ஃபெஞ்சல் புயலின் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த சுனமழையின் காரணமாக தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்கு ஒரு வட்டாரத்திற்கு 4 நடமாடும் மருத்துவக் குழுக்கள் வீதம் 13 வட்டாரங்களில் 52 மருத்துவக் குழுக்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முகாமிட்டு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த மூன்று நாட்களாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் புயல் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் முகாமிட்டு மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. புயலால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் 02.12.2024 அன்று 104 இடங்களில் முகாமிட்டு 6078 நபர்களுக்கும், 03.12.2024 அன்று 116 இடங்களில் முகாமிட்டு 8464 நபர்களுக்கும் பரிசோதனை செய்து சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
இன்று 04.12.2024 முதல் திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்து தலா 04 மருத்துவக் குழுக்கள் வரவழைக்கப்பட்டு மொத்தம் 60 நடமாடும் மருத்துவக் குழுக்கள் சேர்ந்து 146 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் மஜ்தூர் களப் பணியாளர்களை ஈடுபடுத்தி கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் மற்றும் புகைமருந்து அடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், பொது மக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் தொடர்ந்து குளோரினேசன் செய்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒரு வட்டாரத்திற்கு 03 குழுக்கள் அமைத்து குடிநீரில் குளோரின் அளவைப் பரிசோதித்து பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக குடிநீரால் பரவும் நோய்கள் தடுக்கப்பட்டு வருகிறது.
தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும் கிருமிநீக்கப் பணிகளுக்காகவும் பிளீச்சிங் பவுடர் 70.76 டன்கள், குளோரின் 1816 லிட்டர், பினாயில் 4230 லிட்டர் இருப்பில் உள்ளது. மேலும், 25 ஸ்பிரேயர்கள் மற்றும் 328 புகைமருந்து அடிக்கும் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பொது சுகாதாரத் துறையினரின் தொடர் கண்காணிப்பின் மூலமாக தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.