிறார். கன மழை பெய்யாத சென்னைக்கு, பிறகு எதற்காக அதிமுக நிர்வாகிகளே மக்களுக்கு உதவி செய்யுங்கள் என அறிக்கை வெளியிட்டு விளம்பரம் தேடினீர்கள் பொய்ச்சாமி பழனிசாமி?
தமிழ்நாட்டு மக்களின் நலனை மட்டுமே முன்வைத்து முதலமைச்சரின் தலைமையில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் திராவிட மாடல் ஆட்சியால், தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருவதால் அதை தாங்கி கொள்ளமுடியாமல் வயிற்றெரிச்சலில் கூறிய பொய்களையே திரும்பத் திரும்ப எத்தனை முறை கூறினாலும் எடுபடாது பழனிசாமி. தமிழ்நாட்டு மக்கள் மனதில் பொய்யர்களால் என்றைக்குமே இடம் பிடிக்க முடியாது, நீங்கள் ஆயிரம் பொய்களைக் கூறினாலும் திராவிட மாடல் நல்லாட்சி மீது சிறு கீறல் கூட விழவைக்க முடியாது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.