நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ.25 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த கூட்டத்தொடரில், வங்கிகள் திருத்த சட்ட மசோதா தொடர்பாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
அப்போது அவர், எனக்கு இந்தி தெரியாமல் இல்லை, ஆனால் தமிழ்நாட்டில் இந்தி பிடிக்கவிடாமல் செய்தனர் என வேண்டும் என்றே குற்றச்சாட்டை சுமத்தினார்.
இதையடுத்து நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டுக்கு நாடாளுன்ற தி.மு.க குழுத் தலைவர் கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். அதில், “தமிழ்நாட்டில் யாரையும் எந்த மொழியையும் கற்க விடாமல் தடுத்தது கிடையாது, இந்தி திணிப்பை மட்டுமே எதிர்க்கிறோம்.
ஒன்றிய நிதியமைச்சர் தமிழ்நாட்டில் மாணவராக இருந்தபோது பள்ளிக்கூடங்களில் கற்றவர்கள் ஏராளம் என்று நினைக்கிறேன். எனவே, யாரும் இந்தி கற்க முடியாது என்ற நிலை இதுவரை இருந்ததில்லை.” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று தி.மு.க மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, “தமிழ்நாட்டில் எந்த மொழியையும் கற்றுக் கொள்ள திமுக தடையாக இருந்தது இல்லை. மொழி ஆதிக்கம் செலுத்துவதை தான் எதிர்த்து வருகிறோம்.” என பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறது. ஆனால் பா.ஜ.கவினர் இந்தி மொழியையே எதிர்ப்பதுபோல் தொடர்ந்து பேசிவருகின்றனர். இதன் வெளிப்பாடாகத்தான் நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமனின் பேச்சு இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.