நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ.25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் பரந்தூர் மற்றும் ஓசூரில் பசுமை விமான நிலையம் அமைக்க நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களவை தி.மு.க. எம்.பி. கிரிராஜன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு சிவில் விமான போக்குவரத்து இணை மந்திரி முரளிதர் மொகல் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் அளித்துள்ளார். அதில்,”காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான தள அனுமதியைப் பெற சிவில் விமான போக்குவரத்துத்துறையிடம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (டிட்கோ) விண்ணப்பித்து இருந்தது. இதன்பேரில் கடந்த ஆகஸ்டு மாதம் தள அனுமதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொள்கை ஒப்புதலுக்கான விண்ணப்பம் டிட்கோவிடம் இருந்து பெறப்பட்டு இருக்கிறது.
ஓசூரில் பசுமை விமான நிலையத்துக்காக முன்மொழியப்பட்ட 4 தளங்களை விமானநிலைய ஆணைய அதிகாரிகள் மற்றும் டிட்கோ அதிகாரிகளைக் கொண்ட குழு கடந்த செப்டம்பர் மாதம் ஆய்வு செய்தது. அந்த பகுதியில் விமானப்படை மையம் இருப்பதை கருத்தில்கொண்டு பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளுடன் கலந்து பேசப்பட்டது. பாதுகாப்பு அமைச்சகம் தள அனுமதியை வழங்க நிபந்தனைகளுடன் தடையில்லா சான்று வழங்கி இருக்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.