வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலினால் நேற்று முழுவதும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வந்தது. இதனால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கிய நிலையில் பொதுபோக்குவரத்துக்கு சிறிது பாதிப்பு ஏற்பட்டது.
எனினும் மாநகராட்சி பணியாளர்களின் கடின உழைப்பால் மழைநீர் தேங்கிய இடங்களில் நீர் அப்புறப்படுத்தப்பட்டு ஒரே நாளில் சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியது. இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்," சென்னையில் வழக்கமாக மழைநீர் தேங்கும் இடங்களில் இந்த முறை தண்ணீர் தேங்கவில்லை. மழை பெய்யும் போது சில இடங்களில் மழைநீர் தேங்கினாலும், மழை நின்றதும் வடிந்து விட்டது. தற்போது புயல் காலத்திலும் தலைநகர் சென்னை நிம்மதியாக இருக்கிறது.
எந்த பிரச்சனை என்றாலும் நான் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் களத்தில் இறங்கி மக்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறார்கள். “ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை பாதிப்புகளை அரசு திறமையோடு கையாண்டு வருகிறது. எனவே எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டை நாங்கள் மதிப்பதில்லை
ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு மற்றும் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள விழுப்புரம், கடலூர் மாவட்டத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் செல்ல இருக்கிறார். மேலும் அம்மாவட்டங்களில் அமைச்சர்கள் அதிகாரிகள் முகாமிட்டு, மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்" என்று கூறினார்.