வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபென்ஜால் புயலாக நேற்று உருவானது. இந்தப் புயல் இன்று இரவு அல்லது நாளை காலை புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று காலையில் இருந்தே சென்னையில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை ரிப்பன் மாளிகையில் செயல்பட்டு வரும் கட்டுப்பாடு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட பிறகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,”சென்னையில் காலை 7 மணி முதல் தற்போது வரை சராசரியாக 110 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் போர்கால அடிப்படையில் 1700 மழைநீர் அகற்றும் மோட்டார் பம்புகள் வைத்து மழை நீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதேபோல், மழையால் விழுந்த 27 மரங்களும் உடனடியாக அகற்றப்பட்டது. இதற்காக 500 இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 21 சுரங்கப்பாதையில் ஆறு சுரங்கப்பாதை தவிர அனைத்தும் சீரான முறையில் இயங்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட 6 சுரங்க பாதைகளிலும் தண்ணீரை வெளியேற்றும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
பொது மக்களுக்கான உணவு வழங்குவதற்கு 120 சமையல் கூடங்கள் தயார் நிலையில் உள்ளது. இது வரை 2,32,200 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் உத்தரவின் படி சென்னையில் உள்ள 386 அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது..
தாழ்வான பகுதிகளிலிருந்து பொதுமக்களை மீட்கும் வசதிக்காக 103 படகுகள் தயார் நிலையில் உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி பொறியாளர்கள் பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 22,000 மழை வெள்ள மீட்பு பணிக்கு ஈடுபட்டு வருகின்றனர்.
புயல் இன்று இரவு கரையை கடக்கும் நிலையில் எந்தவிதமான சூழலையும் எதிர்கொள்ளவும் அரசு தயார் நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். இயற்கை சீற்றங்களை கடந்த காலங்களில் ஒற்றுமையுடன் எதிர்க்கொண்டு மீண்டு வந்துள்ளோம். அதுபோல் இப்போதும் ஒற்றுமையுடன் செயல்பட்டு மீண்டு வருவோம். இந்த இயற்கை பேரிடரை வென்றிடுவோம்” என தெரிவித்துள்ளார்.